- September 24, 2024
உள்ளடக்கம்
🙏 மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்தக் கோவிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர்.
தல பெருமை: அன்னை ஆதிபராசக்தியின் சிலை மூன்றடி உயரம் உள்ளது. தாமரை பீடத்தில் வலதுகாலை மடக்கியும், இடது காலை ஊன்றியும் அமர்ந்திருக்கிறாள். இடக்காலை ஊன்றியிருப்பதன் மூலம் அனைத்திலும் முதன்மை தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதும் உணர்த்தப்படுகிறது.
🙏 அவள் தனது வலது கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்திருயிருக்கிறாள். பொதுவாக அம்மாள் சிலைகளுக்கு நான்கு, எட்டு என கரங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
🙏 அன்னை பராசக்தி மானிட வடிவத்தில் அருள் பாலித்த இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கரங்களுடன் படைப்பது வழக்கம்.
🙏 அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், இருதய கமலம். நெஞ்சத்தாமரை என்று கூறப்படுவது போல உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது.
🙏 தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அக மனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு, அமிழ்ந்து கீழ்நோக்கி இருக்கிறது.
🙏 அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ்நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது. அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்துவிடாமல் அவர்களை காக்க அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்துகொள்ளலாம்.
🙏 பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோவில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோவிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோவிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
🙏 ஆண்டுதோறும் பெண்களே கோவில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.
பிரார்த்தனை: அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்: அம்மனுக்கு சக்திமாலை அணிவித்து இருமுடி எடுத்தும், அங்கப்பிரதட்சிணம் செய்தும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
திருவிழா: ஆடிப்பூரம், தைப்பூசம், பங்காரு அடிகளாரின் பிறந்தநாள்(மார்ச் 3), நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. மேலும் ஆடிமாதம் மருவத்தூர் அம்மனுக்கு ஆடி கஞ்சி எடுத்தல் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் செந்நிற ஆடை உடுத்தி இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விழாக்காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில் மற்றும் பஸ் வசதி செய்யப்படுகிறது.
🙏 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
NH-45, Kancheepuram District, Melmaruvathur, Tamil Nadu 603319
Ph: +914427529276, 044-27529217