- April 4, 2023
? தமிழகத்தில் மக்கள் குடியிருக்கும் வீடுகளின் முன்புறம் உள்ள வாசலை தலைவாசல் அல்லது முதல் வாயில் என்றும், வீடுகளின் பின்புறம் உள்ள வாசலை கடைவாசல் என்றும் குறிப்பிடுவது பழந்தமிழர் மரபாகும்.
? அந்தத் தலைவாசலின் அளவுகள், கடைவாசலின் (உயரம், அகலம், கனம் ஆகியவற்றின்) அளவுகளை விட அதிகமாகவே இருக்கும். குடியிருக்கும் வீடுகளின் தலைவாசல் வழியாக உட்புகும் தெய்வீகச் சக்திகள் அதிகமாகவும், கடைவாசல் வாயிலாக அச்சக்திகள் வெளியேறுவது மிகக் குறைவாக இருக்கவேண்டும் என்பதே அதன் உட்பொருளாகும்.
? பரமாத்மாவின் ஒரு சிறு துளியான ஆன்மா ஓர் உயிராக மனித உடலில் குடிகொண்டிருப்பதால் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு வீடும், அந்த வீட்டின் தலைவாசலும் இறைவன், இறைவி குடிகொண்டுள்ள திருக்கோவில்களுக்கும், திருக்கோபுரங்களின் திருவாயில்களுக்கும் ஒப்பாகும். எனவே வீடுகளின் தலைவாசலின் அமைப்பு முறைப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது சிற்ப சாத்திர விதிமுறையாகும்.
? அந்த சிற்ப சாஸ்திர விதிமுறைகளைப் பற்றி மயமதம் என்னும் நூல் அத்தியாயம் 30, ‘கதவுகள்’ என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளின்படியே தமிழக மரத் தச்சர்கள் தலைவாயிலை அமைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
? தலைவாசலின் அமைப்பில் இரண்டு நிலைக்கால்கள், மேல் படி, கீழ் படி, இறக்கை(கள்) அல்லது இலை(கள்) ஆகிய பாகங்கள் உள்ளடங்கும். நிலக்கால்களை ‘ஸ்தம்பம் யோகம்’ என்றும் மேல் படியை ‘பதங்கம்’ என்றும் கீழ் படியை ‘புவங்கம்’ என்றும் இறக்கை(கள்) அல்லது இலை(கள்) என்பது கதவு(கள்) என்றும் சிற்ப சாஸ்திரம் அத்தியாயம் 26 ‘வாயில் இலக்கணம்’ (காஸ்யபம்) என்றத் தலைப்பில் கூறுகிறது.
? ஸ்தம்பம் யோகத்தின் கனமும், பதங்கத்தின் கனமும், புவங்கத்தின் கனமும் ஒரே அளவிலேயே அமைப்பர். பதங்கத்தின் கனம் புவங்கத்தின் கனத்தைவிட சற்று அதிகமாகவும் அமைக்கப்படுவதும் உண்டு. கதவு(கள்) இருபுறமாகப் பாகங்களாகப் பிரிக்கப்படுவதுண்டு. தேக்கு, வேங்கை, பிள்ளைமருது, கருமருது ஆகிய மரங்களில் தலைவாசல் கதவுகளின் பாகங்களை அமைக்கப்படுவதுண்டு. எனினும் தேக்கு, வேங்கை, ஆகிய மரங்களில் அமைப்பது மிகவும் சிறப்பானது.
? ஸ்தம்பம் யோகங்களின் நிலைக்கால்களில்; குடம், நாகபந்தம், கருக்கனிகள் வட்டக்கருக்கனிகள் மற்றும் கொடிகள் போன்ற சின்னங்களை அமைப்பர், பதங்கத்தில் அட்டமங்கலச் சின்னங்களான இரண்டு; சாமரங்களுடனும் அல்லது யானைகளுடனும் கஜஇலக்குமி, ஸ்ரீவத்சம், சுவத்திகம், தீபம், பூர்ணகும்பம், இடபம், கண்ணாடி, சங்கு ஆகிய சின்னங்களை அமைப்பர். தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் பூர்ணகும்பம் அதிக அளவில் அமைக்கப்படுவதுண்டு.
பூர்ணகும்பத்தின் தத்துவம்: பூர்ண கும்பம் என்னும் பூர்ணகலசம் ஒரு மங்களகரமான சின்னமாகும். பூர்ண கும்பம் வணங்கி வழிபட வேண்டியது என ஸ்கந்த புராணம் கூறுகிறது. பூர்ண கும்பத்தில் அனைத்து சக்திகளும் நிறைந்துள்ளன என மச்சயபுராணம் கூறுகிறது. அதனை ஆதிசக்தியின் சின்னமாகக் கருதப்படுவதுண்டு. மேலும் அதனை மானுடர் உடலுடனும் தேவாலயத்ததுடனும் ஒப்பிட்டு அதன் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என சிவானந்த லஹரீ சூத்திரம்-36 விவரிக்கிறது. அதுவானது –
? உமையம்மையுடன் கூடியவரே! பக்தனாகிய என் உடலில், பக்தியாகிய தூயநூல் சுற்றப்பட்டதாகவும், சந்தோசம் என்னும் தீர்த்தம் நிறைந்ததாகவும், பிரகாசம் பொருந்திய ஆன்மாவாகிய உயிரும் மனமும் குடிகொண்டுள்ள உடலில் உம்முடைய திருவடிகளாகிய மாவிலைகளையும், ஞானமாகிய தேங்காயையும் வைத்துள்ளேன், சத்துவ குணத்தை வளர்க்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை நான் உச்சரிப்பேனாக! ஐயனே தேவாலயத்திற்கு ஒப்பான எனது உடலை பரிசுத்தமாக்குவாயாக! மனதிற்கு உகந்த மங்களத்தை அருள்வாயாக! என மனமார வேண்டிக்கொள்கிறேன் என்பதாகக் குறிப்பிடுகிறது.
? மேற்கண்ட சிறப்புக்களுடைய பூர்ண கும்பத்துடன் மரியாதை நிமித்தமாக ஒருவரை வரவேற்பது ஒரு சிறப்பான செயல் என்பதால் வீடுகளின் தலைவாசல் நிலைகளின் ‘பதங்கத்தில்;’ அதனை இடம்பெறச் செய்து உற்றார், உறவினர்களை வரவேற்பது பழந்தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களில் ஒன்றாகும்.
? தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் விசேட பூசைகள் செய்து நிலைக்கால் வைப்பதும், தமிழகத்தின் தாய்மார்கள் தலைவாசலை தூய்மைபடுத்தி நிலைக்கால்களில் மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு அதிகாலையிலும் அந்திசாயும் மாலை நேரங்களிலும், அகல்விளக்கு ஏற்றி வணங்கி வழிபடுவர்.
? இம்மரபு தமிழகத்தின் தாய்மார்களால் இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருவது பழந்தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களில் ஒன்று என தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், சிற்பக் கலாநிதி ஸ்தபதி வே. இராமன் (தமிழகத் தொல்லியல் துறை ஓய்வு) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Our Sincere Thanks to: