- February 9, 2024
ஆயிரம் பொன்னையும் ஒரு பேரழகான பெண்ணையும் ஓரிடத்தில் வைத்திருந்தால். திருட வருகிறவன் கூட, அந்த பொன்னைத் திருட மாட்டான் இந்த பெண்ணைத்தான் திருடுவான் என்பார் கம்பர். பொன்னினும் கள்வனை பொலிவு தூண்டுவாள் என்பது பாட்டு. அப்படி ஒரு பேரழகான பெண்தான் இவளும்.
“நாணயமானவனையும் கூட ஓர்நாழிகை நய வஞ்சகனாக செய்துவிடும் அவள் அழகு”. அவள் நடந்தால் அன்னமென்ன எந்த கொம்பனும் சாய்வான். அவளிடம் நின்று தோற்பான். அவள் உயரமும் எடையும் துளியும் பிசகாமல் அளந்து நிறுவையிட்டு வைத்தது என்றால் அது மிகையல்ல. அவள் கூந்தல் முடியும்கூட, முழம்போட்டு அளந்தாலும் அது முடிவின்றி நீளும் கருநீல நதி என்பார். ஆமாம் அவள் உயரத்தில் பாதிக்கு மேல் இருக்கும் அவள் கூந்தலின் வளர்ச்சி. அதில் அளவில் அதிகமாக பூக்கள் நிறைந்து இருந்தது இன்று. அதன் வாசனை அடுத்த ஊரை கடந்து சென்றது என்பதும் இன்னுமோர் சேதி.
சேலையை எப்படியும் கட்டலாம் என்பதை விட, இப்படித்தான் கட்டணும் என்பதை இவளிடம்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நேர்த்தியான கட்டு, அவள் உடலும்தான். அவள் அருகில் சென்றாலே போதும் ஆளைக் கிறங்கடிக்கும் வாசம். அது இயற்கையா? செயற்கையா? என்ற எண்ணமெல்லாம் அவள் அருகில் நிற்கும்போது தோன்றாது. காரணம் அவள் அழகின் மொத்த வார்ப்பிடம் எனும்போது வேறு தர்க்கத்திற்கு ஏது இடம்?
இப்போது உங்களுக்கு ஒன்று சொல்லாமல் தோன்றும். தவறில்லை…..!
இவள் அவளேதான்!
ஊரடங்கிய நேரம். தெருவிளக்கின் வெளிச்சத் துணையோடு, கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட சாலை ஓவியத்தில் இந்த அழகு, வண்ணமயமான உயிரோவியம் ஒரு சித்திரப் பாவையாய் வந்து நின்றாள். அது அவள் எப்போதும் நிற்கும் அந்த மின் கம்பத்தின் அருகில் தான். மார்புக்கு கீழே குறுக்குவாட்டில் இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு, அதன் துணையோடு ஒரு ஊன்று கோலாக வலது கையை நிறுத்தி வைத்து, தன் கழுத்து மணியை கடிக்காமல் கடித்துக் கொண்டிருந்தாள்.
ஆமாம் கடிபட்டும் அடி பட்டும் மிதிபட்டும் கடந்த வந்ததுதானே அவளது வாழ்க்கை. படிக்கும் காலத்தில் பலபேர் போட்டி போட்டு தன் காதலை சொன்னபோதும் கூட. எப்போதும் தன்னை ஏக்கத்தோடு பார்த்திருக்கும் அந்த பரிதாபத்திற்கு உரியவனிடம் மட்டும் தான், இவள் உள்ளம் ஊமைமொழி பேசும். இவர்களின் அன்பு அணையா தீபம் என்று ஆனபின்; இவளை ஊர் எல்லை வரை உள்ளன்பை பகிர்ந்து கொள்ள அழைத்துச்செல்வான். ஆளரவமற்ற தனிமையிலும் கூட அவனுக்கு தனது காதலை சொல்ல அடுத்தவன் விருப்பத்தையே முன் வைப்பான்.
சந்தோஷ் உன்னை எவ்வளவு விரும்பினான் தெரியுமா?. அந்த கிருஷ்ணன் இருக்கானே… அவன் பாதி ராத்திரி உறக்கத்தில் கூட உன்பெயரைத்தான் சொல்வானாம் என்று சொல்லிச்சொல்லி ரசிப்பான்….! சிரிப்பான். அதில் அவளும் மகிழ்வாள். காதல் மேலும் வளர்ந்தது. கல்யாணத்திற்கு பிறகும் சொல்லத் தொடங்கினான். தொடங்கியது மட்டுமல்லாமல். சொல்லாமல் கொள்ளாமல் பலரையும் வீட்டிற்கு அழைத்தும் வந்து வற்புறுத்தவும் தொடங்கிவிட்டான். தொடக்கத்தில் அது பெரும் சண்டையில்தான் முடிந்தது. என்றாலும் அவன் அழைத்து வரும் வாடிக்கைக்கு முடிவில்லை. “அவன் எண்ணம் கைகூடவில்லை எனும்போது, அவள் உணவில் ஊக்கமருந்து கொடுத்து உறக்கத்தை சாதகமாக்கி சாதிக்கத் தொடங்கினான்.”
எல்லாம் என் தலைவிதி என்று நொந்துகொண்டவள் அவனை தொலைத்த பின்னும் இன்று உறக்கமும் இல்லை, அவனால் ஏற்பட்ட அவப்பெயர் தொலையவுமில்லை; என்று வருத்தத்தில் தானோ என்னவோ வாழ்க்கை தடமாற்றினாள்.
இன்று சாலையில் வாகன நெரிசல் இல்லை. உண்டது செரிக்க நடைபயிற்சி செய்யும் ஆட்களும் இல்லை. தூரத்தில் குறைக்கும் தெருநாய்களின் தொல்லையும் இல்லை. தென்றல் வருடும் தேகம் குளிரும் அழகான சூழல்தான் – அதுவும் சுகம்தான். நேரம் பாதி இரவை தின்று கொண்டிருந்தது. யாருமற்ற அந்த இரவின் மடியில் ஒளிரும் நிலவு இவள்மட்டும் மண்ணில் தன்னந்தனியே தனித்து இருந்தாள்.
அவ்வப்போது சாலையில் கடக்கும் வாகனத்தை தன் மயக்கும் பார்வையினால், தன்னை கடக்கும் வரை பார்த்திருப்பாள். அந்தப் பார்வையில் மயங்கி சில வாகனம் வந்து செல்லும். சிலவை நின்று செல்லும். ஒரு சிலவை மட்டுமே இறங்கியும், பின் இணங்கியும் செல்லும்.
அன்று உயர்தரமான கார் ஒன்று வந்து நின்றது.. முன்பக்கக் கண்ணாடி மெல்ல இறக்கியது. கண்ணாடி இறங்கிய முதல். திறந்த வாய்மூடாமல் இருந்தார் உள்ளிருந்தவர். கண்ணாடி வழியாகப் பார்த்ததைவிட பன்மடங்கு அழகு என்பதில் உறைந்துபோனார். “அரசுதுறை நீ வீட்டிற்கு போ என்று சொல்ல”, இன்னும் ஆறுவருடத்தை கையில் வைத்துக் கொண்டு இன்று வீதியில் நிற்பளிடம் வந்து நிற்கிறது.
அவர் ஆச்சரியத்தில் இருந்து விலகி ஆனந்த நிலைக்கு வந்திருந்தாலும் இப்போதும் திறந்தவாய் திறந்தே இருக்க மெல்லிய புன்னகை ஒன்றை காட்டினார். அவளும் முன்பு இருந்ததை விட சற்று அதிகமாக தன் சிரிக்கும் முகத்தோற்றத்தை விரித்துக் காட்டினாள். அந்த புன்னகையும் இவள் பேரழகும் இவரை இன்னும் இருபதாண்டுகள் பின்னோக்கி தள்ளிற்று போல்.
ஒரு பூக்கடையே தேன் சுரந்து தனக்கு வலியவந்து ஊட்டுவதற்கு நிற்கிறதாய் வியந்து வியந்து தன்னை மறந்து மறந்து சில கணம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம். காரின் அருகில் வந்து. வளைகள் நிறைந்த தன் கரத்தால் மெல்ல தட்டினாள். அப்போதுதான் அவர் கனவுலகிலிருந்து மீண்டிருப்பார் போல். “தேவதைகளும் தெரிவில் வருமோ என்ற சந்தேகம் இப்போது மிச்சமிருக்கக் கூடும்” அவருக்கு.
போகலாமா என்றார். அந்த புன்னகை நிறைந்த பொன்முகத்தாள். வாய்மொழியாத வார்த்தையால் வருகிறேன் என்பதை அறிகுறியில் அறிவித்து விட்டு. காரை வலம் வந்து முன்னிருக்கையில் அமர்வதற்காக வந்தவளை, எதிரே வரும் வாகன ஒளி நிமிர்ந்து பார்க்க வைத்தது.. அவளும் எப்போதும் போல் தன் பார்வையை வாகனத்தோடு சேர்ந்தே பயணப்படுத்தினாள். அவனும் இதற்கு முன் இத்தனை பேரழகானப் பெண்ணொருத்தியைப் பார்த்திருக்க மாட்டான்போல..?
இருசக்கர வாகனம் ஓட்டுவதும் நாம்தான் என்பதையும் மறந்து முழுதாய் திரும்பி பார்த்துக் கொண்டே போகிறான். அவன் செய்கை இவளை மேலும் மகிழ்வித்தது. “காரின் உள்ளே இருந்தும் இன்னும் இரண்டுவிழி தன்மேனியை தின்று கொண்டிருக்கிறது” என்பதையும் உணர்ந்தாள். இவள் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு கார் கண்ணாடியிலும் அந்த வாகன ஓட்டியைத் தேடினாள். இவள் குரலை கேட்க வேண்டும் என்ற ஆவலில். அவர், என்ன ரேட்? என்று கேட்டார். இரண்டாயிரம் என்றவள் சட்டென பின்புறம் திரும்பி பார்த்து திடுக்கிட்டாள்.
அவள்குரலை மேலும் ரசிக்க நினைத்தவர். இரண்டாயிரமா? அதிகமாக இருக்கே.. என்றதும் சட்டென்று கதவை திறந்து வெளியில் இறங்க முற்பட்டாள். உடனே அவளின் கையைப்பிடித்து கொண்டு தொகை அதிகம் என்றாலும் உன் அழகுக்கு அது குறைவுதான் – வா.. என்று தன் ஆசை மொத்தத்தையும் வார்த்தையால் காட்டினார். இல்லை வேண்டாம் என்று வேகமாக வெளியில் இறங்கி கதவை சாத்திவிட்டு கார் வந்ததிசையில் நடந்தாள். அவரும் உடனே கீழே இறங்கி. நீ கேட்டதை விட ஐந்துமடங்கு தருகிறேன் வா என்றார்.
வேண்டாம் இங்கே ஒருத்தர் அடிபட்டு கிடக்கிறார்.. அதனால் எனக்கு இன்றைக்கு லீவு , அவருக்கு என்னாச்சோ… ஏதாச்சோ..? என்று இன்னும் வேகமாக நடந்தாள். எங்கே என்று அவரும் சிறு கலக்கத்துடன் கேட்டார். அதோ அந்த தடுப்பு சுவர் ஓரத்தில் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே நடந்தாள். அப்போதுதான் அவரும் பார்த்தார். ஓ… இப்படி ஒரு சம்பவம் இப்போ நடந்துச்சா..? என்று அவர் யோசிக்கும் நேரத்தில்; அந்த இருசங்கர வாகனமும் இளைஞனும் கோலம் சிதைந்து கிடக்கும் இடத்தை பார்த்தவள் மேலும் கலக்கமுற்றாள்.
அவன் அந்த தடுப்பு சுவரில் மோதி தூக்கி எறிந்த காட்சி இப்போது அவள் மனக்கண்ணில். அவனை தூக்கி மடியில் கிடத்தி கன்னத்தை தட்டி கூப்பிட்டாள் என்னங்க.. என்னங்க… என்று. அவன் நினைவற்று கிடந்தான்.
மெல்ல அவள் காதருகில் சென்று கேட்டார் இவர்.
யார் இவர்…?
என் ரசிகர்…!
ரசிகர் என்றால்…?
ரசிகர்தான்..! என்றவளை அவர் இப்போதும் வியப்போடுத்தான் பார்த்தார். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் கைக்குட்டையில் அவன் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அலைபேசியில் சில நம்பரை தட்டிக் கொண்டு.. சரி இவரை ஆம்புலன்சில் ஏற்றி விட்டுட்டு நாம போகலாமா? என்றார். அவள் அழகு இப்போதும் அவரை தின்று கொண்டிருந்தது. அவள் அலைபேசியை அணைத்துவிட்டு சட்டென நிமிர்ந்தாள். அது கோவப் பார்வையா இல்லையா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் இப்போது அவள் முகத்தில் புன்னைகை இல்லை.
சரி இவரை மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள். “இன்று இரவு முழுதும் உங்களோடு இருக்கிறேன்” என்றாள். அது தீர்க்கமான குரலாக இருந்தது. இவளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நொடி மௌனம் சாதித்தார். எந்த பதிலும் சொல்லவில்லை ஓட்டம் பிடித்தார். காரின் பின்னிருக்கையில் தன் மடியில் அடிபட்டவனை கிடத்தி கவலை தோய்ந்த முகத்தோடு அவன் முகத்தை வருடிக் கொண்டிருந்தாள். கார் மருத்துவமனையின் வளாகத்தில் நின்றது. பத்து நிமிடம் ஒரே பரபரப்புக்கு பிறகு வந்து, “பயப்படாதீர்கள் காலையில் கண்திறந்திடுவார்…” என்றார் ஒரு செவிலி. அவருக்கு கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு, சில ரூபாய் நோட்டுகளை உரிமையோடு இவர் சட்டைப்பையில் இருந்து எடுத்து, மருத்துவச் செலவிற்கு கட்டிவிட்டு, அவரையும் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு நகர்ந்தாள்.
சில வாரங்களுக்கு பின்னொரு நாள். எப்போதும் போல் அந்த மின்விளக்கின் அருகில் நின்று கொண்டு. அந்த கருநீல கம்பளமாய் விரிந்து கிடக்கும் அந்த சாலையின் இரு மறுங்கையும் புன்னகை மாறாத அந்த பொன்முகத்தாள் தன் பார்வையால் எதை எதையோ ஆய்வு செய்து கொண்டிருந்தாள்..
தூரத்தில் ஒற்றை விளக்குடன் வந்த வாகனம். சாலையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்த மின்விளக்கை நாணச்செய்யும் நோக்கத்துடன். வெளிச்சத்தை வாரி வழங்கிய வண்ணம் வந்து கொண்டிருந்தது. அனேகமாக அது இருசக்கர வாகனம் என்பதை புரிந்து கொண்டாள். அந்த ஒளியை உமிழும் குடுவைக்கு சற்று மேலே தன் பார்வையை ஓட்டினாள். இப்போது அந்த வாகனம் சற்று வேகம் குறைந்து வருகிறது என்பதும் புரிந்ததும்.
தனக்கே உரிய அந்த மயக்கும் மந்திரபார்வையை ஆயுதமாக்கி அனுப்பி வைத்தாள். இப்போது வாகனம் இவளை நெருங்கி கொண்டிருக்கும் வேளை மின்விளக்கின் வெளிச்சம் சொன்னது அது உன் ரசிகன் என்று. மகிழ்ச்சி நிரம்பிய மனதோடு அவனை பார்த்து நின்றாள். நலமா என வினவியது விழிகள். அவன் நெடுநாளாக இவளை பார்த்ததும் சொல்லவேண்டியதை அசைபோட்ட வண்ணமே இருந்திருப்பான் போல் –
“த்தூ…சனியன் இன்னுமா சாகாமல் இருக்கு, இதெல்லாம் ஒரு பொழப்பு. இன்னும் எத்தனை பேரை காவுகொடுக்க நிக்குதோ.. அன்னிக்கு அந்த புண்ணியவதியும் அவள் கணவனும் இல்லை என்றால் என் கதி..” என்று உரத்தக் குரலெடுத்து சொல்லிக்கொண்டே சென்றான். புண்ணியவதி என்ற வார்த்தை எல்லாம் இவள் காதில் விழவில்லை. ஆனாலும் இவள் புன்னகை அப்போதும் மாறவில்லை. மீண்டும் தன்பார்வையை அந்த கருப்பு கம்பளம் விரித்த சாலையில் நட்டுவைத்தாள்.
இப்போதும் அவள் புன்னகையை யாராலும் மாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவு.!
நன்றி
செந்தில் சுலோ, செருவாவிடுதி.