×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

மரணதேவனோடு மல்லுக்கு நின்ற சிறுவன்


Nachiketa Story Upanishad in Tamil

நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)

சில கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சி பலரின் வாழ்க்கை பயணத்தை செம்மை படுத்த உதவி செய்கிறது. மனிதகுலத்துக்கே சவாலாக அமைந்த ஒரு கேள்விக்கான பதிலைத் தேடி அலைந்த ஒரு மாணாக்கன் எப்படி ஒரு பெரிய அரிய ரகசியத்தை வெளிக்கொணர முடிந்தது என்பதை விளக்கவே இந்தப் பதிவு.

‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த கேள்வியைக் கேட்டவன் நச்சிகேது என்கிற சிறுவன். இவன் கேட்ட இந்தக் கேள்வி நம் அனைவரின் சார்பாகவும் கேட்கப் பட்டுள்ளதாக நான் பார்க்கிறேன். அவன் தெரிந்து கொண்ட தகவல்கள் காலத்தால் அழியாமல் நமக்கெல்லாம் இன்றும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

நச்சிகேது கேட்டது சாதாரண கேள்வி அல்ல. நம் வாழ்க்கைப் பாதையின் முடிவு. எதை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான விடை. மிக ரகசியமானது. தேவ ரகசியம். நாம் அனைவரும் கேட்க நினைப்பது. தெரிந்துக்கொள்ள நினைப்பது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி, அந்த ஞானத்தை நாடி, தங்கள் வாழ்நாளை இழந்த ரிஷிகளும், முனிவர்களும், மன்னர்களும், சாமானியர்களும் ஏராளம். ஆனால் தெரிந்து கொண்டவர்களோ, இந்த ஞானத்தை உணர்ந்தவர்களோ ஒரு சிலரே.

நச்சிகேதுவின் இந்தத் தேடல் பற்றிய தகவல் ஒரு கதை வடிவில் வேத சாராம்ஸங்களில் ஒன்றான ‘கடோபநிஷத்’தில் விவரிக்கப்பட்டுள்ளது. நச்சிகேதுவின் தந்தை வாஜ்ரசவர் விஸ்வஜித் யாகம் செய்கிறார். விஸ்வஜித் யாகம் என்பது சொர்கத்தை அடைய நினைக்கும் நபர் செய்யும் கடினமான யாகம். மிகுந்த உயர்நிலை யாகம் என்று அந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த யாகத்தை செய்பவர் தான் வாழ் முழதும் சேர்த்த, தன்னிடத்தில் உள்ள அனைத்து பொருள்களையும், அனைத்து புண்ணியங்களையும் மற்றவர்களுக்கு முழுமையாக, சிரத்தையாக தானம் செய்யவேண்டும். யாகத்தை வேடிக்கை பார்க்க வந்த அனைவருக்கும் பொருள்கள் எல்லாம் தானமாக கிடைக்கும்.

இந்த யாகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் நச்சிகேதுவிற்கு ஒரு விஷயம் புலப்படவில்லை. தானும் தந்தையின் சொத்தால்லவா? தந்தை செய்யும் யாகத்தில் தன்னை யாருக்கு தானமாகத் தரபோகிறார்? என்று யோசிக்க ஆரம்பித்தான். தந்தையிடமே கேட்டான், ‘தந்தையே உங்களுக்குச் சொந்தமான எல்லா பொருள்களியும் தானமாகத் தந்து வருகிறீர்களே, என்னை யாருக்கு தானம் தரப்போகிறீர்கள்?’. சிறிய பாலகனான தன் மகனின் கேள்வியை தந்தை முதலில் பொருட்படுத்தவில்லை. ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மகனோ விடுவதாக இல்லை. தொடர்ந்து நச்சு செய்ய ஆரம்பித்தான். (இவன் செய்த நச்சைதான் பின்னர் இவன் பெயரிலேயே ‘நச்சு’ என்ற வார்த்தை உருவானாதோ?). மைந்தனின் தொல்லை தாங்க முடியாத தந்தை தன் கோவத்தை அடக்கமுடியாமல், ‘உன்னை எமனுக்கு தானம் தருகிறேன் போ’ என்று ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட்டார்.

குருகுலத்தில் பயின்ற நச்சிகேது இதையேத் தன் தந்தையின் விருப்பம் என்று கருதி, எமலோகம் செல்ல கிளம்பிவிட்டான். கடும் தவம் செய்து, தன்னையே தியாகம் செய்து எம பட்டணத்தை அடைந்தான். வாயில்காப்போன் இந்தச் சிறுவனை தடுத்து நிறுத்தினான். “எமதேவன் அனுமதியில்லாமல் உள்ளே வர இயலாது’’ என்று திரும்பிச் செல்லுமாறு பணித்தான். நடந்த கதையை சொல்லி, தன் தந்தை தன்னை எமனுக்குத் தானமாகத் தந்துவிட்டபடியால், தான் தற்போது எமனின் சொத்து. எனவே உள்ளே செல்ல யார் அனுமதியும் தேவை இல்லை’” என்று வாதித்தான் சிறுவன். அதிர்ந்துபோன காவலாளி சிறுவனை அழைத்துச்சென்று சிறுவனுக்கு உணவளித்தான். சிறுவனோ உணவை மறுத்து, தான் எமனிடம் சில விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டபின்தான் உணவு உண்ணமுடியும் என்று பிடிவாதம் பிடித்தான். இந்நிலை தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்த பின்னரே எமனை நேரில் காண முடிந்தது.

Nachiketa and Yama Conversation in Tamil

தான் அழைக்காமலே வந்த சிறுவனைக் கண்டு எமதேவனே ஆச்சர்யப்பட்டான். ஆனாலும் அந்தச் சிறுவனின் தைரியத்தையும், ஆர்வத்தையும் மெச்சிய எமன், அச்சிறுவன் வந்த காரணத்தை கேட்டான். ‘என் தந்தை என்னை உங்களுக்குத் தானமாகத் தந்துவிட்டார். நான் தற்போது உங்களுக்குச் சொந்தமாகிவிட்டேன். எனக்கு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை. என்னை முதலில் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றான் சிறுவன். அசந்து போன எமன், ‘சரி முதலில் ஏதாவது சாப்பிடு. மூன்று நாளாக எதையும் உண்ணாமல் இருக்கிறாய். சாப்பிட்டவுடன் நீ மீண்டும் உன் தந்தையிடம் அனுப்பிவிடுகிறேன்’ என்றார் எமன். ‘நான் சாப்பிட வேண்டுமானால் நீங்கள் எனக்கு மூன்று வரங்கள் தரவேண்டும்’ என்றான் நச்சிகேது. சிறுவனின் புத்திக் கூர்மையையும் அவனது விவேகத்தையும் கண்டு மெச்சிய எமன் மூன்று வரங்கள் தருவதாக வாக்களித்தான்.

வேதங்கள் ஒரு சிறுவனின் மன நிலையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது பாருங்கள்! ‘எமலோகத்தில் உணவு அருந்துபவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்று நான் சாஸ்த்திரங்களில் படித்திருக்கிறேன். அப்படி நான் மீண்டும் திரும்பி சென்றால் என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர் என் மேல் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும், கோபித்துக் கொள்ளக்கூடாது’ என்று தன் முதல் கோரிக்கைகையை வைத்தான் நச்சிகேது. மரணத்தில் இருந்து மீண்டு வரும் நபர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதில் அந்தக் காலத்திலேயே சிக்கல் இருந்திருக்கவேண்டும். கோவத்தில் இருக்கும் தந்தை மீண்டும் தன்னிடத்தில் அன்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது ஒரு சிறுவனின் சராசரி மனநிலை அல்லவா? “அப்படியே ஆகட்டும்” என்று எமன் முதல் வரம் தந்தான்.

‘வேதசாஸ்த்திரங்களில் சொல்லபட்டுள்ள கர்ம காண்டத்தில் யாகங்கள் செய்வதுபற்றிய சரியான விளக்கங்கள் இல்லை. எனக்கு இந்த விளக்கங்களை நீங்கள் சொல்லித் தரவேண்டும்’ என்று தனது இரண்டாவது கோரிக்கையை வைத்தான் சிறுவன். எமன் சொல்லித்தந்த அனைத்து விஷயங்களையும் நச்சிகேது பின்னர் மற்றவர்களுக்கு புரியும் வகையில் எழுதிவிட்டு சென்றுள்ளான். இவை இன்றும் நச்சிகேது யாக சாஸ்த்திரம் என்று அழைக்கப்படுகின்றன.

நச்சிகேதுவின் மூன்றாவது கேள்வி எமனுக்கே ஆட்டம் தந்தது. ‘சாஸ்திரங்களில் இறப்பைப் பற்றிய சரியாக விளக்கம் அளிக்கவில்லை. இறந்தபின் மறு பிறப்பு இல்லை என்பது ஒரு வாதம். மீண்டும் பிறவி என்பது இன்னொரு வாதம். எது சரி? மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது?’ வயதுக்கு மீறிய இந்த கேள்விக்கு எமதேவன் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை. ‘இது தேவ ரகசியம். இதைத் தெரிந்து கொள்ள உனக்கு வயதோ, மனப்பக்குவமோ, அறிவோ போதாது. ஆகவே என்னால் உன் கேள்விக்கு பதில் தர முடியாது. ஆனால் நீ கேட்ட இந்த கேள்வியை மெச்சி நான் உனக்கு உன் உலகில் உள்ள மிக உயர்ந்த ஆஸ்தியைத் தருகிறேன், ராஜ்யத்தைத் தருகிறேன். அதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இரு’ என்றான். எமதேவன் சிறுவனின் நம்பிக்கையையும், முனைப்பையும் இங்கே சோதனை செய்கிறான். சிறுவனோ ‘இது எனக்குத் தேவையில்லை’ என்று மறுத்து விட்டான். எமன் விடவில்லை. ‘சரி சொர்க்க லோகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் உனக்குப் பரிசாகத்தருகிறேன். இந்தக் கேள்வியை மறந்துவிடு’. சிறுவன் நிதர்சனமாக மறுத்தான். ‘போகட்டும், உன்னுடைய அனைத்து பிறப்புகளுக்கான புண்ணியங்களையும், உன் முன்னோர்களின் புண்ய பலன்களையும் இப்போதே உனக்குத் தானம் தருகிறேன். இந்தக் கேள்வியை மறந்துவிடு’ எமனின் எந்த ஆசை வார்த்தைகளும் சிறுவனை அசைக்க முடியவில்லை.

‘எமதேவரே, நீங்கள் எனக்குத் தருவதாகக் கூறும் அனைத்தும் காலத்தால் அழியக்கூடியவை. நிலையில்லாதவை. நீங்கள் தரும் இந்த அனைத்து சந்தோஷங்களையும் மரணம் அழித்துவிடும். இறப்பு என்பது என்ன என்று தெரிந்து கொண்டால்தான் நீங்கள் தருவதாகக் கூறும் அனைத்து செல்வங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும்’ என்று சிறுவன் வாதிட்டான்.

சிறுவனின் விவேகத்தையும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தையும், ஆர்வத்தையும், முனைப்பையும் கண்டு வியந்த எமன், தனக்கு ஒரு உண்மையான மாணவன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து, மனிதகுலத்துக்கே முதல் முறையாக இறப்பின் ரகசியத்தை சிறுவனுக்கு போதித்தான்.

‘நீ பார்க்கும், உணரும் உடல் நீயல்ல. உன் உடலில் உள்ள புலன்களை அடக்கி ஆளும் மனமும், மனதை ஆளும் புத்தியும், இவை அனைத்தையுமே ஆளும் ‘நான்’ என்கிற சுயநலமும் நீயல்ல. இவைகளுக்கெல்லாம் மகுடமாக, இவை அனைத்தையும் சாட்சியாக கவனித்து, ஒளிக்கெல்லாம் ஒளியாக, சதா கோடி சூரிய பிரகாசமாக, மனம் என்னும் கண்ணாடியுள் பிரதிபலித்து உன்னுள்ளே, நீயாகவே ஜொலித்துக் கொண்டிருக்கும் தெய்வீகம்தான் உண்மையான நீ. இதை ப்ரம்மன் என்றும் ஆத்மன் என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்துள்ள பயணி நீ. தேர்தான் உன் உடல். குதிரைகள் உன் புலன்கள். உன் மனம் கடிவாளம். தேரை இயக்குவது உன் புத்தி. பாதைகளை முடிவு செய்வது உன் கர்ம வினைகள். பாதையை மட்டுமே உன்னால் முடிவு செய்ய முடியும். விழித்திருக்கும் நிலையில் தேரையும், குதிரைகளையும், தேரோட்டியையும் அடையாளம் கண்டுகொள்கிறாய். இவை அனைத்தும் நீ என்று தவறாக நினைத்துக்கொள்கிறாய். உறக்க நிலையில் புதிய உலகை, புதிய தேரைக் காண்கிறாய். அங்கும் அவை அனைத்தும் நீதான் என்று எண்ணிக்கொள்கிறாய். ஆழ்ந்த உறக்க நிலையில் இந்த தேரும், உலகமும், பாதையும் மறைந்துவிடுகின்றனவே. ஆனாலும் மறைந்து போகிறது என்பதையும் ‘நீ’அல்லவா உணருகிறாய்? அப்படி இருக்கும்போது, இந்த உடல்-உள்ளம்-புத்தி சேர்ந்த கலவையேதான் நீ என்று எப்படி முடிவு செய்கிறாய்? இந்த சூட்சும உடலோ, ஸ்தூல உடலோ அல்லது காரண உடலோ நீ அல்ல என்பதை உணரும்போது சம்சார தொல்லைகளிலிருந்தும் துக்கங்களிலிருந்தும், உன்னிடத்திலிருந்தும் விடுதலை பெற்று மோட்சம் அடைகிறாய்.

இந்த உண்மையை உணருபவர்கள் தங்களை மட்டுமல்லாது இந்த உலகத்தையும், பிரம்மத்தையுமே உணரமுடியும். அதுமட்டுமல்ல இந்த ஆத்மனும், பரமாத்மனும் ஒன்றே என்கிற நிதர்சன உண்மையையும் உணரமுடியும். இதைத்தான் உபநிஷத்துக்கள் ‘பிரம்ம சத்யம், ஜகத் மித்ய, ஜீவோ பிரம்மைவ நாபரஹ’ என்று பிரகடனப்படுத்துகின்றன. பிரம்மன் ஒன்றே நிஜம். அதுவே உண்மை. அதைத் தவிர வேறு எதுவும் உண்மை இல்லை. நீ பார்க்கும் இந்த உலகம் ஒரு தோற்றம். உன் கற்பனை. உண்மை இல்லை. ஜீவன் பிரம்மனை உணர்ந்துவிட்டால் இந்த உண்மை ஒன்றே நிரந்தரம். காலத்தால் அழியாதது. இந்த நிலையை உணருபவர்களுக்கு மரணம் இல்லை. பிறப்பும் இல்லை. இதுவே நீ தெரிந்து கொள்ளவேண்டிய ரகசியம்’. என்று முடித்தான் எமன்.

இந்த இடத்தில் ‘தோற்றம்’ என்பதை விளக்கியே ஆகவேண்டும். மரத்திலான ஒரு மேசையைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் மேசையைப் பார்க்கும்போது அந்த மேசை உருவாவதற்குக் காரணமான மரத்தைக் காண முடிவதில்லை. இந்த மேசை உண்மையையிலேயே மரம்தான். ஆனால் நமக்கு வேறு உருவத்தில், வடிவத்தில் தெரிகிறது.

அதைப் போலவே ஒரு மண்ணினால் உருவான ஒரு குடத்தைக் காணும்போது அந்த மண் நமக்குத் தெரிவதில்லை. தங்கத்தினால் ஆன ஒரு ஆபரணத்தைப் பார்க்கும்போது தங்கம் தெரிவதில்லை. மரமோ, மண்ணோ, தங்கமோ இந்தப் பொருள்கள் இல்லாமலும் கூட தன்னிச்சையாக இருக்கமுடியும். ஆனால் அவைகளினால் உருவான பொருள்கள், அவைகள் உருவாவதற்குக் காரணமான ஆதிகாரணியிலிருந்து வேறுபட்டு தன்னிச்சையாக இருக்கமுடியாது. அதைப் போலத்தான் நம்மைச் சுற்றி நாம் காணும் இந்த உலகம், அதிலுள்ள ஒவ்வொரு பொருளும், அவைகளின் ஆதிகாரணிகளின் தோற்றமே. நிலையற்றவை. தொடர்ந்து மாற்றங்களை சந்திப்பவை. இங்கே உபநிஷத்துக்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்து, உறைந்து, மறைந்து இருக்கும் ஒரே ஆதிகாரணிதான் தெய்வீகம். பிரம்மன். அதுதான் நீ. நீ இல்லாவிட்டால் எதுவும் இல்லை. இது ஒன்றேதான் உண்மை. மற்றவையெல்லாம் (உடல், உள்ளம், எண்ணம் கலவை சேர்த்து) உன்னுள் பிரதிபலிக்கும் தோற்றமே!

இந்த உண்மையை, பிரம்மதீட்சையை உணர்ந்து கொண்டதனால் நச்சிகேது மரணத்திலிருந்து விடுதலையும் பெற்றான். ஆத்மனை உணர்ந்தவர்களுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்ற தெய்வீக ரகசியம் நச்சிகேதுவால் வெளிவந்தது. இந்த ரகசியத்தை உலகறியச் செய்த பெருமை நச்சிகேதுவையே சாரும். இது வேத காலத்தில் நடந்தது. அறிந்துகொள்ள முடியாத பல யுகங்களுக்கு முன்னர் நடந்தது. நச்சிகேது உணர்ந்த விஷயங்கள் கடோபநிஷத்தில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது. பல ரிஷிகளும் மஹான்களும் உபநிஷங்களுக்கு பல வகையில் விளக்கம் அளிக்க முயன்றாலும், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சரியான வகையில், நாமெல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் லகுவாக விளக்கம் அளித்த பெருமை ஸ்ரீ சங்கரரைச் சாரும். எட்டாக்கனியாக இருந்த இந்த ரகசியம் மனிதகுலத்துக்கு எட்டியது.

எமன் என்கிற மஹாகுருவுக்கு நச்சிகேது என்கிற அபூர்வ மாணாக்கன் கிடைத்தான். அவன் எடுத்த மிகப் பெரிய முயற்சியால் பிறப்பு-இறப்பு பற்றிய விளக்கம் நமக்கு கிடைத்தது. இது மிகப் பெரிய மனித சேவை. ஒரு நல்ல மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நச்சிகேது ஒரு சிறந்த உதாரணம். விவேகம் (எது தேவை என்கிற பகுத்தறிவு), வைராக்யம் (இலக்கைத் தவிர மற்றவைகளை ஒதிக்கித்தள்ளுவது), ஷட்சம்பத்தி என்று கருதப்படும் ஷம (எண்ணங்களை அடக்குதல்), தம (ஐம்புலங்களை அடக்குதல்), உபரதி (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்), திதிக்க்ஷை (பொறுமை), சமாதான ( ஆழ்ந்த முனைப்பு), சிரத்தை (இச்சைகளிலிருந்து விலகி நிற்கும் பயிற்சி) இவைகளோடு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவுடன் (முமுக்ஷத்துவம்) எவர் முயன்றாலும் (இதுதான் தவ நிலை) இந்த உண்மையான, மரணமே இல்லாத பேரானந்த நிலையை (சத்சித்ஆனந்த நிலை) உணர முடியும் என்பதை இந்தச் சிறுவன் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினான். இந்த நான்கு ஒழுக்கப்பண்புகளும் (விவேகம், வைராக்யம், ஷட்சம்பத்தி, முமுக்ஷத்துவம்) உண்மையை நாடும் ஒரு மாணவனுக்கான அடிப்படைத் தேவை என்பதையும் ஒரு வாழ்வியல் நெறியாக உணர்த்தியுள்ளான்.

வைராக்ய நிலை அடைவது சுலபமல்ல. இது பெரிய போராட்டம். தேரையும் தேரோட்டியையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து சரியான பாதையுள் இலக்கை நோக்கி பயணிப்பது. இது நம்மைப் பற்றிய ‘உள்நோக்கிய பயணம்’. இலக்கை அடையும் போது நமக்குள் மறைந்து இருக்கும் ஆத்மன், ஆதித்யனைப் (சூரியனை) போல நமக்குள் பிரகாசித்து பிரம்மனை உணர வழி கிடைக்கும். ‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் சமசஸ்த்பரஸ்தாத்’ என்று அழகாக வருணிக்கிறது உபநிஷத்.

இந்த ஞானத்தை உணருவதற்கு தடையாக இருப்பது நம்முடைய அறியாமை. மடமை. பிரம்மசூத்திரங்களுக்கு விளக்கம் எழுதியுள்ள ஸ்ரீ சங்கராச்சாரியார் அறியாமையை ஒரு கொடிய வியாதி என்று வருணிக்கிறார். நம் உண்மை ஸ்வரூபமான ஆத்மனை, பிரம்மனை, சத்சித்ஆனந்த சொரூபத்தை, இறைநிலையாய் உணருவதே நம் வாழ்க்கைப் பயணம். வெறும் உடல், மனம், புத்தி, சுயநலம் கொண்ட தேரையும் தேரோட்டியையும் உண்மையான ‘நாம்’ என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இந்தக் ‘கருவிகளால்’ ஏற்படும் துன்பங்கள், சோகங்கள், துயரங்கள் அனைத்தையும் ‘நம்முடையது’ என்று தவறாக கருதுகிறோம். அழியாத ஆத்மனை அழியக்கூடிய பொருள்களாக எண்ணுவது மூடத்தனம் என்று வாதிடுகிறார் ஸ்ரீ சங்கராச்சாரியார். அழியாத ஆத்மனுக்கு மரணமேது, ஜனனமேது? இந்த உண்மையை புரிந்து உணர்ந்துகொள்பவர்களால் மட்டுமே எப்போதும் அழிவில்லாத, எல்லையற்ற ஆனந்தமாக பேரானந்தமாக வாழமுடியும். இதுவே உண்மையான மோட்சம்.

இந்த உண்மையை புரிந்துகொள்வது, உணருவது சாமான்ய காரியம் அல்ல. இதற்கு ஒரு பிரம்மகுருவின் உதவி இல்லாமால் இது சாத்தியமில்லை என்கிறது வேத சாஸ்திரங்கள். நச்சிகேதுவுக்கு எமதேவன் என்கிற மஹாஞானி குருவாகக் கிடைத்தார். நச்சிகேது இந்த குருவை சாதாரணமாக எந்தக் கஷ்டமும் இல்லாமல் அடைய முடியவில்லை. கடும் தவத்தோடு தன்னையே தியாகம் செய்துக்கொள்ள வேண்டியிருந்தது. வேத சாஸ்திரங்கள் சொல்லும் அனைத்து ஒழுக்க நியதிகளையும் பின்பற்றி அதன் பலனாகவே, ‘ஆத்மன், பிரம்மன், பிறப்பு, இறப்பு’ பற்றிய ரகசியங்களைத் தெரிந்துகொள்ளமுடிந்தது.

மனிதகுலமே அறிந்திராத இந்த மாபெரும் ரகசியம் இந்த சிறுவன் வழியாக இந்த உலகிற்கு தெரிய வந்தது. தான் அறிந்த தேவ ரகஸ்யங்களை, நேரடி அனுபவங்களை, அவைகளின் பலங்களை மாத்திரம் இந்த மாணவன் வெளி உலகிற்கு சொல்லவில்லை. தன் குருவைப் பற்றிய பெருமைகளையும், அவர் அருளிய ‘ஆத்மபோதத் தத்துவங்களையும்’ நாமெல்லாம் அறிய வழிசெய்தான். இது ஒரு உண்மையான குரு-சிஷ்ய பாரம்பரியம். வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சம் போட்டு காட்டிய மஹத்துவ காவியம்.

Also, read


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி
  • August 6, 2024
குரு ராகவேந்திர சுப்ரபாதம் உள்ளடக்கங்கள்