- February 9, 2024
உள்ளடக்கம்
அன்பே சிவம் படத்துல கமல் கதாப்பாத்திரம் ஞாபகம் இருக்குதா?
“DON’T WORRY MY CHILD. WHATEVER HAPPENS LIFE MUST MOVE ON” – பொசுக்கு பொசுக்குனு சின்ன சின்ன ஏமாற்றம் தாங்காம, நொந்து போகாதீங்க!
அடுத்த வினாடி என்ன நடக்கும்னு, யாருக்குமே தெரியாது. இன்னைக்கு ஒருத்தருக்கு வந்த கஷ்டம் , நாளைக்கு எனக்கும் வரலாம். இன்னைக்கு உங்ககிட்ட இருக்கிற சந்தோசம், நாளைக்கு உங்கள் பக்கத்து வீட்டுக் காரருக்கும் வரலாம். நாம யாருக்கும் கெடுதல் பண்ணாம இருந்தா மட்டும் போதாது. கண்ணு முன்னாலே கஷ்டப்படுறவங்களுக்கு, நம்மாலே முடிஞ்ச நல்லது பண்ணனும்!
மிருகங்களுக்கு கூட அந்த இரக்க குணம் இருக்கு! மனுஷனுக்கு??
ரொம்ப வசதியா இயற்கை நமக்கு இயல்பா கொடுத்த குணத்தை, ஈவிரக்கமே இல்லாமே நாம தொலைச்சிட்டோம்! தொலைச்சதே அந்த இரக்கப்படும் குணத்தைதான்.
ரோட்லே அடிபட்டுக் கிடந்தா கூட, எனக்கு என்னனு போற ஆளுங்க எத்தனை பேரு?? ஐயா விடுங்க, அது கூட பரவா இல்லை, Highways ஆக்சிடென்ட்ல, உசிருக்கு போராடுறவங்களுக்கு உதவி பண்ணாம, அவங்க கிட்ட இருக்கிற நகையை உருவுற அளவுக்கு , நாம மனிதத்தை தொலைத்து விட்டோம்!
“தம்பி, என்ன வேணும்னாலும் எடுத்துக்கோ, ஆனா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி , பக்கத்துல ஆஸ்பத்திரில மட்டும் சேர்த்திருப்பா”னு அவர் கெஞ்ச; இவன் என்ன நினைச்சானோ, பிழைச்சிட்டா அசிங்கம்னு நெனைச்சானோ தெரியலை..? நகையை மட்டும் பிடுங்கிட்டு ஓடிடறான்! 🙁
நமக்கு என்ன? அசிங்கபடாம இருந்தா போதும், என்ன வேணும்னாலும் தப்பு செய்யலாம்!
த்சோ. த்சோ.. னு புலம்பாதீங்க.. நமக்கும் கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு பணக்கஷ்டம் வந்தா, நாமளும் அப்படித்தான் இருப்போம்.. சொல்ல வர்றது இது தான்.
விபத்து நம்மில் யாருக்கும் வரக் கூடாது. கடவுள் ஆசீர்வாதத்தால், நாம யாருக்கும் அந்த மோசமான வேளை வர வேண்டாம். அப்படி ஒரு வேளை வந்தா – நேரத்தில உதவி கிடைக்கிற வகையில், நம்ம தர்மம் காப்பாத்தணும்.
ஐயா, ஒருவேளை நம்ம கண் முன்னாலே விபத்து நடந்து, உயிருக்கு துடிக்கிற ஜீவன்கள் இருந்தா, மன சாட்சியே இல்லாமே அவங்க போட்டு இருக்கிற நகைகளை அள்ளிக்கிடற அளவுக்கு, ஒரு ஈனத்தனமான நிலைமை வராத அளவுக்கு அந்த ஆண்டவன், நமக்கு அருள் புரியணும்..!
கஷ்டம் வந்தாதான் கடவுளுன்னு இல்லை. நல்ல விதமா இருக்கிறப்போவே, கடவுளை கும்பிடுங்க. முடியாதவங்களுக்கு உதவி பண்ணுங்க. பண உதவிதான்னு இல்லை. ஏழைப் பசங்களுக்கு, படிக்க சொல்லிக் கொடுத்தாக் கூட போதும். நாலு ஏழை பசங்களுக்கு, கல்விக்கடன் வாங்குவது சம்பந்தமா, உங்களுக்கு தெரிஞ்ச தகவலை சொன்னாக் கூட போதும். அதுக்கெல்லாம் நேரம் எங்கே சார் இருக்குனு கேட்காதீங்க..! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
“இந்த மாதிரி சேவைகளால, நீங்க கோடீஸ்வரன் ஆகாம போகலாம். ஆனா, உங்க வம்சமோ, சந்ததியோ – ஓஹோனு இருக்கும். உங்களோட பாவக் கணக்கு குறைஞ்சு, உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.”
எத்தனை பணக்காரங்க நிம்மதியா இருக்கிறாங்க? இந்த மாதிரி சின்ன சின்ன சேவை பண்ணிக்கிட்டு, உங்களோட அன்றாட கடமைகளையும் செஞ்சுக்கிட்டு வாங்க! உங்களைவிட நிம்மதியா, இந்த உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டாங்க! பணம் சம்பாதிக்க வேண்டாம்னு சொல்லலை.. வெறியோட சம்பாதிங்க.. ஆனா, நல்ல மனுஷனாவும் இருங்க.... அது ரொம்ப முக்கியம்!
சொல்வது எளிது, செய்வது அரிது என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க! சந்தோசம் வந்தா – ஊரையே கூட்டி கூப்பாடு போடுறதும், துக்கம் வந்தா, மூலையிலே சுருண்டு கிடக்கிறதும், நம்ம மனித இனத்துக்கே உரிய இயல்பான குணம். ஆனா, இதெல்லாம் கூடாதுன்னு சொல்றாங்க.
அதென்னப்பா.. எதை எடுத்தாலும், அப்படி செய்யக் கூடாது, அது எல்லாம் தப்புனே சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க.
நீங்க சந்தோசமா இருக்கிறீங்களா.. உலகத்துலே உள்ள மத்த எல்லாமே தப்பு. இல்லையா, அடி மேல் அடி! அதனாலே கவலையிலே இருக்கிறீங்களா? உலகம் ரொம்ப சரி, உங்க கிட்டே தான் எல்லா தப்பும் இருக்கு. அப்போ, நீங்க பண்றது தப்புன்னு தானே சொல்லணும்!
கீழே உள்ள கட்டுரை, எப்போதோ நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இருந்தது. அருமையான கட்டுரை. வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், எப்போவாவது இந்த கட்டுரையை நினைச்சுப் பார்ப்பீங்க.. வாழ்த்துக்கள்!
வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள்..
எல்லாவற்றையும் நாம் ஒன்றுபோல் பார்க்க வேண்டும்.. துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சரி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. துன்பம் வரும்போது அழுகை வராமல் இருந்தால் சரிதான் என்பதல்லவா நமது நிலைமை.
அது எப்படி துன்பம் வரும்போது அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவோ, இன்பம் வரும்போது வானத்தை தொட்டு வருவது போல் பறப்பதோ இல்லாமல் நம்மால் இருக்க முடியும்?
அதற்கு ஒரு மந்திரம் உண்டு. மூன்று வார்த்தை மந்திரம் தான் அது. இதனை என் வாழ்க்கையில் நான் பல முறை கடைபிடித்துள்ளேன். பல சமயங்களில் இடி விழுந்தது போன்ற பிரச்சினைகளில் இந்த மூன்று வார்த்தையை உச்சரித்த வண்ணம் இருப்பேன். அதுவே எனக்கு பலம் என்றும் எண்ணியுள்ளேன்.
அதை உங்களுக்கும் கூறுகிறேன். முயற்சித்துப் பாருங்கள். இதற்கு ஒரு கதை உண்டு. (பல ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒரு தகவலில் கேட்டது)..
ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.
துறவி கிளம்பும்போது, மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.
மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
பல காலங்கள் கழிந்தன. அப்போது,
ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!
இந்த பாடலின் பொருள்:
”பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் – புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!”
இப்படியான ஒரு வேதனைதான் அந்த மன்னனுக்கும் ஏற்பட்டது. அப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.
அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் “இதுவும் கடந்து போகும்” என்று 3 வார்த்தைகள் இருந்தன..!
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.. அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.
ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.