- September 23, 2024
உள்ளடக்கம்
ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் பொட்டு/குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமான அப்பகுதியை யோக முறையில், ஆக்ஞா சக்கரம் என்று சொல்லப்படும்.
மனித உடலில் உள்ள இயக்கங்கள் காரணமாக “எலக்ட்ரோ மேக்னடிக்” என்ற மின் காந்த அலை வடிவத்தில் சக்தி வெளிப்படுகிறது. நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க விதத்தில் மின் காந்த அலைகள் வெளிப்படுகின்றன. மன அமைதி பாதிக்கப்படும் சமயத்தில் அப்பகுதிகளில் வலி ஏற்படுவதை உணரலாம். சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருளாகும். குங்குமம் என்பது இயற்கை கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அதன் அடிப்படையில் நெற்றியில் இடும் குங்குமம் அல்லது சந்தனம் மூலம் நெற்றிப்பகுதி குளிர்ச்சி அடைகிறது.
புருவ மத்திக்கு பின்புறம் பினியல் கிளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. “ஆக்ஞா சக்கரம்” எனப்படும் அதை, “மூன்றாவது கண்”, “ஞானக்கண்” என்று குறிப்பிடுவார்கள். சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரம் நெற்றிக் கண்ணாக இருப்பதை கவனித்திருப்போம். திபெத்தில் உள்ள லாமா புத்த துறவிகளுக்கு ஞானக்கண் திறப்பு என்ற சடங்கின் மூலம் புருவ மத்தி பகுதிக்கு நெருப்பால் சூடு வைக்கப்படுகிறது.
சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுவதால் உடல் மற்றும் மனோசக்தி ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. முகம் பிரகாசம் அடைகிறது. பொட்டு வைப்பதை ஆன்மிக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கமாகவும் ஆன்மிக சான்றோர்கள் ஏற்படுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய முறைப்படி பெண்கள் முன் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் இட்டுக்கொள்வார்கள். ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அவற்றை அணிவது வழக்கம். பொதுவாக, குங்குமம் என்பது மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும். குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதியில் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.
அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அப்பகுதியில் இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமான மூளையின் பின்பகுதியில் எண்ணங்களின் பதிவிடமாக உள்ள ஹிப்போகேம்பஸ் என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை அனுப்புகிறது.
இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் என்ற நிலையில் அங்கு மெதுவாக ஆட்காட்டி விரலால் தொட்டால், மனதில் உண்டாகும் ஒரு வித உணர்வு, தியான நிலைக்கு அடிப்படையாக அமைகிறது. மன ஒருமை மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், குளிர்ந்த சந்தனத்தை அங்கே அணிவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவு வரை மன ஒருமை ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.
Read, also