- September 24, 2024
உள்ளடக்கம்
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.
ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள். அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை. காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் சொர்ணபுரி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும். இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் சுவாசினி சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீ காயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது- உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீ துர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ் ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீ காயத்ரி, ஸ்ரீ துர்கா, யாகசாலை, ஸ்ரீ நடராசர், ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீ வீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீ விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள். இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.
கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. காளிகாம்பாலுக்கு நெய்தல் நில காமாட்சி என்றும் ஒரு பெயர் உண்டு. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இத்தலத்தில் மொத்தம் 33 பஞ்சலோக சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை. தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும். இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
Morning Worship Timing: 06.00 AM to 12.00 PM – Evening Worship Timing: 4.00 PM to 9.00 PM
Also read,
212, தம்புச்செட்டி தெரு, மண்ணடி, ப்ராட்வே, சென்னை-600001.
Chennai Kalikambal Temple Contact Number: +914425229624