×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில், சென்னை


Nanganallur Anjaneyar Temple History in Tamil

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு

சுவாமி: ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி.

மூர்த்தி: ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர்.

தல வரலாறு: 1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு பள்ளிகூட வாத்தியாரின் கனவில் இந்த நங்க நல்லூர் க்ஷேத்திரத்திற்கான வித்து தோன்றியது. தெய்வ சித்தத்தின் படி, அந்தப்பள்ளி வாத்தியார், 32 மி.மீ. உயரமுள்ள வெண்கலத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜைகள் விமரிசையாக செய்து வந்தார். அவரும் அவருடைய ஆன்மீக நண்பர்களும் சேர்ந்து மாருதி பக்த சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி, ஹனுமத் ஜயந்தி விழாவை மிகவும் கோலாகலமாக் கொண்டாட ஆரம்பித்தனர். விழாவின் போது தினமும் நடக்கும் இன்னிசைக் கச்சேரியில் சம்பாவனையின்றி கலந்து கொண்டு ஸ்ரீஆஞ்சநேயரின் அருள் வேண்டி, பிரபல இசைக் கலைஞர்கள் போட்டி போட்டனர்.

முதல் அடி: பத்து வருடங்களில், அத்தி மரத்திலான எட்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கி, ஜயந்நியை மேலும் விமரிசையாக் கொண்டாடினர். கனவில் தோன்றிய ஆணையை பூர்த்தி செய்ய முயற்சிகள் பல செய்த “மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்” காஞ்சி ஸ்ரீ பரமாசார்யாரின் முடிவுப்படி நங்க நல்லூரில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர். நங்க நல்லூரில் குறைந்தது 16 புகழ்பெற்ற ஆலயங்கள் தோன்றும் என்று காஞ்சி ஸ்ரீ பரமாசார்யார் எடுத்துரைத்தார்.

முதல் ராமதூதன்: நங்க நல்லூரில் உள்ள “ராம் நகரில்” ஏழு கிரவுண்ட் பரப்பளவு உள்ள நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராம் நகரில் இடம் கிடைத்தது மனிதர்களின் முயற்சியால் அல்ல. தெய்வச் செயலே ஆகும். மேலும் தன் சிஷ்யனான ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன் பக்கத்திலேயே தனக்கு இடத்தை அமைத்துக் கொண்டார். இந்த இடத்தில் பூமி பூஜை நடந்தது.

முதற்கல்: சிலைவடிப்பதற்கான கருங்கல் தேடும் படலம் பல இன்னல்களைக் கொண்டதாக இருந்தது. முதலில் திருச்சி அருகில் யாசனை என்ற இடத்தில் இருந்த கல் பரிசோதிக்கப்பட்டு சிலை செய்யும் குணங்கள் முழுவதும் இல்லாத்தால் நிராகரிக்கப்பட்டது. வேலூர் அருகில் உள்ள பாஷ்யம் என்ற இடத்தில் உள்ள கல் பரிசோதக்கப்பட்டு உகந்ததாக கண்டறியப்பட்டது. நில மட்டத்திலேயே இருந்ததால் எடுத்து வரும் வேலை சுலபமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. சந்தோஷத்தில் முழுகிய குழு, முன் பணம் கொடுத்து வேலையை ஒரு காண்டிராக்டரிடம் ஒப்படைத்து ஒரு மாதம் கழித்து சென்று பார்த்த போது வேலை மந்தமாக இருப்பதுடன் காண்டிராக்டரையும் காணவில்லை. அது மட்டுமின்றி, கல்லிலும் ஒரு பெரிய விரிவு தெரிந்தது. மேலும் பல முயற்சிகளுக்குப் பின் வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் கல்லின் மேல் பாகம் மட்டும் தான் நிலத்திற்கு மேல் தெரிந்தது. ஸ்ரீகிருஷ்ணா சிலை செய்வதற்காக பிர்லாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அளவு பற்றத்தால் எடுத்து செல்லப்படாத கல் என்று தெரிந்தும், குழு கல்லை வெளியே எடுக்கும் சிரமம் பாராமல், கல்லில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்து காஞ்சி எடுத்துச் சென்றது. மௌன விரதத்தில் ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறினார்.

முதல் பயணம்: கருங்கல்லைப் பெயர்த்து எடுக்கும் வேலை பல சிரமங்களுடையே வெற்றிகரமாக நடந்தது. பதினாறு ஆக்ஸில் கொண்ட வண்டியில், முப்பதைந்து அடி நீளம், பத்து அடி அகலம், பத்து அடி பருமன் கொண்ட நூற்று ஐம்பது டன்கள் எடையுள்ள அந்தக் கருங்கல்லைக் கொண்டு வந்தனர். வண்டியோட்டி ஒரு கிருஸ்துவர், வண்டி உரிமையாளர் ஒரு முகமிதியர், கொண்டுவர முயற்சி செய்யும் குழுவோ இந்துக்கள். பழவந்தாங்கலில் ரயில் பாதையை கடந்தது மிகவும் வியக்கத்தக்க நிகழ்ச்சி. ஆயிரகணக்கான பக்தர்கள் ராம நாமத்தை ஜபிக்க, பத்தடி அகல வண்டி, இருபது அடி அகலமே கொண்ட தெருவை மிகவும் லாவகமாக் கடந்தது. நங்க நல்லூரில் சேரவேண்டிய இடத்தை அடைந்ததும், தீபாவளி பட்டாசுகள் போல அந்த வண்டியின் டயர்கள் வெடித்தன.

முதல் மரியாதை: சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சிலை வடிப்பது அந்த சிற்பிக்கு ஒரு கடினமான காரியமாக இருக்கவில்லை. அந்த சிற்பியின் சொல்படி, அந்தக் கல்லிலிருந்து சிலையை வடிக்கவில்லை. ஆஞ்சநேயர் தானாகவே அந்தக் கல்லிருந்து வெளியே வந்து விட்டார். சிலை வடிக்கும் சமயத்தில் பல அற்புத தெய்வீக செயல்கள் நடந்தன. அவற்றில் முக்கியமானது வாயில் காப்போன் ஓர் இரவு, ராகவேந்திர ஸ்வாமியின் ஒளி அந்தச் சிலைக்கு அருகில் சென்று சிலைக்கு அஞ்சலி செலுத்தியதைத் தன் கண்களால் பார்த்தது. முப்பதிரண்டு அடி உயரமான சிலை உக்கிரம் சிறிதும் இன்றி, சாந்த ஸ்வரூபியாக அமைந்தது ஒரு பகவத் சங்கல்பமேயாகும்.

முதல் அநுக்கிரஹம்: சிலை முழுவதும் வடித்த பிறகு, தெய்வீக சக்தி பெறுவதற்கு, சிலைக்கு பால்வாசம், ஜலவாசம், பூவாசம், தான்யவாசம் என்று பல வாசங்கள் செய்யப்பட்டன. பன்னிரெண்டு ஆயிரம் லிட்டர்கள் பால் கோடை காலத்திலும் கெடாமல் இருந்தது விந்தையிலும் விந்தை. ஜலவாசத்திற்குப் பிறகு அந்த தண்ணிர்த் தொட்டி உடைந்ததும் ஒரு தெய்வ செயலாகும். சிலையின் பீடம் தாமரை வடிவத்தில் செய்யப்பட்டது. சிலையின் அடிப்பாகத்தில் உள்ள முனை, தாமரைப் பீடத்தில் உள்ள குழியில் வைக்கப்பட்ட யந்திரங்களை நசுக்காமல், இடைவௌதயும் இல்லாமல் பொருந்துமாறு அளவு செய்யப்பட்டது ஒரு தெய்வீக செயல். தொண்ணுறு டன்கள் எடையுள்ள சிலையை உயரத்திலிருந்து பீடத்தில் இறக்கியது ஒரு விஞ்ஞான விந்தை. ஒரு தெய்வ பக்தி நிறைந்த காண்டிராக்டர், கேரள மாப்ளாஸ் எனப்படும் நிபுணர்களை வைத்து பீடத்தில் இறக்கும் வேலையை தன் சொந்த செலவில் செய்தார். பிரதிஷ்டை முடிந்த பிறகு ஸ்தபதி, ஆஞ்சநேயரின் கண்கள் நேராகப் பார்க்காமல் சிறிது இடது பக்கமாக மாறியதைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டார். தன்னுடைய சிஷ்யனாகிய ராகவேந்திர ஸ்வாமியைப் பார்ப்பதற்காக பகவானக அமைத்த நிகழ்ச்சியோ?

முதலில் பிரதிஷ்டை: தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோவில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குப்பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோவில் இது தான் என்று கருதப்படுகிறது. தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.

முதல் கும்பாஷேகம்: 1995 மே மாதம் 19ம் தேதியன்று லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக அனைத்து ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று நடைபெறவேண்டிய கோதானம், பூமிதானம் முதலிய எல்லா விதமான தானங்களும் குறைவின்றி நடந்தேறின. ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் விஜயம் செய்யும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேய பகதர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.

Nanganallur Anjaneyar Temple Opening Timings

🛕 காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

Also, read

Nanganallur Anjaneyar Temple Address

No. 1, 8th Street, Ram Nagar, Nanganallur, Chennai, Tamil Nadu 600061

 



One thought on "நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில், சென்னை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை