×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

ஸ்ரீ சமர்த்த ராமதாசர் வாழ்க்கை வரலாறு


உள்ளடக்கம்

Samarth Ramdas History in Tamil

சத்ரபதி சிவாஜி மஹராஜின் குருவும் ஹனுமானின் அம்சமுமான ஸ்ரீ சமர்த்த ராமதாசரின் வாழ்க்கை வரலாறு

மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அவதரித்த ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர். ஆன்மிகத் தலைவர் என்றாலும் அரசியலிலும் ஈடுபாடு காட்டினார். அன்றைய முகலாயர்களின் தாக்கத்தால் இந்து கலாசாரம் சீரழிவதைத் தடுப்பதற்கு அவர் அரசியலிலும் அக்கறை காட்டி வெற்றியும் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றி, மாருதியைப்
ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று ‘த்ரயோதசாக்ஷரி’யான ‘ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ என்ற மஹா மந்த்ரத்தை (பதிமூன்று கோடி ஜபித்து) உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.

மராட்டியத்தின் ஐம்பெரும் மகான்களில் ஒருவர் சமர்த்த ராமதாசர். மற்ற நால்வர்கள் ஞான தேவர், நாம தேவர், ஏகநாதர், துக்காராம் ஆவர். இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.

ஹனுமனின் அவதாரம்

சூர்யாஜி பந்த்

சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது குடும்பம், பல தலைமுறைகளாக சூரியன் மற்றும் ராமன் ஆகியோரை வணங்குவர். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, “உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், ஹனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள்,” என்று கூறி மறைந்தார். ஸ்ரீ சமர்த்த ராமதாசர் ராம நவமியில் (சைத்ர மாதத்தில்) 1530 (ஷாலிவஹன சகாப்தத்தில்), பொ.ச. 1608 இல், ஜமாதா கோத்ராவின் தேசஸ்தா ருக்வேதி பிராமண குடும்பத்தில் கோதாவரி ஆற்றின் கரையில், ஜல்னா மாவட்டம், அம்பாத் தாலுகா, ஜம்ப் கிராமத்தில் இரண்டாவது மகனாக பிறந்தார். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. இவரது பெற்றோர் சூர்யாஜி பந்த் மற்றும் ராணுபாய். முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி ஹனுமனின் அம்சமாக சிறு வாலுடன் இருந்தான். அவன் சற்று வளர்ந்ததும் வால் மறைந்தது. அவனுக்கு நாராயணன் என பெயரிட்டனர்.

பால்ய பருவம்

மனோதிடமான அவன் குறும்பு மிக்கவனாகவும் இருந்தான். மரம், சுவர் எதுவானாலும் ஏறி குதிப்பான். மகனின் செயல்களை எண்ணி ராணுபாய் கவலைப்பட்டாள். ராம்தாஸுக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார். அவர் கடவுளின் எண்ணங்களில் மூழ்கி, கடவுளை எவ்வாறு சந்திப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றார். சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார்.

திருமண நிகழ்வு

வேத பாராயணம் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். 12 வயதில், அவர் தனது திருமண விழாவின் போது மேடையில் நின்று கொண்டிருந்தபோது,
“சாவதான்” என்ற வார்த்தையை உள்ளடக்கிய திருமண மந்திரங்களை பிராமணர்கள் கோஷமிடுவதைக் கேட்டார். இந்த வார்த்தைக்கு “ஜாக்கிரதை” உள்ளிட்ட பிற அர்த்தங்களும் உள்ளன! அதைக் கேட்டவுடனேயே அதன் அர்த்தம் என்னவென்று அவருக்குத் தெரியும், அங்கிருந்து தப்பி ஓடி புனித நகரமான நாசிக் நகருக்குச் சென்றார், அங்கு அவர் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத்
தொடங்குகிறார்.

ஸ்ரீ ராம தரிசனம், சமர்த்த என்ற பட்டம், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி

இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் பஞ்சவடிக்கு
அருகில் 12 வருடம் தவம் செய்து ராம மந்திரத்தை மூன்றரை கோடி
முறை ஜபம் செய்து மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம
த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று
கோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம்
பெறுகிறார்.

“அன்பனே! நீ ஹனுமனின் அம்சம். இனி நீ “சமர்த்த ராமதாஸர்’ என நீ அழைக்கப்படுவாய். உன்னால் இந்த உலகத்தில் ஆகவேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்கின்றன. ஸனாதன தர்மத்திற்கு அந்நியர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தக்க நபர்கள் மூலம் தடுத்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டு” என்று உத்தரவிட்டார் ராமபிரான். நான் காட்டிற்குச் சென்றபோது கட்டிய வஸ்திரத்தையும் உனக்கு அளிக்கிறேன்,” என்றார். மந்திர உபதேசம், வஸ்திர தீட்சையை வழங்கினார். இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரும் தன் பங்கிற்கு ராமதாசருக்கு சரணாகதி மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார்.

சமர்த்தர் ஒரு சமயம் ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர ஹனுமத் ஸேவிதம் கூப்பின கரங்களுடன் கண்ணில் ஆனந்த பாஷ்பம் நீர் ததும்ப ராமாயண உபன்யாசத்தை ஒரு பிராமண வேடம் தரித்து அமர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். அஸோக வனத்தின் வர்ணனை சொல்லி கொண்டு இருந்தார் அது சமயம் அங்கு பூத்திருக்கும் பூக்கள் தும்பை பூவை போல வெள்ளை நிறத்தில் அனைத்து பூக்களும் பூத்து குலுங்கின என்று கூறினார். அது சமயம் ஹனுமான் கூறினார் ஸ்வாமின் தவறாக சொல்கிறீர் அங்கு பூத்த புஷ்பங்கள் எல்லாம் சிவப்பு நிறங்களாக இருந்தது நன்னா பார்த்து வாசியும் என்றார். சமர்த்தர் நீர் ராமாயணம் கேட்க தானே வந்தீர் அமைதியாக கேளும் குறுக்கே பேசாதீர் வால்மீகி
எழுதினதை தான் சொல்றேன் என்றார். உடனே ஹனுமான் கோபம் கொண்டு ஓய் நான் தான் ஹனுமான் அசோகவாடி நேரே போய் பார்த்தவன் என்ன சொல்றீர் என்றார்.

உடனே சமர்த்தர் யோசித்தார் இது நல்ல சமயம் இவரை வைத்து ராமர் தரிசனம் செய்துடலாம் என்று நினைத்து மேற்படி கூறினார். ஏன் சந்தேகம் ராமரையே கேட்கலாமே என்றார் உடனே ராமரிடம் ராமதாஸரை அழைத்து போய் சந்தேகத்தை
சொன்னார்கள். ராமரோ எல்லம் தெரிந்தும் ஹனுமானிடம் நான் அங்கு போகவில்லை சீதை தான் இருந்தாள் அவளை கேட்கலாம் என்றார். சீதைஆமாம் அங்கு பூத்த புஷ்பங்கள் எல்லாம் நீல நிறத்தில் தான் இருந்தது சிவப்பும் இல்லை வெளுப்பும் இல்லை என்றாள். அனுமானோ விடவில்லை தாயே அங்கு பூத்தது சிகப்பு தான் என்றார். ராமர் எதற்க்கும்வால்மீகி முனிவரையே கேட்கலாம் என்றார். அனைவரும் வால்மீகி ஆஸ்ரமம் சென்று சந்தேகத்தை கேட்டனர்.

வால்மீகி ரிஷி அனைவரையும் அன்புடன் வரவேற்றார். அனுமானிடம் சாந்தமாக எடுத்துரைத்தார். ஹனுமான் நீ அஸோகவாடியில் ராக்ஷ்சர்களை பார்த்ததும் கோபகனல் பறந்தது இவர்கள் அனவரையும் அழித்து இந்த வனத்தையும் அழிப்பேன் என்று ஆவேசமாக சொன்னாய் அது சமயம் உன் கண்கள் சிவந்து இருந்ததால் எல்லாம் சிவப்பாக இருந்தது என்றார். சரி மாதாவின் கண்களுக்கு ஏன் நீலநிறமாக தெரிந்தது என்றார் ஹனுமான் சீதை ராமரை பிரிந்த தாபத்தில் கண்கள் அழுது அழுது கண்ணீர் நீலம் பூத்து விட்டது ஆதலால் அவள் கண்ணுக்கும் நீலமாக தெரிந்தது. ஆக அங்கு பூத்த மலர்கள் யாவும் ராமனை போன்று வெளுத்த மனதாக வெள்ளை நிறத்தில் இருந்தது, என்று கூறினார். இது சமயம் சமர்த்தர் குரு ராமதாஸர் ராம சீதா சஹிதமாக ஹனுமானை ஸாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தார்.

“என் பக்தனான நீ எப்போது நினைத்தாலும், அப்போதெல்லாம் உன் முன் தோன்றுவேன்!” என்று வாக்களித்துவிட்டு மறைந்தார். ராமதாசர் தினமும் “ஜயரகுவீரா” என்று ஜபித்தபடியே சாலைகளில் செல்வார். பக்தர்கள் கொடுக்கும் தானியத்தை கல்லில் வைத்து அரைத்து மாவாக்கி நெருப்பு மூட்டி இரண்டு ரொட்டி சுட்டு சாப்பிடுவார்.

ஸ்ரீ தத்த தரிசனம்

ராம்தாஸுக்கு மஹுர்காட்டில் உள்ள ஸ்ரீ தத்தாத்ரேயாவிடம் இருந்து தரிசனம் கிடைத்தது.

ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ ராமனாக தரிசனம்

ஒரு நாள் பக்தர் குழுக்களுடன் பண்டரிபுரம் சென்றார். அங்கு ஸ்ரீ விட்டல் அவருக்கு ஸ்ரீ ராமராக தரிசனம் அளித்தது அவரை ஆட்கொண்டார்.

சமர்த்த ராமதாசர் நிறுவிய அனுமன் ஆலயங்கள்

கிராமத்தின் பெயர் இடம் ஆண்டு
ஷாஹாபூர் காரட் 1644
மசூர் காரட் 1645
சாபல் வீர் மாருதி கோவில் சதாரா 1648
சாபல் தாஸ் மாருதி கோவில் சதாரா 1648
ஷிங்கன்வாடி சதாரா 1649
அம்ப்ராஜ் மசூர் 1649
மஜ்கான் சதாரா 1649
பஹே சங்லி 1651
மனபடேல் கோலாப்பூர் 1651
பர்கான் பன்ஹாலா 1651
ஷிராலா 1654

ramdas swami worshiping lord hanuman

அவர் நிறுவிய ஹனுமான் கோவில்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளான ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தில் வாரணாசி, தமிழ்நாட்டின் தஞ்சை மற்றும் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்- காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார்.இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமர்த் பிரிவு

இந்தியாவின் விடுதலைக்காகவும் உண்மையான ஆன்மிகத்தைப் புதுப்பிப்பதற்காகவும் ஸ்ரீ சமர்த்த ராம தாசர் மத பிரிவைத் தொடங்கினார். முஸ்லீம் ஆட்சியாளர்களை கவிழ்க்க முயன்ற சிவாஜி மன்னரை அவர் ஆதரித்தார்.

அவர் பன்முகத்தன்மை வாய்ந்த, ஆன்மிக, உயர்ந்த தார்மீக தரங்களை நிர்ணயித்த மற்றும் சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அரசியல் ரீதியாக தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

துன்பங்களுக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புனிதர்கள் மனித குலத்திற்கு ஒரு அவமானம், புனிதர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று சமர்த்த ராமதாசர் கருதினார். இதன் மூலம் அவர் ஆன்மிகம், சமூகப் பணி மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கலந்தார். இறுதியில், அவரது இயக்கம் வெற்றிகரமாக இருந்தது.

சமர்த்த ராமதாசரின் பொறுமையின் பெருமை

இவா் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாா். பொறுமையின் சிகரமாகத்
திகழ்ந்தாா். இறை வாழ்வினை மேற்கொண்டாா். ஒருநாள் பிட்சைக்காகச் சென்றபோது, ஒரு விட்டிலிருந்த பெண்மணி சாணம் கொண்டு வீடு மெழுகிக் கொண்டிருந்தாள். ராமதாசா் பிட்சை கேட்டதும், ஏதோ கோபத்தில் கையிலிருந்த பழைய சாணித் துணியை அவா் மேல் எறிந்தாள். பெண்மணியின் செயலைப் பொருட்படுத்தாமல் அதை எடுத்துச் சென்று, அதை நன்கு சுத்தப்படுத்தி அதிலிருந்த கந்தல்களைக் கொண்டு விளக்குத் திாிகள் தயாா் செய்தாா். பின் அவற்றை இட்டு விளக்கேற்றி, அந்தப் பெண்மணியின் நலனுக்காக இறைவனிடம் மனம் உருகப்
பிராா்த்தித்தவா்.

சமர்த்த ராமதாசரின் சீடர்கள்

ஸ்ரீ சமர்த்த ராம தாசருக்கு பல சீடர்கள் இருந்தனர். கல்யாண் சுவாமி, உத்தவ் சுவாமி, வெண்ணா சுவாமி, அக்கா சுவாமி, பீம் சுவாமி ஷாஹாபுர்கர், திவாகர் சுவாமி, தின்கர் சுவாமி, அனந்த் புவா ராம்தாசி – மேதவடேகர், அனந்த் காவி, அனந்த் மன்னி, ஆச்சார்யா கோபால்தாஸ், தத்தராய் சுவாமி, வாசுதேவ் சுவாமி, பகவான் ஸ்ரீதர் சுவாமி,சேதுரம் பாவா.

சிவாஜி சந்திப்பு

சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது… ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில்.. சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

samarth ramdas and shivaji maharaj

காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம்
பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன. மறுநாளும்.. சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்கப் போன போது ஞானி வழக்கப்படி இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிக் கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன. மிருகங்களைப் பார்த்த சிவாஜிக்கு அவரை
நெருங்க மிகவும் தயக்கமாகத்தான் இருந்தது.

சிறு வயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர், சிவாஜி. அவரின் வருகையை அறிந்தால், வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆனால் அன்றைய தினம், விலங்குகள், ஓடி ஒளியாமல், குருவின் தியானத்திற்கும் பங்கம் விளைவிக்காமல் இருந்தது அரசனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவரின் தியானம் கலையும் வரை காத்திருந்து, அவர் அழைத்த பிறகு அருகில் சென்று நமஸ்கரித்துக் கொண்டார். தான் கொண்டு வந்திருந்த பண்டங்களை குருவுக்கு அர்ப்பணித்தார்.

‘குருவே, தங்களின் முன்னால், பகைமைப் பாராட்டும் விலங்குகள் கூட
சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருக்கின்றதுவே. அதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்.

‘அரசே, நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்’ என்று சொல்லி, அன்பின் வலிமையை விளக்கும் கதை ஒன்றை கூறலானார். சமர்த்த ராமதாசர், சிவ குடும்பத்தில் நிலவும் அன்பின் வல்லமையை விளக்கும் சுவாரஸ்யமான அம்சம் ஒன்றை விளக்கினார். கதையைக்கூறத் தொடங்கினார்.

‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தை உணர்த்திய சிவ பெருமான்

கயிலயம்பதியில் ஒரு நாள், பூத கணங்கள், சிவபெருமானின் முன்னிலையில் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தன. அவைகளின் தயக்கத்தைக் கண்ட முக்கண்ணனார், யாது வேண்டும் எனக் கேட்டார். ‘எங்களுக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. அதைப் பற்றி தான் உங்களிடம் கேட்கலாமா என்று யோசனை செய்கிறோம்’ என்றன.

‘சந்தேகத்தை மனதிலேயே வைத்துக்கொள்ளக்கூடாது. என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள். எனக்கு என்ன தெரியுமோ அதை நானும் சொல்கிறேன்’ என்றார்.

‘தங்களின் வாகனமோ நந்தி தேவர். ஆனால் தாங்கள், தங்களின் தேகத்தில் சரி பாதி இடமளித்து இருக்கும் உமையவளின் வாகனமோ சிம்ஹம் ஆகும். இவை இரண்டும் எந்நாளும் சண்டை போட்டுக் கொள்வதே இல்லை. தாங்கள் உடல் முழுவதிலும் அரவங்களை ஆபரணமாக அணிந்து இருப்பவர். தங்களின் புத்திரரான முருகக் கடவுளோ அரவத்திடம் பகைமை பாராட்டும் மயிலினை வாகனமாகக் கொண்டுள்ளார். அவைகளும் சிநேக பாவத்துடன் தான் இருக்கின்றன.

அது மட்டுமல்ல, அக்னிப் பிழம்பான தங்களின் மூன்றாவது நேத்திரத்தின் மேல் புறத்தில் கங்கா தேவியானவர் குடி கொண்டிருக்கிறார். அந்தத் தேவி ஒரு பொழுதும் அக்னியை தன்னுடைய பிரவாகத்தினால் அழித்ததில்லை. ஒன்றுக்கொன்று எதிர்மாறான குணங்களைக் கொண்டிருந்தாலும், எப்பொழுதும் கைலாயத்தில், சண்டையே இருப்பதில்லை. அன்பான, சுமுகமான சூழலே காணப்படுகிறது. அதன் ரகசியத்தை எங்களுக்கும் கூறுவீர்களா?’ என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தன.

மௌனமாகச் சிரித்தார், சர்வேஸ்வரன்.

‘இதில் ரகசியம் எதுவுமே இல்லை. கூறுகிறேன் கேளுங்கள். அன்பை மிஞ்சிய அமுது வேறெதுவும் இல்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் பகைமைப் பாராட்டக் கூடாது. எந்தவித பகைமையையும் அன்பால் சுலபமாக மாற்றி விடலாம். இதைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி ஒரு கூட்டமைப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? சந்தேகம் இல்லையே?’ என்று விளக்கம் கொடுத்தார். சிவகணங்கள் திருப்தி அடைந்து, வந்த வழியே சென்றன. அரசே புரிந்ததா? அன்பால் எதையும் ஆட்கொள்ள முடியும். உயிர்களிடத்தில் அன்பு காட்டு. எல்லா உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகள். அன்பே சிவம்.

சமர்த்த ராமதாசர் தன்னுடைய சீடனான சிவாஜிக்கு, அன்பின் வலிமையை விளக்கினார். ‘குருவே, எனக்கு நல்லதொரு உண்மையைப் புரிய வைத்தீர்கள். இனிமேல் எந்தவிதமான விலங்கினையும் நான் வேட்டையாட மாட்டேன். இது உறுதி’ என்று கூறி குருவினைப் பணிந்தார், சிவாஜி.

சத்ரபதி சிவாஜிக்குள் ஒரு தெளிவு பிறந்தது. மன மாற்றத்துடன் சதாராவுக்குத் திரும்பினார். அன்று முதல் வேட்டையாடும் பழக்கத்தையே அடியோடு விட்டு விட்டார்.

சிவாஜியின் தன்னடக்கம்

சத்திரபதி சிவாஜி தன் குரு ராமதாசருக்கு ஒருசமயம் நிறைய பொன்னும் மணியும் காணிக்கையாக அனுப்பி வைத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட ராமதாசர் பதிலுக்கு சிறிது மண், கொஞ்சம் கூழாங்கல், சிறிதளவு குதிரைச்சாணம் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார். இதனைக் கண்ட சிவாஜியின் தாயாருக்குக் கோபம் வந்துவிட்டது. “ஒரு ராஜகுமாரனுக்குப் பரிசளிக்கும் பொருள்களா இவை” என்று கேட்டு வெகுண்டார். அதற்கு மாவீரர் சிவாஜி அடக்கத்துடன் சொன்னார். “அம்மா, இவையாவும் குருநாதரின் தீர்க்க தரிசனம் மிக்க பொருள்கள். இந்த மண், அன்னிய நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தக் கற்கள் என்னுடைய நாட்டை வலிமை மிகுந்த கோட்டையால் காப்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தக் குதிரை சாணம் எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய ஒரு குதிரைப் படையை உடனடியாக அமைக்க வேண்டும்” என்பதைக் குறிக்கிறது.

ஸமர்த்த ராமதாசரைச் சந்தித்த பிறகு, அந்த ப்ரமிப்பிலிருந்து சிவாஜியால் விடுபடவே இயலவில்லை. அவரது அழகான திருவுருவம், அவர் பேசிய வார்த்தைகள், அவரது
மகிமை இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து, சிவாஜி மகாராஜ் சமர்த்த ராம்தாஸ் சுவாமியை தனது குருவாகக் கருதத் தொடங்கினார்.

துகாராம் மஹராஜின் மஹிமையை சிவாஜிக்கு உணர்த்திய சமர்த்த ராமதாசர்

சிறிது காலம் சென்றதும் வேறெங்கோ சென்றுவிட்டுப் படையோடு திரும்பிக் கொண்டிருந்த சிவாஜியின் கண்களில் தேஹு‌ என்ற ஊரின் பெயர் தென்பட்டது. சட்டென்று நின்றார் சிவாஜி. அன்றைக்கு குருநாதர் இந்த தேஹு கிராமத்தில் சென்று துகாராம் என்ற மஹாத்மாவைப் பார் என்றாரே. படைகள் முழுவதையும் ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, இரண்டு மந்திரிகளுடன் ஊருக்குள் சென்றார் சிவாஜி.

துகாராம் மஹராஜின் (வட நாட்டில், குறிப்பாக மஹாராஷ்ர மாநிலத்தில் மரியாதைக்குரியவர்களை மஹராஜ் என்றுதான் அழைப்பார்கள்) வீட்டைக் கண்டுபிடிப்பது வெகு சுலபமாய் இருந்தது. மந்திரிகளை தூரத்தில் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் துகாராமைப் பார்க்கச் சென்றார் சிவாஜி. பழைய வீடு, வீட்டில் எந்த வசதிகளும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. சின்னஞ்சிறிய குழந்தைகள் கந்தலாடையோடும், ஒட்டிய வயிறோடும் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.
துகாராம் திண்ணையில் அமர்ந்து தம்புராவை மீட்டிக்கொண்டு கீர்த்தனம்‌ செய்துகொண்டிருந்தார்.

ramdas swami and shivaji maharaj photo

அவரது இனிமையான குரல் சிவாஜியின் மனத்தை என்னவோ செய்தது. சிறிது தூரத்தில் நின்றுகொண்டு தன்னை மறந்து கீர்த்தனத்தில் லயிக்கலானார். சிறிதுநேரம் கழித்து சிவாஜியைக் கவனித்த துகாராம் தலையசைத்து அருகில் அழைத்தார்.

நீங்க சிவாஜி மஹாராஜா தானே?

ஆம் ஸ்வாமி

வாங்க, இங்க என் வீட்டு வாசலில் என்ன செய்யறீங்க? ஏதாவது வேணுமா?

சிவாஜி தான் ஸமர்த்த ராமதாசரைச் சந்தித்த விவரங்களைச் சொல்லி, அவர்தான் உம்மைப் பார்த்து வரச் சொன்னார். அவரால் எப்படி அவ்வளவு குறுகிய நேரத்தில் அவ்வளவு பேருக்கும் உணவு படைக்க முடிந்தது? அந்த ரகசியத்தை உம்மிடம் கேட்கச் சொன்னார் என்று சொன்னார்.

துகாராம் பெரிதாய்ச் சிரித்தார்.

அதிருக்கட்டும். இப்ப யுத்தம் முடிச்சுட்டுத்தானே வர?

ஆமாம் ஸ்வாமி.

படைகளெல்லாம்?

ஊருக்குள்ள படைகள் வந்தா கிராமத்து மக்களுக்குத் தொந்தரவாயிடும்னு கிராமத்து எல்லையில் நிறுத்தியிருக்கேன்.

சரி, எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம் என்றாரே பார்க்கவேண்டும்.

சிவாஜிக்குத் தலை சுற்றியது. காட்டுக்குள் ஒருவர் அதிசயம் செய்தார் என்றால், இவரும் அதையே சொல்கிறாரே.

ஸ்வாமி, சதுரங்க சைன்யமும் வந்திருக்கு. நான் தம்மைச் சந்திக்கத்தான்வந்தேன்.

எனக்குத் தெரியும்பா.. ராஜா வந்தா சதுரங்க சைன்யம் வரும்னு தெரியாதா? எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம். என்றவர், உள்ளே திரும்பி ஆவளீ.. என்றழைத்தார்.

அவரது மனைவி ஜீஜாபாய் இவர் கண்ணைக் காட்டியதும், ஆட்டா மாவு இருந்த ஒரு சிறிய சம்படத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.

படையெல்லாம் இங்க வந்தா, கிராமத்து ஜனங்களெல்லாம் பயப்படுவாங்க நாம அங்க போவோம் என்று சொல்லிக்கொண்டே ஊர் எல்லைக்கு வந்தார். சிவாஜி பேச்சற்றுப் போய், பின்தொடர்ந்தார்.

எல்லாப் படைவீரர்களையும், யானை, குதிரகளையும் வரிசையாய் நிற்க வைத்து கையை நீட்டச் சொல்லி, கோவில்களில் விபூதி ப்ரசாதம் கொடுப்பதுபோல், ஒரு சிட்டிகை ஆட்டா மாவு கொடுத்தார். அதை உண்டதும், கண்ணன் உண்ட ஒரு சோற்றுப் பருக்கையால் துர்வாசரின் வயிறு நிறைந்ததுபோல், அத்தனை பேரின் வயிறுகளும் நிரம்பின. படைவீரர்கள் எல்லாரும் வயிறு நிரம்பிடுச்சு. இன்னும் பத்து நாளைக்கு உணவே வேணாம்‌ மஹராஜ், என்றனர். உண்மையில் சிவாஜிக்கும் அப்படித்தான் இருந்தது.

காட்டில் இருந்துகொண்டு கணத்தில் பெரிய விருந்தை ஏற்பாடு செய்த அவர் பெரியவரா? அல்லது ஒன்றுமே இல்லாமல் ஒரு சிட்டிகை மாவைக் கொடுத்து வயிறு நிரம்பச் செய்த இவர் பெரியவரா? எது அதிசயம்? அங்காவது உண்மையில் உண்பதற்கு விருந்து இருந்தது. உண்டதும் வயிறு நிரம்பியது. இங்கு ஒன்றுமே இல்லாமல், ஒரு சிட்டிகை மாவில் வயிறு நிரம்பிவிட்டது. சிவாஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
விழுந்து வணங்கிவிட்டு, துகாராமிடம் கேட்டேவிட்டார்.

ஸ்வாமி, நான் அவர் காட்டில் எப்படி உணவு படைத்தார் என்று தெரிந்துகொள்ள வந்தால், நீங்கள் வெறும் கையால் வயிற்றை நிரப்புகிறீர்கள்? இது எப்படி சாத்தியமாயிற்று. தயவு செய்து சொல்லுங்கள் என்றார்.

குழந்தைபோல் சிரித்த துகாராம்‌ சொன்னர்.

அதுவா, காட்டில் ஸமர்த்த ராமதாசர் இருக்காரே? அவர்கிட்ட போய்க் கேளு. என்றார்.

ஞானிகளைப் பற்றி ஞானியரே அறிவர். ஸாமான்யர்களுக்கு அவர்களது நிலை புரிந்துவிடுவதில்லை.

சிவாஜிக்கு தன்னிலையை உணர்த்திய சமர்த்த ராமதாசர்

தென்னாட்டில் முஸ்லீம் படை எடுப்பாளர்களை ஒடுக்கியது விஜய நகரப் பேரரசு. அதற்குப் பின்னும் வட நாட்டில் அவுரங்கசீப்பின் அட்டஹாசம் நீடித்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது மஹாராஷ்டிரத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி உலகின் முதலாவது ‘கொரில்லா’ போரை நடத்தியவர் சிவாஜி. வீர சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய ஸ்தாபிதம் அவுரங்கசீப்பையும் மொகலாய சாம்ராஜ்யத்தையும் விழுத்தாட்டியது. வீர சிவாஜியின் வெற்றிக்குக் காரணம்—பவானி தேவி கொடுத்த வாளும், சமர்த்த ராமதாஸர் கொடுத்த ஆசியும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜியின் மனதில் இருந்து அகலத் தொடங்கியது.

அஹங்காரமும், மமகாரமும் ( ‘யான்’, ‘எனது’ என்னும் செருக்கு—குறள்) பெருகவே, சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். நல்ல தருணமும் வந்தது. ஒரு நாள் மாபெரும் கோட்டை கட்டும் வேலையில் ஆயிரம் தொழிலாளிகள் ஈடுபாடிருந்தனர். சிவாஜி, பெரும் மமதையுடன் அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். நான்இல்லாவிடில் இந்த மலை ஜாதி மக்களுக்கு சோறும் தண்ணீரும்
கிடைத்து இருக்குமா? என்ற எண்ணம் அவரது மனதில் இழை ஓடியது. அப்போது அங்கே ராமதாசரும் வந்து சேர்ந்தார்.

“சிவாஜி! ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டும். நாலைந்து தொழிலளிகளைக் கூப்பிடு” என்று குரு ராமதாசர் உத்தரவு இட்டார். குருவின் இந்த விநோத வேண்டுகோள் வியப்புக் குறியை எழுப்பியது. இருந்த போதிலும் குரு விஷயத்தில் கேள்விக் குறியை எழுப்பி அறியாத மாபெரும் பக்தன் வீர சிவாஜி. உடனே உத்தரவு பறந்தது.

வந்தனர் தொழிலாளிகள்– வெட்டி உடைத்தனர் பாறையை– என்ன அதிசயம்!! அதற்குள் சிறிய தூவாரங்களில் தண்ணீர். அதில் சில தேரைகள்! எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். சிவாஜி! இவைகளுக்கும் நீதான் உணவு படைக்கிறாயா? என்றார் குருதேவர்.

சிவாஜிக்குப் புரிந்தது. அகந்தை அகன்றது. குருதேவரின் காலில் விழுந்தார். கண்ணிர் மல்கினார். குருவின் ஆசி பெருகியது. காவிக் கொடிகள், மேலும் பல மொகலாயர் கோட்டைகளை வென்று, அவைகளின் மீது பட்டொளி வீசிப் பறந்தன!

சிவாஜியைக் காப்பாற்றிய குருவருள்

ஒரு நாள் சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த இராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார். அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள். சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.சமர்த்த இராமதாசர் கற்றுக் கொடுத்த இராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து, ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு இராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில்… அந்த இரவு நேரத்தில்… காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. “இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது?” என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னா பின்னமாகி ஓடியது.

சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ‘ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்ட சிவாஜி நேரே போய்
சமர்த்த இராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறினார். சிவாஜி ராம தாசஸரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் சமர்த்த ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

காவி வஸ்த்ர கொடி

சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில் பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன் பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார். அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில்
இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ராஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார். மக்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார். குரு சிரித்துக் கொண்டே சொன்னார் “இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்” என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்” இந்த அகண்ட ராஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக” என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய் என்று ஆசி வழங்கினார். சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாகக்கொண்டு மிகப் பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கினான்.

பாரத நாட்டு மகான்கள் தர்மத்திற்காகவும், பிறருடைய நன்மைக்காகவுமே வாழ்ந்தனர். துறவறம் பூண்டவர்களும் இல்லறத்தாரின் நன்மைக்காகவே நாட்டில் வாழ்ந்து நல்ல அறிவுரைகள் கூறினர். அந்த வரிசையில் இந்து தர்மத்தை நிலை நாட்டும் மிகப் பெரிய பணியை வீர சிவாஜி மூலம் செய்து காட்டியவர் ஸ்ரீ சமரத்த ராமதாசர்.

அவருடைய அருளாற்றலைக் கண்டு பிரமித்து, துறவறம் பூண்டு அவருடனே இருக்க விரும்பினார் சத்ரபதி சிவாஜி. ஆனால். ராமதாசர் சிவாஜியிடம், ” நீ க்ஷத்திரியன். இந்த நாட்டை ஒன்றுபடுத்துவதும், பகைவர்களை வெல்லுவதும் உன் தர்மம். நீ மக்களைக் காக்க பிறந்தவன். உயிரே போனாலும் உன் தர்மத்தைக் கை விடாதே. எனக்கு சேவை செய்யவேண்டும் உன் ஆசையில் கடமையைத் துறக்காதே! நீ நினைக்கும் போதெல்லாம் நான் உன் முன்பு இருப்பேன்!” என்று அறிவுரை கூறினார். அவரது பாதுகைகளைத் தனது அரியணையில் வைத்து ஆட்சி செலுத்தத் துவங்கினார் சிவாஜி. ” இது ராமனின் ராஜ்யம், நீ ராமனின் பிரதி நிதி என்னும் நினைவுடன் செயல்படு!” என்று உபதேசித்தார் குரு. அப்படியே வாழ்ந்தார் சீடர் சிவாஜி.

‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தின் மகிமை

வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த இராமதாசர் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில்… சமர்த்த இராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த இராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு.. “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துகனிகளின் மீது வீசினார் சமர்த்த இராமதாசர். அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள், “இவர் பெரிய ஞானியாம். ஆனால் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பரவலாகப் பேசினார்கள்.

அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு
பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது.. ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை.

கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற இராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப்போக்க வல்லதாக இருக்கிறது.

முகலாய மன்னன் மனைவியின் சித்தப் பிரமையை ராம பஜனை மூலம்போக்கிய சமர்த்த ராமதாசர்

சமர்த்த இராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சேரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன்தான் சமர்த்த இராமதாசரைப் பணிந்து “என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினார்.

சமர்த்த இராமதாசரும் பார்த்தார். ‘இந்த மன்னனை நல்வழிப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பு’ என்று எண்ணிய அவர்… மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற இராகத்தில் இராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர். முகலாய மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். ஹிந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் முறையிட்டான்.

இராமதாசர், “மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ராம் ராம்! என்று சொல்லிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொண்டார்கள். மஹாஞானியான சமர்த்த ராமதாசரின் நல்லிசையால் அவர் பெற்ற இராம பக்தியால் நம் தேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.

சத்ரபதி சிவாஜியின் சகோதரன் வெங்கோஜிக்கு அருள் செய்த சமர்த்த ராமதாசர்

சத்ரபதி சிவாஜி தன் குருவான சமர்த்த ராமதாசரிடம் சென்று தஞ்சையை ஆட்சி செய்த தன் சகோதரன் வெங்கோஜிக்கு அருள் செய்ய வேண்டினார். அதன்படி கி.பி.1677 இல் சமர்த்த ராமதாசர் ராமேஸ்வரத்திற்கு தலப்பயணம் சென்றபோது மன்னார்குடியில் தங்கினார். அதனை அறிந்த வெங்கோஜி மன்னர் அவரை நேரில் சென்று பார்த்து தஞ்சைக்கு வந்து தங்கி அருளாசி வழங்க வேண்டினார்.

மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர் தஞ்சாவூருக்கு வந்தார். வெங்கோஜி மன்னர் அவருக்கு தஞ்சையின் கிழக்கே அமைந்துள்ள சாமந்தான் குளத்தின் கீழ்க்கரையில் அவருக்கு இடம் அமைத்து தகுந்த மரியாதைகளைச் செய்து தனக்கு அருள் வழங்க வேண்டினார். அவரும் அருள் செய்து ஆன்மிகத்தை மன்னருக்கு போதித்தார். சில நாள்கள் அவர்தஞ்சாவூரில் தங்கினார். பின்னர் ராமேஸ்வரம் சென்றார்.

சமர்த்த ராமதாசர் இயற்றிய நூல்கள்

இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர்.

தாஸபோதம் நூலில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்

ராமதாசர் தாஸபோதம் என்ற நூலை எழுதினார். அந்நூலை சிவாஜிக்கு அளித்தார். அரசியலில் இருந்து ஆத்மா வரை வழிகாட்டும் நூல் அது என்பர். ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தாஸபோதம் என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.

ஸாமர்த்திய ஆஹே சல்வளீசே | ஜோ ஜோ கரீல த்யாசே |
பரந்து யேதே பகவந்தாசே| அதிஷ்டான் பாஹிஜே |

அர்த்தம்: போராட்டத்தை நடத்துவது நம் கைகளில் உள்ளது; ஆனால் காரியம் சரியாக நடப்பதற்கும் வெற்றி காண்பதற்கும் பகவானின் ஸங்கல்பம் மற்றும் ஸாதனை அவசியமாகிறது.

“இதை நீ படிப்பாய்… அப்போது உன்னுள் பெரும்தெளிவு ஏற்படும். உனக்குள்ளும் அரிய சிந்தனைகள் தோன்றும். ஆழ்ந்து இதில் கூறியுள்ளபடி நீ நடந்தால், என் குருவான அனுமனும் உனக்கு எல்லா உதவிகளும் நேரில் தோன்றிச் செய்வார்” என்றார்.

எச்சரிக்கையாய் வாழு! எதிரி யார், நண்பன் யார் தெரிந்து கொள்! தனிமையில் உள்ளத்தில் ஆழ்ந்து தக்க திட்டங்களைத் தீட்டு! முன்னோர் வாழ்வை நினைவில் கொண்டு முயற்சியைக் கை விடாமல் முன்னேறு! தொடர்ந்து செயல்படு தொய்வடையாதே! தோழர்களோடிரு! துளியும் தளராதே! ‘தன் தாஸபோதம்‘ என்ற நூலில் வீர சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் சொன்ன அறிவுரை இது.

சமர்த்த ராமதாசர் மூலமாக காகாஜிக்கு தரிசனம் தந்த ஹனுமான்

தாசர் சொன்னபடி புதிய பல சிந்தனைகள் அவனுக்குள் எழுந்தன. அதை யெல்லாம் குறித்துக் கொண்டான். சக அமைச்சர்களிடமும் பகிர்ந்து கொண்டான். சிவாஜியின் இந்த போக்கு அரசவைப் பண்டிதரான “காகாஜி” என்பவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் சிவாஜியிடம், “மன்னா… நாட்டில் அறநூல்களும், நீதிநூல்களும் எவ்வளவோ உள்ளன. ஆனால் நீங்கள் இந்த ராமதாசர் தந்ததை பெரிதாகக் கருதி
பின்பற்றுகிறீர்கள். இதனால் மற்ற நூல்கள் மதிப்பில்லாததுபோல கருதப்படும். நீர் செய்வது பிழை” என்றார்.

ஆனால் அதை சிவாஜி ஏற்கவில்லை.

“பண்டிதரே… நீங்கள் பொறாமையால் பேசுகிறீர்கள். இதை நீங்கள் மனம் ஒருமித்து வாசியுங்கள்; தெரியும்” என்றான் சிவாஜி. ஆனால் காகாஜி பண்டிதர் அதை கேட்காமல் சிவாஜியைவிட்டே பிரிந்துவிட்டார். இந்த செய்தி ராமதாசருக்குப் போய்ச்சேர்ந்தது. மனம் வருந்திய ராமதாசர் ஒரு பெரும் பக்தமேளாவுக்கு ஏற்பாடு செய்து, அதற்கு
காகாஜியை வரும்படி கூறி ஓலை அனுப்பினார்.

காகாஜியின் அந்த ஓலையை லட்சியம் செய்யவில்லை. இந்நிலையில் யார் அழைத்தால் காகாஜி வருவார் என்று ராமதாசர் யோசித்தபடி இருக்க, அவர்முன் அனுமன் தோன்றினான்.

“ராமதாசா… கவலையைவிடு. நானே நேரில் சென்று பண்டிதனை அழைக்கிறேன். அவன் உன்மேல்தான் பொறாமை கொண்டவன். உண்மையில் அவனொரு நல்ல ராமபக்தன். ராமபக்தர்கள் எனக்கும் பக்தர்கள். அவர்கள் தம்முள் பிரிந்துகிடக்கக் கூடாது” என்று கூறிவிட்டு, ஒரு பண்டிதன் வேடத்தில் அனுமன் காகாஜி வீட்டை அடைந்தான். ராமதாசர் அனுப்பியதாகவும் கூறினான்.

காகாஜி காதுகொடுத்தே கேட்கவில்லை.

காகாஜியின் செயல் அனுமனுக்கு கோபத்தை வரவழைக்கவே, அங்குள்ள ராமபிரான் படத்தைப் பார்த்து அவர்முன் அனுமன் வடிவில் தோன்றி, “ப்ரபோ… என் சீடனுக்காக அவன் குருவான நான் வந்தும் இந்த பண்டிதன் கேட்கவில்லை. எனக்காக நீங்கள் வந்தாலே இவன் கேட்பான். அருள் கூர்ந்து வாருங்கள்” என்ற மாத்திரம், அங்கே ராமன் கோதண்டத்தோடு பிரசன்னமானான். அதைக்கண்ட காகாஜி பண்டிதர் வெலவெலத்துப் போனார்.

பீமரூபி மாருதி ஸ்தோத்ரம்

பீமரூபி ஸ்துதி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது. ‘த்ரயோதஸாக்ஷரி‘ முப்பத்திமூன்று அக்ஷரங்கள் கொண்ட ‘ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்‘ என்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர் இவர் இந்த ஸ்தோத்திரத்தை த்ரயோதஸாக்ஷரியுடன் பாராயணம் மிகவும் நன்று.

இந்த ஸ்தோத்திரத்தை தினமும், ஸ்ரீ ஆஞ்சநேயரை மனதில் நினைத்து பாராயணம் செய்து வந்தால் நிச்சயமாக நினைத்தது கை கூடும் என்று நம்பிக்கை. இருபத்தி ஓர் முறை இருபத்தோர் நாட்களுக்கோ அல்லது ஒரு மண்டலமோ செய்யலாம். முடிந்தபோது, வடை மாலை, சுண்டல் அல்லது தயிர் ஸாதம் நைவேத்தியம் செய்வது நன்று.

|| பீமரூபீ மாருதி ஸ்தோத்ர ||

பீமரூபீ மஹாருத்ரா வஜ்ர ஹனுமான மாருதீ|
வனாரி அன்ஜனீஸூதா ராமதூதா ப்ரபஞ்ஜநா ||1||

மஹாபலீ ப்ராணதாதா ஸகளாம் உடவீ பளேம்|
ஸௌக்யகாரீ து:கஹாரீ தூர்த வைஷ்ணவ காயகா ||2||

தீனநாதா ஹரீரூபா ஸுந்தரா ஜகதந்தரா|
பாதாள தேவதாஹந்தா பவ்யஸிந்தூர லேபநா ||3||

லோகநாதா ஜகன்னாதா ப்ராணநாதா புராதனா|
புண்யவந்தா புண்யஸீலா பாவனா பரிதோஷகா ||4||

த்வஜாங்கேம் உசலீ பாஹோ ஆவேஸேம் லோடலா புடேம் |
காலாக்னி கால‌ருத்ராக்னி தேகதாம் காம்பதீ பயேம் ||5||

ப்ரஹ்மாண்டே மாயிலீ நேணோம் ஆவளே தந்த பங்கதீ |
நேத்ராக்னி சாலில்யா ஜ்வாலா ப்ருகுடீ தாடில்யா பளேம் ||6||

புச்ச தேம் முரடிலே மாதா கிரீடீ குண்டலே பரீ |
ஸுவர்ண கடி காஞ்ஸோடீ கண்டா கிங்கிணி நாகரா ||7||

டகாரே பர்வதா ஐஸா நேடகா ஸட பாதளூ |
சபளாங்க பாஹதாம் மோடேம் மஹாவித்யுல்லதேபரீ ||8||

கோடீச்யா கோடி உட்டாணேம் ஜேபாவே உத்தரேகடே |
மந்தாத்ரீ ஸாரிகா த்ரோணூக்ரோதேம் உத்பாடிலா பளேம் ||9||

ஆணிலா மாருதி நேலா ஆலா கேலா மனோகதீ |
மனாஸீ டாகிலேம் மாகேம் கதீஸீ தூளணா நஸே ||10||

அணூபாஸோனி ப்ரஹ்மாண்டா எவடா ஹோத ஜாதஸே |
தயாஸீ துளணா கோடேம் மேருமந்தார தாகுடே ||11||

ப்ரஹ்மாண்டாபோவதே வேடே வஜ்ரபுச்சேம் காலும் ஸகே |
தயாஸீ துளணா கைஞ்சீ ப்ரஹ்மாண்டீம் பாஹதாம் நஸே ||12||

ஆரக்த தேகிலேம் டோளாம் க்ராஸிலேம் ஸூர்யமண்டலா |
வாடதாம் வாடதாம் வாடே பேதிலேம் ஸூன்யமண்டலா ||13||

தனதான்ய பஸுவ்ருத்தி புத்ரபௌத்ர ஸமக்ரஹீ |
பாவதீ ரூபவித்யாதி ஸ்தோத்ரபாடேம் கரூனியாம் ||14||

பூதப்ரேதஸமந்தாதி ரோகவ்யாதி ஸமஸ்தஹீ |
நாஸதீ தூடதீ சிந்தா ஆநந்தே பீமதர்ஸனே ||15||

ஹே தரா பந்தரா ஸ்லோகீ லாபலீ ஸோபலீ பலீ |
த்ருட தேஹோ நி:ஸந்தேஹோ ஸங்க்யா சந்த்ரகலாகுணே ||16||

ராமதாஸீ அக்ரகணூ கபிகுலாஸி மண்டணூ|
ராமரூபீ அந்தராத்மா தர்ஸனே தோஷ நாஸதீ ||17||

|| இதி ஸ்ரீ ராமதாஸக்ருதம் ஸங்கட நிரஸனம் நாம

ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||

1. மஹத்தான ரூபத்தையுடையவரே, மஹாருத்ராம்சமான வைரம் பாய்ந்த சரீரத்தோடு கூடின ஹனுமந்தா, வனத்தில் சஞ்சரிப்பவரே, அஞ்சனா தேவியின் புத்ரரும் வாயு அம்சமுமான ராமதூதா.

2. மஹாபலமுடையவரே, ப்ராணனைக் கொடுப்பவரே, அனைவரின் உற்சாகத்தைத் தூண்டும் சக்தி வாய்ந்தவரே, சகலருக்கும் துக்கத்தைப் போக்கி சுகத்தைக் கொடுப்பவரே, தீவிர வைஷ்ணவரே, பாடும் திறமை கொண்டவரே.

3. ஏழைகளைக் காப்பவரே, வானர ரூபமுடையவரே, அழகு வாய்ந்தவரே, லோகத்திற்கு விலக்ஷணமானவரே, பாதாள தேவதைகளைக் கொன்றவரே, ராமனை ரக்ஷிக்க அஹிமஹி ராவணர்களைக் கொன்றவரே, சிந்தூரத்தை நிறையப் பூசிக் கொள்பவரே.

4. உலகுக்கெல்லாம் நாயகனே, இன்னும் ஜகத்துக்கெல்லாம் நாயகனே, பிராணனுக்கும் அதிபதியே, மிகப் பழமையானவரே, புண்யவானே, புண்ய நடத்தையுடையவரே, உத்தம பாவனையுடன் பிறரைச் சந்தோஷிக்கச் செய்பவரே.

5. கையைத் த்வஜம் (கொடி) போலத் தூக்கி ஆவேசத்தோடு முன் தள்ளிச் செல்பவர். காலாக்னியும், காலருத்ராக்னியும் அவரைக் கண்டு பயத்தால் நடுங்குகின்றன.

6. ப்ரம்மாண்டத்தை அளந்தவரோ என்னவோ தெரியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டு கண்களிலிருந்து நெருப்பு ஜ்வாலைத் தெரிக்கப் பலமாக நெற்றியை நெரிப்பவர்.

7. தன் வாலைத் தலைவரையில் வளைத்து அழகிய குண்டலங்களையும், கீரிடத்தையும் அணிந்து இடுப்பில் பொன் ஒட்டியாணத்தையும் அணிந்து தங்கக் கச்சத்துடன் செல்லும் போது நகரா (பேரிகை) அடிப்பது போல ஒட்டியாணத்தின் மணிகள் ஒலிக்கின்றன்.

8. வாலினால் பர்வதத்தை நன்றாக உதைத்துத் தள்ளி ஆகாயத்தில் செல்லும் போது அவருடைய பளபளப்பாக ஜ்வலிக்கும் சரீரம் மகத்தான மின்னல் கொடி போல் இருக்கிறது.

9. கோடிக்கணக்கான தாண்டுதலைத் தாண்டி வடக்கு திசை சென்று மந்த்ராத்ரியிலிருந்த த்ரோண பர்வதத்தை க்ரோத ஆவேசத்துடன் வேறுபடுத்தினார்.

10. மலையைக் கொண்டு வந்து மறுபடியும் கொண்டு போய் வைத்துவிட்டு மனோவேகமாய்த் திரும்பினாரே, அச்சமயம் மனோவேகம் போதாமல் போனதால் அதையே பின் விட்டு போன வேகத்தை எப்படி அளவிட முடியும்.

11. சிறு வடிவிலிருந்து ப்ரம்மாண்டமான ரூபத்தை எடுத்து வண்ணம் கோளகம் முழுவதும் வ்யாபித்தவராய் வஜ்ரமான வாலைச் சுற்றிக் கொண்டார்.

12.அவருக்கு உபமானம் எது? மேரு மந்த்ர பர்வதமெல்லாம் மிகச் சிறியவை. இந்தப் பிரம்மாண்டம் முழுதும் அவரை ஒப்பிட வேறு எதுவும் இல்லை.

13. சிவப்பான சூர்ய மண்டலத்தை எவர் விழுங்கினாரோ, மேலும் விஸ்வரூபம் எடுத்த போது வளர வளர பிரம்மாண்டத்தையே போதித்தாரே, அவரே ஸ்ரீ ஆஞ்சநேயர்.

14. பூத, பிரேத ஸம்பந்தங்கள், ரோகம், வியாதி முதலியன, கவலை முதலிய கஷ்டங்கள் இந்த பீமரூபி ஸ்தோத்திரத்தினால் நசிந்து இருப்பிடம் தெரியும். தரிசனத்தினால் ஆனந்தமுண்டாகும்.

15. இந்த சந்திரகலை (பிறை) போன்ற பதினைந்து ஸ்லோகங்களைக் கடைபிடியுங்கள். அவைகளை ஜபிப்பதனால் லாபமும், அழகும், த்ருடதேஹமும் ஏற்படும். இதில் ஐயமில்லை.

16. இதைத் துதிப்பதால் செல்வம், தானியங்கள், வம்சவிருத்தி, நல்ல ஸ்வபாவம், ரூபம், வித்யை முதலியன கிடைக்கும்.

17. ஸமர்த்த ராமதாஸர் கபிகுல பூஷணமான ஆஞ்சநேயரை உபாசிப்பதில் முதல்வர். அந்தர்யாமியான ராமரைத் தரிசிப்பதாலும், தியானிப்பதாலும் எல்லாவிதமான
தோஷங்களும் விலகும்.

அன்னையின் நினைப்பு

உலகையே துறந்துவிட்ட ராமதாஸருக்கு ஒருநாள் தன் அன்னையின் நினைப்பு வந்தது… வீட்டை விட்டு ஓடி வந்ததை நினைத்துப் பார்த்தார். மறுபடியும் தன் அன்னையைக் காண வேண்டுமென்கிற நல்லாசை அவருக்குள் கிளை பரத்தியது. உடனே தாயைக் காண ஓடிச் சென்றார் அந்தத் தவத் தனயன்.

தனது பழைய வீட்டைக் கண்டுபிடித்தார். வாசலில் நின்று, “ஜய ஜய ரகுவீர ஸமர்த்த” என்று உரத்த குரலில் சொன்னார். திண்ணையில் உட்கார்ந்திருந்த அவருடைய வயதான தாயார், “யாரோ பிச்சை கேட்டு வந்திருக்கான். எதாவது போடுங்க” என்று வீட்டுக்குள் இருந்தவர்களிடம் சொன்னாள்.

உடனே ராமதாஸர், “அம்மா! நான் உன்னோட “நாரோபா’ வந்திருக்கேன்மா. (ராமதாஸரை அவருடைய அம்மா இப்படித்தான் செல்லமாக அழைப்பார்.) உன்னைப் பார்க்கணும்னுதான் வந்தேன்” என்று அன்புப் பெருக்கோடு கூறினார்.

எத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய பிள்ளை மறுபடியும் வந்து நிற்பதை உணர்ந்த ராணுபாய் கண்ணீர்க் காடாக மாறினாள்; தட்டுத் தடுமாறி வந்து பிள்ளையைக் கட்டியணைத்தாள்; தோளையும், மார்பையும், முகத்தையும் தடவித் தடவிப் பார்த்துப் பரவசப்பட்டாள். ஆம், காலம் அவளுடைய கண் பார்வையைப் பறித்திருந்தது.

“என் செல்லமே! என் பட்டே! என் கண்ணே நாரோபா! இத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கும் உன்னைக் கண்ணாரப் பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே? நான் பார்வையில்லாத கிழமாகிவிட்டேனே” என்று கதறினாள்.

ராமதாஸரின் துறவு நெஞ்சுகூட ஒரு நிமிடம் துடிதுடித்துப் போனது. தனது இஷ்ட தெய்வமான ரகுவீரரை நினைத்து தாயின் கண்களைத் தொட்டார். அடுத்த நிமிடம், ராமதாஸரைப் பெற்றெடுத்த அந்தப் புண்ணியவதிக்கு பார்வை வந்துவிட்டது. கண்ணாரத் தன் மகனைக் கண்டாள்; கட்டித் தழுவினாள்.

அதற்குப் பின் சில நாட்கள் தன் தாயுடனேயே கழித்த ராமதாஸர், மறுபடியும் உலகில் தர்மத்தைப் பரப்ப புறப்பட்டுவிட்டார். மகனைப் பிரிய மறுத்த தாயிடம், “உன் இறுதிக் காலத்தில் இங்கே வருவேன்” என்று வாக்களித்தார்; அப்படியே செய்தார்.

ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் நிகழ்த்திய அற்புதங்கள்

தன் வாழ்நாட்களில் பல அற்புதங்களைச் செய்து காட்டினார் ராமதாஸர்.

  • தன் அன்னைக்கு மட்டுமல்ல, மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு சிற்பிக்கும் இழந்த பார்வையை மீண்டும் அளித்து சிற்பங்களைச் செதுக்க வைத்தார்.
  • கிணற்றில் விழுந்துவிட்ட ஒரு இளைஞனை தன் தவ வலிமையால் உயிரோடு மீட்டுத் தந்தார்.
  • படிப்பறிவற்ற ஒரு பாமரனுக்கு ஞானம் அளித்து, தன்னோடு வாதம் செய்ய வந்த பண்டிதரோடு அவனை சொற்போர் நிகழ்த்த வைத்து, பண்டிதரின் கர்வத்தை அடக்கினார்.
  • தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன்- காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது.
  • ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.
  • பீஜப்பூர் சுல்தானால் கைது செய்யப்பட்ட ஒரு அப்பாவி கணக்கரை தன்னுடைய மகிமையால் விடுவித்தார்.

முக்தி

பக்தியை பரப்பிய ராமதாசர் தன்னுடைய அந்திமகாலம் நெருங்குவதை அறிந்து பக்தர்களுக்குத் தெரிவித்தார். நாடெங்குமிருந்து அவருடைய பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

ராம்தாஸ் மாகின் ஒன்பதாம் நாளில், 1603 (ஷாலிவஹன சகாப்தம்), பொ.ச. 1681 இல் சஜ்ஜங்காட்டில் 73 வயதில் இறந்தார். இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அவர் பழங்களை சாப்பிடுவதையும், “பிரயோபவேஷனா” என்று அழைக்கப்படும் குடிநீரையும் நிறுத்திவிட்டார். தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமின் மூர்த்திக்கு முன்னால் துளசிமணி மாலை அணிந்து கொண்டு பத்மாசனமிட்டு ராம தியானத்தில் அமர்ந்தார். ராமர் அவர் முன் காட்சியளித்தார். “ஜயரகுவீரா’ என்று ஜபித்தபடியே அவர் உயிர் தனது 73-ம் வயதில் [1681-ல்) பிரிந்தது. உத்தவ் சுவாமியும் அக்கா சுவாமியும் அவரது சேவையில் இருந்தனர்.

இறுதி சடங்கை உத்தவ் சுவாமி நிகழ்த்தினார். சமாதி சன்னதி சத்ரபதி சம்பாஜி மகாராஜாவால் கட்டப்பட்டது.

எப்பொழுதெல்லாம் அநியாயம், அட்டூழியம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தடுக்க/ஒடுக்க இறைவன் தன் பிரதிநிதியை அனுப்பி சரி செய்கிறான் என்பதற்கு ஸ்ரீ சமர்த்த ராமதாசரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாசர் தோன்றி அவரை நல்வழிப்படுத்தி முகலாயர்களை அடக்கி தோற்கடித்திருக்காவிட்டால் நமது பாரத தேசத்தின் பெரும்பாலான மாநிலங்களில் முகலாயர்கள் கொடுமைகள் பல செய்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கோவில்களையும் புராதன சின்னங்களையும் இடித்து தரைமட்டமாக்கி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள். இதனால் நமது கலாச்சாரங்களையும் அற்புத கலைப் படைப்புகளையும் நாம் யாரும் அறியாமல் போயிருப்போம்.

ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி