Ayyampalayam Sivasubramaniya Swamy Temple

ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்

🛕 ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர், வெளிநாட்டவரைக் கவர்ந்த மலைக்கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.

🛕 இந்த ஆலயத்தின் வரலாறுக்குச் சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த மலை மீதுள்ள மூலவர் சிலை பல தலைமுறை களாக இருந்துள்ளதை ஊர்ப் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். பழங்காலத்தில் இவ்வழியாக மாட்டு வண்டியில் வரும் பயணிகள் இந்த மலையில் தங்கி உணவு அருந்திவிட்டு, சுனை நீரைப் பருகி ஓய்வெடுத்து, முருகனை வணங்கிச் செல்வது வழக்கம்.

🛕 படிகள் இல்லாதிருந்த இந்த மலைக்கு, படிகள் அமைத்து முருகனுக்கு தனி ஆலயம் எழுப்ப ஐயம்பாளையம் மக்கள் விரும்பினர். அதன் பயனாக, சிவசுப்பிரமணிய அறக்கட்டளையை ஏற்படுத்தினர். ஊர்மக்கள் ஒத்துழைப்போடு, பலரின் ஆதரவினாலும், திருவண்ணாமலை பேரூர் ஆதினத்து சோணாசல அடிகளின் வழிகாட்டுதலாலும், திருப்பணி இனிதே நடந்து முடிந்தது. ஆலய கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

Ayyampalayam Murugan Temple

ஆலய அமைப்பு

🛕 ஐயம்பாளையம் ஊரின் மேற்குப்புறத்தில் தனிக்குன்றில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் போது, எழிலாகக் காட்சிதரும் மலை இது. மலையின் அடிவாரத்தில் சம்பந்த விநாயகர், அருகே இடும்பன் சன்னிதி உள்ளது. அதன் அருகே பழமையான நாகம் ஒன்று பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இது திருச்செங்கோடு மலையில் உள்ள நாகத்தினை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது.

🛕 இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசிக்கச் செல்ல 61 படிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் கிழக்கு முகமாய் சிவசுப்பிரமணியர், தன் துணையான வள்ளி-தெய்வானை ஆகிய இரண்டு தேவியர்களோடு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த மலையில் இருந்து கிழக்கு நோக்கினால் அண்ணாமலையும், தெற்கு நோக்கினால் பர்வத மலையும் காட்சியளிக்கின்றன. இவை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

🛕 இவர் ஒரே கல்லால் ஆன தெய்வ வடிவமாகக் காட்சி தருகிறார். பொதுவாக சிலா வடிவங்கள் தனித் தனியாகவும், திருவாசி தனியாகவும் காணப்படும். ஆனால், இங்கே ஒரே கல்லில் இரண்டும் வடிக்கப்பட்டிருப்பது, கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. இதற்கு மேலாக மயில் நின்ற கோலத்தில், நாகத்தை கவ்வியபடி இருக்கும் காட்சி தத்ரூபமாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் சிற்பியின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த சிலை வடிவம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

🛕 இந்த மலை மீது உள்ள சம்பந்த விநாயகர் அருகே வலதுபுறம் இடும்பன் சுனையும், முருகன் ஆலயத்தின் பின்புறம் இளையனார் சுனையும் அமைந்துள்ளன. திருக்கோவிலின் முக்கியத் திருவிழா ஆடிக்கிருத்திகையே ஆகும். அன்றைய தினம் மார்பு மீது கல் உரலை வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வேகும் வடைகளை வெறுங்கைகளால் எடுத்தல் போன்ற அதிசய நிகழ்வுகளை சில பக்தர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

🛕 இது தவிர, அன்று மாலை கரகம் எடுத்து தீ மிதித்தல், அலகு குத்தி தேர் இழுத்தல், செக்காட்டுதல், பறவைக் காவடி எடுத்தல், உடல் முழுவதும் எலுமிச்சைப்பழம் தொங்க விடுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. இது தவிர விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், கந்த சஷ்டி என மற்ற விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்படுகின்றன.

அதிசய நேர்த்திக் கடன்கள்

🛕 இத்தலத்தில் ஆடிக்கிருத்திகைக்கு முன்பாக 9 நாள் காப்புக் கட்டிய பக்தர், ஆடிக்கிருத்திகை அன்று மாலை 3 மணி அளவில் வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி அதில் வடை மாவைப் போடுவார். வடை வெந்தவுடன், அதை சல்லிக் கரண்டியில் எடுப்பதற்குப் பதிலாக, தனது கரங்களைக் கொண்டே எடுத்து தட்டில் போடுவார்.

🛕 இதனால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்து வருகிறார்கள். அப்படி எடுக்கப்படும் வடைகள் ஏலம் விடப்படுகிறது. அவை நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை ஏலம் போவதைப் பார்க்க முடியும். இந்த வடைகளை சாப்பிடுபவர்களுக்கு, தீராத நோய்கள் நீங்கும். திருமணம் நடைபெறும், மகப்பேறு உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

🛕 இதே போல் முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், தன்னுடைய மார்பில் கல் உரலை வைத்து, அதில் மஞ்சளைப் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். அந்த தூளை பக்தர்கள் மீது வீசுவார்கள். அது உடலில் படும் போது பலவித குறைபாடுகள் நீங்கி, நலம் பெறலாம் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.

Ayyampalayam Murugan Temple Timings

🛕 இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

Also read,

Ayyampalayam Sivasubramaniya Swamy Temple Address

🛕 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐயம்பாளையம் தலம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை- செங்கம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேற்கே 9 கி.மீ. தொலைவில் ஐயம்பாளையம் இருக்கிறது.