- September 24, 2024
உள்ளடக்கம்
மூலவர் | உமாமகேசுவரர், பூமீசுவரர், பூமிநாதர், மாமனி ஈஸ்வரர் |
---|---|
இறைவியார் | மங்கள நாயகி, தேகசௌந்தரி, அங்கவளநாயகி |
ஆகமம் | காமீக ஆகமம் |
புராண பெயர் | திருநல்லம் |
வேறு பெயர்கள் | கோனேரிராஜபுரம் |
பாடியவர்கள் | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருட்பிரகாச வள்ளலார் |
விமானம் | அஷ்ட துவாரபால விமானம் |
தீர்த்தம் | பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், சக்தி தீர்த்தம் |
வழிபட்டோர் | புரூரவஸ் மன்னன், எமதர்மன், நந்தி பகவான், அஷ்டதிக் பாலகர்கள், சித்தர்கள், பூமாதேவி, வரகுண பாண்டியன், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர் |
ஸ்தல விருக்ஷம் | ஒரே கொப்பில் உள்ள 13 தளம் உள்ள வில்வ இலை உள்ள வில்வ மரம், அரச மரம் |
பழமை | 1000 – வருடங்களுக்கு முன் |
நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்கு நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார். இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.
இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும்.
சுயம்பு நடராஜர், ஞான கூப கிணறு என இத்தலத்தின் சிறப்புகளை காட்டும் அற்புத கூரை ஓவியம்:
முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவிக்கே சேரும்.
கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
துர்க்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்க்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.
நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோவில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
பெருமாள் தாரைவார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார்.
வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோவிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது.
அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது. இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார்.
இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மரு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம்.
இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.
திரு நள்ளாறு செல்லும் பக்தர்கள் திருநல்லம் சென்று இந்த சனீஸ்வர பகவானை வழிபட்ட பின்னரே செல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாம்.
தல வரலாறு: முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான்.
தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார்.
பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள். பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரசமரம் இருந்தது. புள்ளினங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்மதீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்கவேண்டிய தலம் இதுவென உணர்ந்த்தாள் பூமாதேவி.
தேவசிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில், குருவாரத்தில் ரோகிணியும், பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி, நாள்தோறும் தொழுது வரலானாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்களையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணிக்க அதன்படி உருவானதே இங்குள்ள பூமிதீர்த்தம்.
பூமாதேவி இங்கு வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு. பூமா தேவியால் அருளப்பட்ட அற்புத பெருமை வாய்ந்த சிவதுஷ்டிகர ஸ்தோத்திரம் இத்தலத்திற்கு உண்டு. அதைப் பாராயணம் செய்தால் கரபயம், துஷ்டி நீங்கப் பெறலாம்.
உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடைகள் நீங்க இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத் துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர் அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின் குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி சந்நிதி கொண்டு காணப்படுகிறார்.
இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று. ஆறடி உயரத்தில் கம்பீரமாக காணப்படும் இந்த மூர்த்தம் அந்தக்கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது.
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்
பிரமாண்டமான நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.
அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.
சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.
‘இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.
ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும். இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோவிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.
வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து “வசுதரா’ என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
நந்தி இல்லாத இத்தலத்தில் ஜபம் செய்தால் ஒன்றுக்கு பதின் மடங்காக ஜப பலன் பெறுவர் என்று கூறப்படுகின்றது.
ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் காணக் கிடைக்கிறது. படிப்பில் மந்தமாக உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இக்கிணற்று நீரை பருகினால் சிறந்த பலன் கிட்டும்.
திரிபுரத்தை எரித்த “திரிபுரசம்ஹாரமூர்த்தி” இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம் இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். துர்க்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
அந்தி மதியோடும் அரவச்சடைதாழ
உந்தி யனலேந்தி முதுகாட்டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே –
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்
நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
கல்லா நிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்ரூம் வெந்து விழசெய்தா
நல்லா னமையாள்வா நல்ல நகரானே!
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பாடச் சீர் வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கு திரு நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே” என்று போற்றி உள்ளார்.
முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. சென்ற நூற்றாண்டு கால ஓவியமாக இருந்தபோதிலும் கோவிலின் அமைப்பு, புராண வரலாறு, இங்கு நடைபெற்ற விழாக்களின்போது இறைவன் வீதி உலா வரும் காட்சி போன்றவை வண்ண ஓவியங்களாக உள்ளன. இவை புராண வரலாற்றுச் சிறப்பினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் எடுத்துக்கூறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மக்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் சான்றாகவும் அவை உள்ளன. இவை சுவரொட்டி வண்ணப்பூச்சு முறை எனப்படுகின்ற டெம்பரா என்ற ஓவியப்பூச்சு வகையில் உள்ளதால் இவற்றில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில், கருவறைக்கு வெளிப்புறம் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆனையுரித்தேவர், லிங்கத்திற்கு பூசை செய்தல், இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
கல்வெட்டில் இறைவன் ‘திருநல்லம் உடையார் ‘ என்று குறிக்கப்படுகிறார்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.
வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோவில் கட்டப்பட்டதாகவும், ‘நக்கன் நல்லத் தடிகள்’ என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோவிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.
திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது ஐயன் அற்புத கலை அழகுடன் அருள் பாலிக்கும் கோனேரிராஜபுரம்.
திருக்கோவில் தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
Konerirajapuram Uma Maheswarar Temple Contact Number: +91-4352449830, +91-4352449800 (மாற்றங்களுக்குட்பட்டவை)
How did you able to take photographs? When I visited, they informed me, that no photographs are allowed! do we need to get permission?
Yes, nowadays photographs are not allowed. These were taken a long time back.