- September 14, 2024
உள்ளடக்கம்
மதுரையை சுற்றி பசுமலை, திருப்பரங்குன்றம் மலை, நாகமலை போன்ற மலைகளும், குன்றுகளும் இருந்தாலும், மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிக நெருக்கமானது யானைமலை.
யானைமலை மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை நரசிங்கமங்கலம் பகுதியில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.
கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார்.
குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய்பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் [இன்றைய ஒத்தக்கடை] என அழைத்தனர். இக் குடைவரைக் கோவிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோவிலுக்குச் செய்திருக்கின்றனர் என்கூறுகிறது.
மாமல்லபுரம் குடைவரை கோவில் போல இங்கு நரசிங்க பெருமாளுக்கும், லாடன் கோவில் என்ற பெயரில் முருகனுக்கும் கோவில்கள் உள்ளன. “முருகனுக்கு குடைவரைக் கோவில் உள்ள ஒரே இடம் இது தான்”.
இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன. பார்சுவநாதரின் சிலையைப் பார்க்கும் போது அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்துதலைப் பாம்பாக மாறி குடைபிடித்துக் கொண்டிருக்கிறான். தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப் பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது. கமடன் பின் பணிந்து பார்சுவநாதரை வணங்குவது போலவும் அதே சிலையின் அடியில் வடித்துள்ளனர்.
பார்சுவநாதருக்கு அருகில் பாகுபலி சிலை காணப்படுகிறது. பாகுபலி ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் தீர்த்தங்கரர்களுள் ஒருவர். பாகுபலிக்கு இருபுறமும் நிற்பவர்கள் பிராமி மற்றும் சுந்தரி. இருவரும் பாகுபலியின் சகோதரிகள். பிராமியின் பெயரால்தான் கல்வெட்டுக்களுக்கு பிராமி எனப் பெயர் வந்தது.
மகாவீரரின் சிற்பத்தின் மீது வண்ணம் பூசி இருபுறமும் விளக்குகள் மற்றும் சாமரம் வீசுவோரின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்திரங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் அழியாமல் உள்ளது. அதன் அருகில் அம்பிகா இயக்கியின் சிற்பம் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒன்று போலவே சொல்லப்படுகிறது. இறைபக்தி அதிகம் கொண்ட பெண்கள். கணவன் கொடுத்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை இறையடியாருக்கு கொடுத்துப் பின் கணவன் கேட்டதும் ஒன்றை தன் பக்தியின் வலிமையால் கொடுத்ததை கணவன் உணர்ந்து அவளை வணங்குவது. இந்தக் கதைகள் சைவசமயத்திலும், சமணசமயத்திலும் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.
இங்குள்ள சிலைகளை அச்சணந்தி என்ற அடியார் செய்ததாக குறிப்புள்ளது. இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் ஒன்று இச்சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பை நரசிங்கத்து சபையாரிடம் விட்டிருந்ததை குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் சபையாராகயிருந்த பிராமணர்களே இதை பாதுகாக்க முன்வந்திருக்கிறார்கள். யானைமலை சமய நல்லிணக்க மலையாக இருந்து வருகிறது.
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும்.
சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
சங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண் யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச்சொற்றொடர்களின் பொருளாகும்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கிறது. யானைமலை மலையேற்றப் பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடம்; இதனால் பல இளைஞர்கள் மலையேற்றத்திற்காகவே யானைமலைக்கு வருகின்றனர்.