×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

நாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி


Nachiyar Koil Temple History in Tamil

நாச்சியார் கோவில் (திருநறையூர்)

மூலவர் திருநறையூர் நம்பி என்கிற ஸ்ரீனிவாசன் (வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன்)
உற்சவர் இடர்கடுத்த திருவாளன்
தாயார் வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்.
தல விருட்சம் வில்வ மரம், வகுளம் எனப்படும் மகிழ மரம்.
தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்பதீர்த்தம்
ஆகமம்/பூஜை வைகானஸம்
புராண பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்

Nachiyar Kovil Special

🛕 தல சிறப்பு: கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.

🛕 இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்

🛕 திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.

🛕 கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

🛕 உடன் கருவறையில் பிரம்மா, மற்றும் 4 வ்யூக மூர்த்திகளான ப்ரத்யும்னன், பலராமன் (சங்கர்ஷணன்), அநிருத்தன், புருஷோத்தமன், மேதாவி முனிவர், வஞ்சுளவல்லி தாயார் என 7 பேர். எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறார் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் – “பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை” என ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான். பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.

🛕 பாற்கடலில் வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். வைஷ்ணவ சம்பிரதாயப் படி பரம்பொருள் பரவாஸுதேவன். முத்தொழில் புரிவதற்காக ப்ரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷனன் என்று மூன்று தெய்வங்களாக பரவாஸுதேவன் அவதரிக்கிறான். அந்த முத்தேவர்களில் ப்ரத்யும்னன் பிரம்மனின் அந்தர்யாமி; அநிருத்தன் விஷ்ணுவின் அந்தர்யாமி; சங்கர்ஷனன் உருத்திரனின் அந்தர்யாமி. அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.

🛕 ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர். அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை. நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம். அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது. ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் உள்ள அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.

Nachiyar Kovil History

🛕 தல வரலாறு: இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் (நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.

🛕 தாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார். முனிவரின் ஆசிரமத்தில் திருமகள் வளர்வதை அறிந்தார். தனது ஐந்துருவில் ஆசிரமம் சென்றார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லாவா? அதற்காக.

🛕 எல்லோரும் கையைக்கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப்பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, “முனிவரே, உமது தவம் பலிக்கவே யாம் இந்த நாடகம் நடத்தினோம் தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டும்” என்று வேண்டினார்.

🛕 அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். (இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர் 🙂

  1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும்.
  2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும்.
  3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்.

கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற 4 வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

🛕 புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.

Kal Garuda Bhagavan

🛕 பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும் நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை. இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும்.

 

🛕 இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது? ஒரு விளக்கம்: பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம். இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

🛕 பொதுவாக கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

  1. பூணூல் – வாசுகி
  2. இடது கையில் – ஆதிசேஷன்
  3. அரையில் அணி – தட்சகன்
  4. மாலை – கார்கோடகன்
  5. வலது காதில் – பத்மன்
  6. இடது காதில் – மகா பத்மன்
  7. திருமுடியில் – சங்கபாலன்
  8. வலது தோள்பட்டையில் – குளிகன்
  9. வாள் – காளியன்

🛕 அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மனாபன், கம்பலன், திருதராஷ்டிரன், சங்கபாலன், தக்ஷகன், காளியன் என்றும் இந்த 9 நாகங்கள் கூறப்படுகின்றன.

Nachiyar Kovil Prarthanai & Nerthikadan

🛕 பிரார்த்தனை: வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.

🛕 நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Nachiyar Koil Festivals

🛕 திருவிழா: மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

Nachiyar Koil Temple Timings

Morning Worship Timing: 07:00 AM to 12:30 PM, Evening Worship Timing: 04:30 PM to 09:30 PM

🛕 காலை 07.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Nachiyar Kovil Telephone Number: +91 4352467017, +91 9443597388.

Nachiyar Koil Temple Address

Enanallur, Tamil Nadu 612602

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை