×
Saturday 1st of October 2022

Nuga Best Products Wholesale

பகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி


Kanyakumari Bhagavathi Amman Temple History in Tamil

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி

மூலவர் தேவிகன்னியாகுமரி, பகவதி அம்மன்
உற்சவர் தியாகசௌந்தரி, பால சௌந்தரி
தீர்த்தம் பாபநாச தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குமரிக்கண்டம்
ஊர் கன்னியாகுமரி

பகவதி அம்மன் புராண வரலாறு

முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.

“தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும்” என்று கூறிய திருமால் தேவர்களைப் பராசக்தியிடம் சரண்புக வழி கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டாள். பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாட்கள் கடந்தன. கன்னிதேவி மணப்பருவம் அடைந்தாள். சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்ததால், இத்திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார்.

அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஓர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிச் சிவபெருமான் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஓர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவுப் பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்.

இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும்போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

Kanyakumari Bhagavathi Amman Temple Special

 • குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை  தேவியின் திருப்பாதம்  என்று அழைக்கிறார்கள்.
 • பரசுராமர் தேவிகுமரியின் தெய்வ உருவை இங்கு அமைத்து வழிபட்ட தலம். இக்கோவில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.
 • கடல் முனையில் இருந்தாலும் கோவிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.
 • முன்பிருந்த கோவில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக நிறுவனம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
 • 1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
 • கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்கப் படகு போக்குவரத்து வசதி உள்ளது. கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.
 • இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
 • 1984ல் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.

Kanyakumari Bhagavathi Amman Temple Festival

 திருவிழா:  புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாள், வைகாசி விசாகம் – 10 நாள், தேரோட்டம், தெப்போத்சவம்:

10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.

 பிரார்த்தனை:  கன்னிகா பூசை, சுயம்வர பூசை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.

காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.

இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.

 நேர்த்திக்கடன்:  அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான திருமுழுக்காட்டு, ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.

வட இந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோவில். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.

Also read: Tithi Nitya Devi in Tamil

Kanyakumari Bhagavathi Amman Temple Timings

Morning Worship Timing
06.00 AM to 11.00 AM
Evening Worship Timing
04.00 PM to 08.00 PM

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Bhagavathi Amman Temple Kanyakumari Address

Temple Road, Kanyakumari, Tamil Nadu 629702

+914652246223


Leave a Reply

Your email address will not be published.

you may also like

 • September 26, 2022
உத்தமர்சீலி ஸ்ரீ கைலாச நாதர் கோவில்
 • September 24, 2022
உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் (செங்கனிவாய் பெருமாள்)
 • September 13, 2022
காசிக்கு இணையான சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்