- September 19, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர் | ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில், குடிமல்லம் |
---|---|
மூலவர் | பரசுராமேஸ்வரர் |
அம்மன்/தாயார் | ஆனந்தவல்லி |
ஊர் | குடிமல்லம் |
மண்டலம் | ஏர்பேடு |
மாவட்டம் | சித்தூர் |
மாநிலம் | ஆந்திரா |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து 13 கிமீ தொலைவிலும், காளஹஸ்தியுலிருந்து 35 கி. மீ தொலைவிலும் உள்ள சிறிய கிராமம் குடிமல்லம். இங்கு ஸ்வர்ணமுகி ஆற்றங்கறையின் அருகில் அமைந்துள்ளது அழகிய பரசுராமேஸ்வரர் ஆலயம். இது மிகவும் பழமையான 2ம் அல்லது 3ம் நூற்றாண்டு ஆலயம் ஆகும். ரிக் வேத காலத்திற்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள லிங்கம் உலகத்திலேயே முதல் லிங்கம் என்று கூறப்படுகிறது.
லிங்கம் என்பதன் பொருள்
“லிங்” என்றால் உயிர்களின் தோற்றம்.
“கம்” என்றால் உயிர்களின் ஒடுக்கம்.
லிங்கமாகிய சிவன் உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் உரியவராக இருக்கிறார். இங்கு மும்மூர்த்திகளும் ஒன்றாக உள்ளனர். இங்கு அடிபாகத்தில் பிரம்மா யக்ஷ ரூபத்திலும், அதற்கு மேல் விஷ்ணு பரசுராமர் ரூபத்திலும், மேலே சிவபிரான் லிங்க ரூபத்திலும் உள்ளனர். இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராம் தன் தந்தையின் ஆணைப்படி தாயின் தலையை துண்டிக்க, பின் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறான். தாயை திரும்ப பெறுகிறான். பிராயச்சித்தம் தேடி குடிமல்லம் என்ற இடத்தில் சிவபெருமானை தேடி செல்கிறார். காட்டின் நடுவில் சிவலிங்கத்தைக் கண்ட பரசுராம் அங்கு ஒரு குளம் வெட்டி அதில் மலரும் ஒற்றைப் பூவை தினமும் இறைவனுக்கு படைக்கிறார். அதைப் பாதுகாக்க சித்தரசேனா என்ற யக்ஷனை காவல் வைக்கிறார்.
ஒரு நாள் சித்திரசேனா சிவபெருமான் மேல் உள்ள பாசத்தினால் அந்த ஒற்றைப் பூவை கடவுளுக்கு அர்பணிக்கிறார். இதை அறிந்த பரசுராம் கோபம் கொண்டு சித்திரசேனனையை துவம்சம் செய்ய முற்படும்போது சிவபிரான் தோன்றி இருவரையும் ஒன்றிணைத்து தன்னுடன் ஐக்கியமாக்கி கொள்கிறார். பின் சித்திரசேனனை பிரம்மாவாகவும் பரசுராமரை விஷ்ணுவாகவும் மேலே சிவலிங்கமாகவும் தோன்றுகிறார். இச்சிலை பள்ளத்திலிருந்து 6 அடி உயரத்தில் வித்யாசமான பழுப்பு நிற கல்லில் உருவாக்கப்பட்ட உருவம். இங்கு ஆவுடை கிடையாது. சதுர வடிவ அர்த பீடம், கருவறை அரைவட்டம். அதனால் இது லிங்க கீர்த்தி விமானம் எனப்படுகிறது.
கருவறை கஜபிரஷ்ட வடிவம் கொண்டது. பள்ளத்தில் உள்ளதால் முதலில் குடிபள்ளம் (குடி என்றால் கோவில்) என்று அழைக்கப்பட்டு நாளடைவில் குடிமல்லம் என்று மறுவியது. இந்தப் பள்ளத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் வந்து சிவபெருமான் மீது விழும். 2005 ம் ஆண்டு வந்த நீர் 2065ல் வரும் எனக் கூறப்படுகிறது. இது கிழக்கு நோக்கி உள்ள கோவில். தொல்துறை கீழ் உள்ளதால் வழிபாடு கட்டுப்பாட்டுடன் குறிப்பிட்ட அளவிலே நடக்கிறது. 2009க்குப் பிறகு மக்கள் வழிபாடு அதிகமாகியது.
கோவிலில் பெரிய விஸ்தாரமான தோட்டம், புல்வெளி, மலர் செடிகள் கொண்டு மனதிற்கு குளிர்ச்சியாக உள்ளது. முருகன், சூரிய பகவான், ஆனந்தவல்லி அம்மன் எல்லோருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சந்தான பாக்யம் அளிக்கும் தலம் என்பதால் நெல்லி மரத்தில் தொட்டில்கள் கட்டி மக்கள் வணங்குகின்றனர். ரம்யமான சூழலும் மன நிம்மதியும் அளிக்கும் ஆலயம். எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஆலயம்…
குடிமல்லம் சிவன் கோவில் திறக்கும் நேரம்: குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில் காலை 06:00 முதல் மாலை 08:00 வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Gudimallam Shiva Temple Contact Number: +91 9490181917, +91 8578288280
ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில், குடிமல்லம், சித்தூர், ஆந்திர பிரதேஷ் 517526.
எழுதியவர்: உமா