×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

மகுடேஸ்வரசுவாமி கோவில் (கொடுமுடிநாதர்), கொடுமுடி


”]Read Kodumudi Magudeswarar Temple History in English

Kodumudi Magudeswarar Temple History in Tamil

மகுடேஸ்வரசுவாமி கோவில், திருப்பாண்டிக்கொடுமுடி

சிவஸ்தலம் பெயர் திருப்பாண்டிக்கொடுமுடி
இறைவன் பெயர் கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி
இறைவி பெயர் வடிவுடைநாயகி, சௌடாம்பிகை, திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி
ஆகமம்/பூஜை சிவாகமம்
புராண பெயர் திருப்பாண்டிக்கொடுமுடி
ஊர் கொடுமுடி
மாவட்டம் ஈரோடு

Kodumudi Kovil Varalaru

தல வரலாறு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.

சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

kodumudi magudeswarar temple vadivudainayagi

கோவில் அமைப்பு: வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.

இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது. இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

kodumudi magudeswarar temple inside statue

இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம். இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்கும்.

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

kodumudi magudeswarar temple nandi

நமச்சிவாய பதிகம்: திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்.

1. மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறை ஊரில் பாண்டிக்கொடுமுடி
நற்றவா ! உன்னை நான மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

2. இட்டநும் அடியேத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடிதொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

3. ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடைமேல்
காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர்புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

4. எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணி
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

5. அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

6. ஏடு வான் இளந்திங்கள் சூடினை என் பின் கொல் புலித் தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அந் தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

7. விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

8. செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

9. சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி என்று
பேர்எண் ஆயிரம் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

10. கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத்தாரனைப் படப்பாம்பு அரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.

kodumudi magudeswarar temple inside view

பிரார்த்தனை: ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.
நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

நேர்த்திக்கடன்: வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறது.

Kodumudi Temple Timings in Tamil

திறக்கும் நேரம்: இவ்வாலயம் காலை 06:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

kodumudinathar-magudeswarar

Kodumudi Magudeswarar Temple Festival in Tamil

திருவிழா: சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

Kodumudi Kovilukku Eppadi Poganum?

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மி. தொலைவிலும், கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26 கி.மி. தொலைவிலும் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. ரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது.

Kodumudi Temple Address

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), ஈரோடு மாவட்டம் – 638 151.

Kodumudi Temple Contact Number: Call: 04204 222375



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை