×
Tuesday 8th of October 2024

Nuga Best Products Wholesale

மார்க்கண்டேய புராணம் – ம்ருத்யுஞ்ஜயன் – எமதர்மன்


Mrityunjay Name Meaning in Tamil

நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெற விரும்பி, சிவபெருமானை வழிபடுகிறோம். சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு.

ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். ம்ருத்யுஞ்ஜயன் என்றால், மரணமடையும் உடலிலிருந்து உயிர்களை எடுத்துச் செல்லும் கடமையைச் செய்யும் எமனை வென்றவன் என்பது பொருள். சிவபெருமானை வழிபட்டு மரணத்தையே வென்ற மார்க்கண்டேயனின் கதை பலருக்குத் தெரியும்.

Markandeya Purana in Tamil

தன் பக்தனின் ஆயுளை அதிகரிக்கச் செய்ய, அவன் மீது பாசக் கயிற்றை வீசிய எமனைக் காலால் எட்டி உதைத்து, தன் பக்தனான மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று சிவபெருமான் வரம் தந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

பதினாறே வயது வரையில்தான் உயிரோடு இருப்பான் என்ற நிபந்தனை இருந்தபோதிலும், ஒழுக்கமான அந்த ஒரு புதல்வன் போதும் என அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றார் மிருகண்டு மகரிஷி. அந்தத் தவப்புதல்வன்தான் மார்க்கண்டேயன்.

அவன் பரமசிவனின் பக்தன். அவனுக்கு 16 வயது முடியும்போது, அவன் ஆயுள் முடிவடைந்தது. இது அவனுக்கும் தெரியும்; காலதேவனான எமதர்மனுக்கும் தெரியும். மார்க்கண்டேயன் 16 வயது வரையில்தான் வாழ்வான் என்று அவனது தந்தைக்கும், அவருக்கு வரம் தந்த பரமசிவனுக்கும் தெரியும்.

காலம் தவறாமல் ஜீவன்களை மனிதக் கூட்டிலிருந்து கவரும் பணியைச் செய்யும் எமதர்மன், மார்க்கண்டேயன் உயிரையும் கவர வந்தான். அப்போது, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சிவலிங்கத்தை திரிகரண சுத்தியுடன் பூஜித்துக் கொண்டிருந்தான் மார்க்கண்டேயன்.

குறிப்பிட்ட நொடியில் பாசக் கயிற்றை வீசினான் எமன். சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான் மார்க்கண்டேயன். எமன் வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம்.

  • காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலலால் உதைக்கலாமா?
  • தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா?
  • அப்படியானால், ஆயுள் முடியும்போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்துகொண்டு, எமனிடமிருந்து, தப்பிவிடமாட்டார்களா?

இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும்போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.

Yama God of Death

எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு. சிந்தனையின் இருப்பிடம் மூளை என்றால், ஆசாபாச உணர்ச்சிகளின் இருப்பிடம் இதயம்.

எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்களென்றால், இறைவனின் திருவடிகள் தன் மார்பிலேயே பதிய வேண்டுமென்று தவமிருந்தான் எமதர்மன். உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன்.

அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான். அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான். பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது. எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப்படிதான் நடந்தது. மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன் தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது வீசத் துணிந்திருக்கமாட்டான்.

மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, அவன் தவத்தைப் பூர்த்தி செய்தான் இறைவன். ஆனால், அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன் செய்த பாக்யம். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது இருக்க அருள் செய்து, அவனது பக்திக்கும் ஒரு பரிசு தந்தார் சிவபெருமான்.

Lord Shiva Kicks Yama

ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றில் மற்றொரு ரகசியத் தத்துவமும் உண்டு. மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் தீர்க்காயுள் தந்த புண்ணிய க்ஷேத்திரம், தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் அல்லது திருக்கடவூர் ஆகும்.

அன்னை அபிராமி அருள்பாலிக்கும் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையையும், அம்பிகையின் அருளையும் பற்றி அபிராமபட்டரின் அந்தாதித் தமிழ் இன்றும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்தல புராணத்தின்படி, காலதேவனை சிவபெருமான் காலால் உதைத்த சம்பவத்துக்கு ஓர் அற்புதமான காரணம் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் உமையொருபாகன் அல்லவா! அவன் பார்வதியைப் பாதி உடலாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரன். அவனது திருமேனியில் இடதுபுறம் அன்னை உமாதேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும் தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனைத் தனது இடது காலால்தான் உதைத்தான் ஈசன், இடப்பாகம் சக்தியினுடையது. எனவே, இது சிவனின் திருவடியல்ல; சக்தி பார்வதியின் திருவடிதான்.

கடமையைச் செய்த காலதேவனை சிவபெருமான் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே எமதர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியமுள்ளவனாகச் செய்தது. அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தான். இது திருக்கடவூர் ஸ்தல புராணக் கதை.

கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன். அவன் வெறும் மரண தேவன் அல்ல; உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன்.

சிவசக்தியின் சங்கல்பத்தின்படி, அவன் உயிர்களைக் கவருகிறான். அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள் இருந்தால் ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப்புராணக் கதை சொல்லும் தத்துவம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை