- September 24, 2024
உள்ளடக்கம்
🛕 ஆயிரம் வருடங்களைக் கடந்தும் கலைநயத்துடன் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய கோவில் வெட்டுவான் கோவில். கழுகுமலை வெட்டுவான் கோவில் தலைகீழாக கட்டப்பட்ட கோவில்; தமிழர்களை தலை நிமிர வைத்த கட்டிடக் கலை கொண்ட கோவில்.
🛕 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை பேரூராட்சி. இந்த ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ பயணித்தால் கழுகுமலை என்று அழைக்கப்படும் அரைமலையை அடையலாம். இந்த மலைமீதுதான் மலைக் குடைவரைக் கோவிலாக ஒற்றைப் பாறையில் (Monolithic Rock Temple) வெட்டுவான் கோவில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது “வெட்டுவான் கோவில்” என்று அழைக்கப்படுகிறது.
🛕 இக்கோவில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது. தமிழகத்தின் “எல்லோரா” என்று இந்தக் கோவிலை அழைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு தனிக் கோவில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோவில்.
🛕 பொதுவாக ஒரு கோவிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்தக் குடைவரை கோவில் மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.
🛕 அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். தலைகீழாக கோவிலைக் கட்ட மலையை குடைந்து, தமிழர்களின் கட்டிட திறமையை தலை நிமிரச் செய்துள்ளனர்.
🛕 மலைமீதிருந்து பார்த்தால் இந்தக் கோவில் கண்ணுக்கே தெரியாது. கிடைமட்டத்திலிருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவில் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கிறது.
🛕 சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோவிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. முற்றுப்பெறவிட்டாலும் கூட, தெய்விகத் தன்மையுடன் பிரம்மா, திருமால், தேவகன்னியர்கள், பூத கணங்கள் என்று பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மங்களின் சிற்பங்கள் அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் கோவில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பம் பேரெழில் வாய்ந்தது. நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
🛕 இப்போது கோவில் கருவறைக்குள் சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற பாண்டிய நாட்டுப் படைகள் இந்த ஊரில் தங்கியிருந்தது பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
🛕 கோவிலே ஒரு பகுதி நிறைவடையாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கோவில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. கோவில் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்ததால் அப்படியே விடப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.
🛕 மலையின் மற்றொரு பகுதியில் சமணர்கள் சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பல பாறைகளின் செதுக்கப்ப்ட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
🛕 இதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் 90-க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் மலையை ஒரு மிகச் சிறந்த சிற்பக்கூடமாக காட்சி அளிக்கிறது.
🛕 “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார்” என்பார்கள் அது போல கழுகுமலையில் கீழே முருகன் குடைவரை கோவில் உள்ளது.
🛕 இந்த கழுகுமலையில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவிலில் ஒன்றாக இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழின் மூலம் பாடியுள்ளார்:
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடிது கொடிததால் வருத்த மாயுறு …… துயராலே
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி …… முடியாதே
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு …… மருகோனே
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய …… பெருமாளே.
🛕 இந்த திருத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி பார்த்தபடி காட்சி அளிக்கிறார். மேற்கு நோக்கி முருகன் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.
🛕 Kalugumalai, Tamil Nadu 628552