- May 10, 2022
உள்ளடக்கம்
Read Peraiyur Naganathaswamy Temple History in English
மூலவர்
நாகநாதர்
அம்மன்/தாயார்
பிரகதாம்பாள்
புராண பெயர்
செண்பகவனம், கிரிஷேத்திரம்
ஊர்
பேரையூர்
மாவட்டம்
புதுக்கோட்டை
🛕 நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோவில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.
🛕 சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய பெரும்தலம். நாகராஜன் பணிந்தேத்தும் திருத்தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.
பிரார்த்தனை: இங்குள்ள நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். ராகு தோஷம் நீங்க திருநாகேஸ்வரத்திற்கும், கேது தோஷம் நீங்க காளஹஸ்திக்கும் செல்வதற்குப் பதிலாக பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் 2 கிரகங்களின் தோஷங்களும் நீங்கும். திருமணம் தடைபட்டுவந்தால் அது நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும். செய்த தவறுகளுக்கு பரிகாரம் கிடைக்கும் திருத்தலம்.
நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கல்லில் ஆன நாகர் சிலை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.
தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை. நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுகிறது.
🛕 கருவறையின் வெளிப்புறப் பின்சுவரில் அண்ணாமலையாரும், வடபுறம் பிரம்மாவும், மேற்குபுறத்தில் கஜலட்சுமியும், சுப்ரமணியரும் காட்சி தருகிறார்கள். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகள் உள்ளன.
தல பெருமை: கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது. கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள் உள்ளன. இரு வாசல்களிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன.
🛕 பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன. அங்கே சென்றால் முதலில் காணப்படுவது “ஓம்’ என்னும் வடிவில் அமைந்துள்ள புஷ்கரணி. இந்த புஷ்கரணி புண்ணிய புஷ்கரணியாகும். இது ஒரு சுனைநீர் ஆகும். இதிலிருந்து சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இச்சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக் குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை.
🛕 மூலஸ்தானத்தில் இறைவன் சுயம்புவாக அமைந்திருக்கிறார். மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கூடியது. மூலஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தால் நடராஜரும் சிவகாமியும் தென்முகமாக எழுந்தருளி இருக்கிறார்கள். அடுத்து சுனையை பார்த்தவாறு விநாயகர் விக்ரகங்கள். இக்கோவிலின் பிரகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லில் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. நாகர் சிற்பங்களை அடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர். அவர்களுக்கு எதிரே சின்முத்திரை காட்டி தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமர்ந்துள்ளார். மேற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சிதருகின்றனர்.
🛕 பிரகாரத்தை வலம் வந்து வலப்புறம் திரும்பினால் அம்பிகையின் சன்னிதானம் அபயவரதஹஸ்தங்கள் இவைகளுடன் கருணை தாங்கும் பார்வையும் அன்பு தவழும் முகமாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அன்னை பிரகதாம்பாள்.
🛕 நவக்கிரக மண்டலத்தில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரம் உள்ளது. இரண்டு இடங்களிலும் நந்தி உள்ளது.
🛕 பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது.
திருவிழா: ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்றி விழா நடக்கும். பங்குனி, சித்திரையில் நாகநாதருக்கு கொடியேற்றுவிழா நடைபெறுகிறது.
🛕 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Pudukkottai, Peraiyur, Tamil Nadu 622404
Ph: 04322221084, +919486185259