×
Thursday 29th of September 2022

Nuga Best Products Wholesale

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர் (கீழப்பழுவூர்)


Alanduraiyar Temple History in Tamil

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில், கீழப்பழுவூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவஸ்தலம் ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், கீழப்பழுவூர்
மூலவர் ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர்
அம்மன் அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் பிரம்ம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
புராண பெயர் திருப்பழுவூர்
ஊர் கீழப்பழுவூர்
மாவட்டம் அரியலூர்

Vadamoolanathar Shiva Temple Thirupaluvur

வடமூலநாதர் திருக்கோவில் வரலாறு

🛕 பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இவ்வூர் மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான வடமூலநாதர் (ஆலந்துறையார்) கோவில் உள்ளது.

🛕 கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்”, என்றார்.

🛕 அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகி எனப்படுகிறாள்.

alanduraiyar temple gopuram

கோவில் அமைப்பு

🛕 இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது.

🛕 சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டியுள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீ வடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது.

🛕 இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன் அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். கருவறை சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர், சப்தமாதா, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

அருந்தவ நாயகி அம்மன்

🛕 அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.

alanduraiyar temple arunthava nayagi

🛕 ஆலயத்திற்கு வெளியே தல மரமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், கொள்ளிடமும் விளங்குகின்றன. பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும்.

🛕 திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மலையாள அந்தணர்கள் அக்காலத்தில் பழுவூரில் வாழ்ந்து வந்தனர் என்பதை தனது பதிகத்தின் 4வது மற்றும் 11வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

பாடல் 4பாடல் 11
எண்ணும் ஓர் எழுத்து மிசையின் கிளவி தேர்வார்
கண்ணுமுத லாய கடவுட்கு இடம் இதென்பர்
மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுது ஏத்திப்
பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

பொழிப்புரை: எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

அந்தணர்களான மலையாளரவர் ஏத்தும்
பந்தமலி கின்ற பழுவூரரனை யாரச்
சந்தமிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

பொழிப்புரை: மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.

alanduraiyar temple vadamoolanathar

Alanduraiyar (Vadamoolanathar) Temple Festival

திருவிழா: பங்குனி உத்திரம். பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். மேலப்பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

பிரார்த்தனை: பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்: இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்குதல்.

Alanduraiyar (Vadamoolanathar) Temple Timings

🛕 இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

ஆலந்துறையார் (வடமூலநாதர்) கோவிலுக்கு  எப்படிப் போவது?

🛕 அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

Alanduraiyar Temple Address

🛕 அருள்மிகு ஆலந்துறையார் கோவில், கீழப்பழுவூர் அஞ்சல், அரியலூர் மாவட்டம் – 621707

Contact Number: +91-9943882368

 Leave a Reply

Your email address will not be published.

you may also like

  • September 26, 2022
உத்தமர்சீலி ஸ்ரீ கைலாச நாதர் கோவில்
  • September 24, 2022
உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் (செங்கனிவாய் பெருமாள்)
  • September 15, 2022
திருவாதிரை விரதம் & ஆருத்ரா தரிசனம்