- August 14, 2024
உள்ளடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், என்பது ஒரு வருடாந்திர தெய்வீகத் திருமணத் திருவிழாவாகும். இது சித்திரை திருமணத் திருவிழா என்றும் போற்றப்படுகிறது. இந்த திருவிழா, தாய் சக்தி தேவியின் ஒரு வடிவமான மீனாட்சி மற்றும் சிவபெருமானின் ஒரு வடிவமான சுந்தரேஸ்வரருடன் திருமண வைபவம் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களின் போது, விஷ்ணுவின் ஒரு வடிவமான அழகரும், கள்ளழகர் கோவில் மதுரையில் கௌரவிக்கப்படுகிறார், மேலும், அவர் மீனாட்சியின் மூத்த சகோதரராகக் கருதப்படுகிறார்.
பண்டைய இதிகாசத்தின்படி, தங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், மன்னன் மலையத்வஜ பாண்டியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனமாலா ஆகியோர் யாகம் நடத்தியபோது, மீனாட்சி சிறு குழந்தையாக யாகசாலையில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, குழந்தை மீனாட்சி, சக்தி தேவியின் அவதாரம் என்றும், சிவபெருமானே சரியான தருணத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள வருவார் என்றும் வானத்திலிருந்து ஒரு தெய்வீகக்குரல், அரச தம்பதியினருக்குத் தெரிவித்தது. மீனாட்சி அனைத்து வகையான கலைகளிலும் பயிற்சி பெற்றார், மேலும் அவரது தந்தைக்குப் பிறகு பாண்டிய நாட்டின் ராணியாக முடிசூட்டப்பட்டார். தனது திறமையால், அவர் பூமியில் உள்ள மன்னர்களைத் தோற்கடித்தார், இறுதியாக சிவபெருமானை வெல்வதற்காக கைலாய மலைக்குச் சென்றார். மீனாட்சி போர்க்களத்தில் சிவபெருமானை நேருக்கு நேர் சந்தித்தபோது, அவர் மீது காதல் கொண்டார், மேலும் அவர் சக்தியின் அவதாரம் என்பதையும் அறிந்து கொண்டார்.
சிவபெருமான் அன்னை மீனாட்சியிடம் தக்க சமயத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள மதுரைக்கு வருவதாக உறுதியளித்தார். உரியநேரத்தில் சிவபெருமான், தேவர்கள், பூதகணங்கள், மற்றும் ரிஷிகளுடன் மதுரைக்கு வருகை புரிந்தார். சிவபெருமான் அன்னை மீனாட்சியை மணமுடித்து பாண்டிய நாட்டைத், தனது மனைவி மீனாட்சியுடன் சுந்தர பாண்டியன் என்ற பெயரில் நல்ல முறையில் ஆட்சி செய்தார். இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் அனைத்து காலங்களிலும் சீராக மழை பெய்தது, பயிர்கள் நன்கு செழித்து விளைந்தது, மற்றும் மதுரை மாநகரம், தெய்வீக தம்பதியினரால் சிறப்பாக ஆளப்பட்டதால், மதுரை மக்கள் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.
மீனாட்சி கல்யாணம் என்பது, மதுரையில், அன்னை மீனாட்சி மற்றும் சிவனின் (சுந்தரேஸ்வரர்) காணக்கிடைக்காத ஒரு அற்புதத் திருக்கல்யாண கொண்டாட்டமாகும். மீனாட்சி திருக்கல்யாணத்தன்று, பக்தர்கள் அதிகாலையிலேயே எழுந்து தெய்வீக அன்னையை தரிசனம் செய்ய, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம்.
அப்பொன்னாளில், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வழிபட்டு பூஜிக்க வேண்டும். பக்தர்கள் பழங்கள், பூக்கள், மலர் மாலைகள், தேங்காய் மற்றும் பிற பூஜை பொருட்களைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அந்நாளில் அலங்கரிக்கப்படும். மீனாட்சி கல்யாண நாளில், மதுரையில் உள்ள அனைத்து மக்களும், ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் காணலாம்.
அன்னை மீனாட்சியை மகிமைப்படுத்தும் வகையில், அர்ச்சகர்கள் தெய்வீக மந்திரங்களை உச்சரித்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும், சுந்தரேஸ்வரர், அன்னை மீனாட்சி அம்மன் ஆகியோரின் உற்சவ சிலைகள், தெய்வீக வாகனங்களில் ஏற்றப்பட்டு, வீதிகளில் ஊர்வலம் வலம் வருவார்கள்.
நேற்றைய தினம் (19.01.2024), நான் வசித்து வரும் ஸ்ரீவத்சம் அபார்ட்மெண்ட் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில், மீனாட்சி திருக்கல்யாண வைபவம் சிறப்புடன் நடைப்பெற்றது!
அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி, நம் வாழ்வில் சகலவளங்களையும் பெறுவோம், அந்த புனித வைபவத்தைக் கண்டுகளிக்க, கோடானுக்கோடி கண்கள் இருந்தாலும் நமக்குப் போதாது!
“ஓம் அன்னை கல்யாணமீனாட்சி சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வராய நமஹ”
எழுதியவர்: ரா.ஹரிசங்கர்