×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

கணபதி அக்ரஹாரம் – சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி


ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐங்கரன்

பிடித்து வைத்து வணங்கும் எளிமையான பக்திக்கே ஓடோடி வந்து அருள் புரியும் ஆதார தெய்வமே கணபதி. யாவருக்கும் இனிமையானவனாக இரு கொத்து அறுகம்புல்லுக்கே அகமகிழும் ஆதிசக்தியும் இவர்தான்.

நம் வீட்டுப் பிள்ளைபோல நமக்குள் ஒருவராக அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பார். ஔவைப்பாட்டி முதல் இரண்டு வயது குழந்தை வரை எல்லோரையும் வசீகரிக்கும் ஞானக் குழந்தையும் இவரே. எல்லோருக்குள்ளும் உறைபவரான ஞானமூர்த்தி, பல தலங்களில் பேரருள் பெருக்கி அமர்ந்திருப்பார்.

அப்படிப்பட்ட தலங்கள் இரண்டு தஞ்சையில் உள்ளன. ஒன்று கணபதி அக்ரஹாரம்; மற்றொன்று சாந்தாசிரமம். முதலில் கணபதி அக்ரஹாரத்து ஐங்கரனை தரிசிப்போம் வாருங்கள்.

Ganapathi Agraharam Temple History in Tamil

அகத்திலே கயிலை அளவு உயர்ந்த ஞானம் உள்ளவராக இருந்தாலும் புறத்தில் குறுமுனியாக தோற்றம் கொண்டிருந்தார் அகத்தியர். அவர் உருவத்தைக் கண்டு எள்ளிய காவிரி தன்னையே உயர்ந்தவளாகக் கருதினாள். நெளிந்து செல்லும் தன் அலங்கார அசைவுகளில் ஆணவம் கொண்டாள். அதை அறிந்த அகத்தியர் அவளை சிறு கமண்டலத்தில் அடக்கினார்.

ஒரு மாபெரும் சக்தியாக, பரந்த பிரதேசத்தையே ஆக்கிரமித்துச் செல்லும் தன் சக்தியைக் குறுக்கி கமண்டலத்தில் அவர் அடைத்ததில் அவள் கோபம் கொண்டாள். உள்ளிருந்தபடியே கணபதியை தொழுதாள். உடனே வெளியே கடும் பஞ்சமும், வறட்சியும் பெருகின. உயிர்கள் காவிரி நீரில்லாது வாடின. அனைவரும் விநாயகரைச் சரணடைந்தனர்.

பிள்ளையார் அகத்தியரை நோக்கிச் சென்றார். அதேநேரம் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார் குறுமுனி. கணபதி காக்கை உருவம் எடுத்தார். கமண்டலத்தை தட்டி விட்டார். காவிரி அன்னை பெருகி ஓடினாள். நானிலத்தில் நீரைப் பாய்ச்சினாள். அகத்தியர் அதிர்ச்சி அடைந்தார். இதை யார் செய்திருப்பார் என கண்கள் மூடி ஆராய்ந்தார்.

அவர் மனதில் கணபதிக் குழந்தை வினயமாக சிரித்தது. ஆனாலும் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஆணவம் மிகுந்த காவிரி இப்போது விடுதலையாகிவிட்டதில் அகத்தியருக்குக் கோபம். அவர் காவிரிக் கரையோரமாக நடந்தார். ஐயாறுகளும் பாய்ந்து ஐயாறப்பனாக ஈசன் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அகத்தியருக்கு திருக்காட்சி கொடுத்து ஆட்கொண்டார் கணபதி.

கமண்டலத்தில் அடைத்து வைத்த சிறிது நேரத்தில் கர்வம் கலைந்ததால், உலகைப் பஞ்சத்திலிருந்தும் வறட்சியிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அவள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை கணபதி அகத்தியருக்கு உணர்த்தி ஆட்கொண்டார்.

உடனே அங்கேயே விநாயகரை ஸ்தாபனம் செய்தார் மனம் தெளிந்த முனிவர். கௌதம மகரிஷி ஆசையாக ஓடி வந்து பூஜைகள் புரிந்து கொண்டாடி மகிழ்ந்தார். யுகம்தோறும் அண்டியவர்களுக்கு அபயம் அளித்து அமர்ந்த தலத்தை கணபதி அக்ரஹாரம் என்று அழைத்தனர். பஞ்சத்தை நீக்கிய தலமென்பதால் அன்ன கோசல க்ஷேத்ரம் என்றழைத்தனர்.

பாரதமெங்கும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இவ்வூர் மக்கள் மிக வித்தியாசமாக கொண்டாடுகின்றனர். களிமண் சிலைகளாகவும், வேறு வடிவங்களிலும்தான் வழக்கமாக பிள்ளையார் பூஜையை செய்வார்கள். ஆனால், இவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியன்று தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதில்லை.

ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பக்தர்கள் மகாகணபதியின் சந்நதிக்கருகில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக வந்து அர்ச்சனைக்கு சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் கையில் மூடிய பாத்திரம் இருக்கிறது.

அதற்குள் பூரண ஞான சொரூபியான விநாயகனுக்கு அர்ப்பணிக்கப்பட பூர்ணக் கொழுக்கட்டை பிள்ளையாரின் திருப்பாதத்தில் அதனை வைத்து நிவேதனம் செய்கிறார்கள். பிறகு அந்த விநாயகர் பிரசாதத்தை அனைவருமாக பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பாரம்பரிய வழக்கம்!

யார் வீட்டிலும் தனித்தனி பூஜையோ, சிலைகளோ இல்லை. ஏனெனில், “இந்தத் தலமே ஒரு வீடுதான். இந்த வீட்டிற்கு கணபதி அக்ரஹாரம்” என்று பெயர். அதற்குத் தலைமகன் மகாகணபதி.

அவனே அந்த இல்லத்தின் அருட் செல்வனாகவும் விளங்குகிறான் என்று அங்கிருப்பவர்கள் சொல்லும்போது கண்களில் நீர் திரள்கிறது; மெய்சிலிர்க்கிறது. அதுமட்டுமல்ல, கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த ஆண் பிள்ளைகள் இந்த கிராமத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணத்திற்காக வெளியே சென்றாலும் கூட, வேறு எந்த பிள்ளையாரையும் வழிபட மாட்டார்களாம்.

இத்தல மகாகணபதியின் புகைப்படமோ, ஓவியமோ ஏதேனும் ஒன்றை வைத்து அவருக்கே கொழுக்கட்டையை நிவேதனம் செய்வார்களாம்.

கணபதி அக்ரஹாரம், பெரிய கிராமம். காவிரி சுழித்துக் கொண்டோடும் எழில் கொஞ்சும் பூமி. தெய்வங்களும், ஞானிகளும், மகரிஷிகளும் விரும்பி தங்கிச் செல்லும் தீர்த்தக் கட்டத்தைக் கொண்டது. மூன்று ஸ்நான கட்டங்களிலும் மடம் உண்டு.

அவற்றில் கீழ் துறையிலுள்ள மடம் பெரியது. இங்கு விஜயம் செய்யும் துறவிகள் பலரும் கீழ்த்துறை மடத்தில் தங்குவார்கள். சாதுர்மாஸ்ய, வியாஸ பூஜைகள் நடக்கும். சங்கர ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படும். சங்கர ஜெயந்தி சமயத்திலும், சாதுர்மாஸ்ய சமயத்திலும் பல வித்வான்கள் கிராமத்திற்கு வருகிறார்கள்.

கணபதி அக்ரஹாரம் கிராமத்தினரால் இத்திருக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிறு கோவிலாக இருந்ததை தற்போது முருகன், கஜலட்சுமி, விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் மகாலிங்க சுவாமி என்று பல சந்நதிகளுடன் விரிவுபடுத்தியுள்ளனர்.

கோவிலின் உட்புறத்தில் கணபதி சித்தி, புத்தி திருக்கல்யாண கோலத்தில் உள்ளது போல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் கணபதியின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. அனைத்து விசேஷ மற்றும் பண்டிகை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இத்திருக்கோவிலில் விழா திருக்கோலம்தான். இங்கு தெய்வத்தை குழந்தையாக பாவிக்கின்றனர். குழந்தையும் தெய்வமாக அருளைச் சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து – திருவையாறு வழியில் அய்யம்பேட்டைக்கு போகும் பாதையில் உள்ளது இக்கோவில். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. 

Sandhasiramam Uchishta Ganapathi Temple History in Tamil

அடுத்தவர் சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி. கணபதி அக்ரஹாரத்தில் மகாகணபதியாக எழுந்தருளியவர், தஞ்சையில் தன் இஷ்டம்போல உச்சிஷ்ட கணபதியாக நிலைபெற்றிருக்கிறார். எல்லா திசை நோக்கியும் நீக்கமற அருள்பாலிக்கிறார்.

உச்சிஷ்ட கணபதி அமர்ந்த தலத்திற்கு சாந்தாசிரமம் என்று பெயர். அதை நிறுவியவர் சுந்தரேச சர்மா என்ற பூர்வாசிரம பெயர் கொண்ட ஸ்ரீராமாநந்தேந்திர சுவாமிகள். ராமர் மீதுள்ள தாளாத பக்தியால் 300 கீர்த்தனைகளை இயற்றியவர் இவர். காஞ்சி மகா பெரியவரால் ‘ராமப் பிராண’ என்று பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். மருவூர் கிருஷ்ண ஐயங்காரிடம் ரட்சை கட்டிக் கொள்ள ஒரு முறை சுந்தரேச சர்மா சென்றிருக்கிறார். அவரும் காதில் ஒரு மந்திரத்தை ஓதி, அதை எழுதியும் கொடுத்தார்.

ஆனால், காகிதமும், காதில் ஓதிய மந்திரமும் காற்றோடு போயின. ஒருநாள் சர்மாவின் கனவில் ஒரு யானை துரத்தியது. நடுங்கி அவர் ஒதுங்க, அருகே வந்து அரவணைத்தது. மகிழ்ச்சியில் ஆழ்ந்த சர்மா, மறுநாள் ஒரு வேதியரிடம் தான் கண்ட கனவைச் சொன்னார். அவரோ, விக்னேஸ்வர மந்திரத்தை விடாது ஜபிக்குமாறு அறிவுறுத்தினார். அதை நினைவுபடுத்தவே யானை ரூபத்தில் விநாயகர் வந்துள்ளார் என்றார். ஐயம் தெளிந்த சர்மா மீண்டும் மந்திரத்தைத் தேடினார்.

அப்போது அவருக்கு கிடைத்ததுதான் உச்சிஷ்ட கணபதி மந்திரம். கிருஷ்ண ஐயங்கார் உபதேசித்ததும் அதுதான் என்று தெளிந்தவர், உச்சிஷ்ட கணபதியின் விக்கிரகத்தை தேடி அலைந்தார். ஒருமுறை சிதம்பரம் சிற்சபையில் நடராஜரை தரிசித்து திரும்பியபோது அங்கு சுவரோரம் இருந்த உச்சிஷ்ட கணபதியின் உருவம் அவரை பரவசப்படுத்தியது. உச்சிஷ்ட கணபதி தில்லைக் கூத்தனின் சந்நதியில் அவரைத் தடுத்தாட் கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மயூர க்ஷேத்திரம் எனும் விநாயகர் ஆலயக் கோபுர பாணியிலேயே இங்கு விமானத்தை நிறுவினார்.

1958ம் ஆண்டு ஆலயம் முழுமையடைந்தது. மயூர க்ஷேத்திர விநாயகர் வடிவிலேயே ஒரு விக்கிரகம் கிடைத்தது. அதையும் தனி சந்நதியில் பிரதிஷ்டை செய்தார். ராமாநந்தேந்திர சுவாமிகள் தமது 99 – வது வயதில் முக்தி அடைந்து விட்டார். அவருக்குப் பிறகு ராம்பாவு சுவாமி அவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். உச்சிஷ்ட கணபதி, விநாயகப் பெருமானின் 16 முக்கிய அம்சங்களில் ஒன்று.

தேவி நீல சரஸ்வதி சமேதராக அவர் எழுந்தருளியிருக்கும் திருவுருவ அமைப்பே உச்சிஷ்ட கணபதி. உச்சிஷ்ட என்றால் எச்சில் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சில்தான். இவ்வுலகில் எது இருந்தாலும், இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும், எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான்.

அந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்ம சொரூபம்தான். சுத்தம் – அசுத்தம் என்ற இருவேறு நிலைகளைக் கடந்தவனே உச்சிஷ்ட கணபதி.

கருவறையில் நீல சரஸ்வதி தேவியை மடி மீது வைத்துள்ள உச்சிஷ்ட கணபதியை தரிசிக்கிறோம். துர்க்கையை வழிபடுவதால் கிடைக்கும் வீரம், லட்சுமியை வழிபடுவதால் கிடைக்கும் தனமும், செல்வமும், சரஸ்வதியை வணங்குவதால் கிடைக்கும் அறிவும், படிப்பும், திறமையும், முக்தி உள்ளிட்ட அனைத்தும் உச்சிஷ்ட மகா கணபதியை வணங்கி வழிபடுவதால் கிடைக்கும்.

உச்சிஷ்ட கணபதி சகல தெய்வங்களின் சக்திகளையும் தன்னிடத்தே கொண்டவர். அப்பேற்பட்ட அரிய கணபதியை வணங்கி வலம் வருகிறோம். கருவறைக்கு வெளியே காவலாக சங்கநிதி, பதுமநிதி உள்ளார்கள். உள் பிராகாரத்தில் அஷ்டதிக் பாலகர்களோடு துர்க்கா தேவியையும் தரிசிக்கிறோம். சந்நதிக்குள்ளேயே ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானே, பார்வதிக்கு உச்சிஷ்ட கணபதியின் ஸகஸ்ரநாமத்தை விரிவாகக் கூறியுள்ளார்.

என்றும் நீங்காத கலைஞானம், குன்றாத செல்வம், நிறைந்த பேரறிவையும் உச்சிஷ்ட கணபதி அளிப்பார் என்பது பக்தர்களின் அனுபவம். சப்த மாதாக்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தரிசனம் தருகிறார்கள். கோபுரத்தில் மகாகணபதியின் பதினாறு அவதாரங்களை தரிசிக்கலாம். அருகே விஜய கணபதிக்குத் தனியாக ஒரு சந்நதி உள்ளது. உச்சிஷ்ட கணபதி, தஞ்சை ஸ்ரீநிவாசபுரம் கிரிரோட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

 

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை