×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

அக்னீஸ்வரர் கோவில், திருக்கஞ்சனூர்


Agneeswarar Temple Kanjanur History in Tamil

அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில், கஞ்சனூர்

 

சிவஸ்தலம் பெயர் திருக்கஞ்சனூர்
இறைவன் பெயர் அக்னீஸ்வரர்
இறைவி பெயர் கற்பகாம்பாள்
தல விருட்சம் பலா, புரசு
தீர்த்தம் அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
ஊர் கஞ்சனூர்
மாவட்டம் தஞ்சாவூர்

Kanjanur Sukran Temple History in Tamil

அக்கினீஸ்வரர் கோவில் வரலாறு

🛕 இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.

ஹரதத்தர் வரலாறு: முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர்.

🛕 வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

🛕 ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

kanjanur temple harathathar

கஞ்சனூர் கோவில் அமைப்பு

🛕 கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிரகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார்.

🛕 மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத் தக்கது. நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில் இறைவனை திருமால், பிரம்மன், சந்திரன், கம்சபாண்டியன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக வரலாறு உள்ளது. இறைவன் பிரம்ம தேவருக்கு திருமண கோலம் காட்டி அருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார்.

தலத்தின் சிறப்பு

🛕 நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரன் தலமாக போற்றப்படுகிறது.

🛕 பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம்.

🛕 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம்.

🛕 பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்தருளிய தலம்.

🛕 அக்கினிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தருளிய தலம்.

🛕 பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும், சந்திரனின் சாபம் நீங்கியதும் இத்தலத்தில் தான்.

🛕 கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.

kanjanur temple parasarar

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:

மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தலையேந்து கையானை என்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்
இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

நாரணனும் நான்முகனு மறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பிரார்த்தனை: உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.

agneeswarar temple kanjanur sukran history in tamil

Kanjanur Agneeswarar Temple Festivals

திருவிழா: மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி.

Kanjanoor Temple Timings

திறக்கும் நேரம்: காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.

Kanjanoor Sukran Temple Address

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

Aduthurai-Kuthalam Road, Kanjanur, Tamil Nadu 609804



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை