- September 24, 2024
உள்ளடக்கம்
மூலவர்
சக்திபுரீஸ்வரர் சுவாமி
அம்மன்/தாயார்
ஆனந்தவல்லி
தல விருட்சம்
வில்வ மரம்
தீர்த்தம்
கருணா தீர்த்தம்
ஆகமம்/பூஜை
காரன ஆகமத்தின் படி இரண்டு கால பூஜை
புராண பெயர்
கருணாபுரம்
ஊர்
கருங்குயில்நாதன்பேட்டை
மாவட்டம்
நாகப்பட்டினம்
🛕 நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
🛕 இந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது. “தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ?” என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாது ஓடிக் கொண்டே இருந்தான்.
🛕 ஆம் யார் இந்த வீரபத்ரன்? அவர் ஏன் இந்திரனை விரட்ட வேண்டும்? அது என்ன கதை?
🛕 பிரம்மதேவனின் பத்து புதல்வர்களில் ஒருவன் தட்சன். அவன் சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்று, உமாதேவியை தனது மகளாக அடைந்து, அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து தர வேண்டும் என்பது.
🛕 அந்த வரத்தின்படி இமயமலை சாரலில் ஒரு சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்த உமாதேவியை கண்டான் தட்சன். அவன் அந்த சங்கை கையில் எடுத்த மறுகணம், அது ஒரு பெண் குழந்தையாக உருமாறியது.
🛕 குழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்து, தாட்சாயணி என்று பெயரிட்டு, அவளை செல்லமாக வளர்த்து வந்தான் தட்சன். ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து ஆறு வயது முதலே சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் தாட்சாயணி. அவள் முன் தோன்றிய சிவபெருமான் அவளை விரைவில் மணப்பதாகக் கூறி மறைந்தார்.
🛕 அதற்கான நேரம் வந்தது. கன்னிகா தான மந்திரங்களைக் கூறி உமா தேவியின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான் தட்சன். மறுவினாடி சிவபெருமான் திடீரென மறைந்தார்.
🛕 கோபம் கொண்ட தட்சன், அவரை கடுமையான வார்த்தைகளால் தூற்றினான். இதனைக் கண்ட உமா தேவி மனம் வேதனைப்பட்டாள். மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றினார். அவளை தன் பக்கத்தில் இருத்திக் கொண்டு மீண்டும் மறைந்தார்.
🛕 இதனை அறிந்த தட்சனின் கோபம் உச்சத்தை அடைந்தது. தன் மகளை களவு கொண்டவன் என்றும், தன் குலத்திற்கே இழிவு தேடித் தந்தவன் என்றும் சிவபெருமானை இகழ்ந்தான்.
🛕 பின்னர் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில், வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். தேவர்கள், அசுரர்கள், சப்தரிஷிகள் என அனைவரையும் அந்த யாகத்திற்கு அழைத்த தட்சன், சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான்.
🛕 தட்சன் செய்யும் யாகத்தினை கேள்விபட்டு அவனது தவறை திருத்தும் நோக்கத்துடன் சிவபெருமானிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள் உமா தேவி. அவளைக் கண்ட தட்சன் கோபம் தலைக்கேற, கொடிய வார்த்தைகளால் அவளை இகழ்ந்து பேசினான்.
🛕 உமாதேவி கோபம் கொண்டாள். கயிலையை அடைந்ததும் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சற்றே தயங்கி பின் ஒப்புக் கொண்டார் சிவபெருமான்.
🛕 அந்த வேள்வியை யாரைக் கொண்டு அழிப்பது?
🛕 சிவபெருமானது கண்டத்தில் இருந்த கருத்த விஷத்தில் ஒரு கூறு, அவரது நெற்றிக் கண் வழியே குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன், ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றுக்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றி கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந்திருந்தான். சிங்க முகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பால் ஆன கச்சம் அணிந்திருந்தான். அவரே வீரபத்ரன்.
🛕 வீரபத்ரன், தட்சன் நடத்திய வேள்விச் சாலைக்குச் சென்றார். யாகம் துவம்சம் செய்யப்பட்டது. யாகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும், மரணபயம் கொண்டு நான்கு புறமும் சிதறி ஓடினர்.
🛕 இந்திரனுக்கும் மரண பயம் ஏற்பட்டது. கருங்குயிலாக உருவெடுத்த இந்திரன் பறக்கத் தொடங்கினான்.
🛕 கருங்குயில் வடிவில் கருணாபுரம் என்ற இடத்திற்கு வந்தான். அங்குள்ள கருணா தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சக்திபுரீஸ்வரரையும், ஆனந்தவல்லியையும் தினமும் வழிபட்டு வந்தான்.
🛕 இந்திரன் முன் தோன்றிய இறைவன், “என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார்.
🛕 தன் சுய உருவுக்குத் திரும்பிய இந்திரன் “இந்த கருணாபுரத்தில் கருணையாளனாக இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும். இத்தலம் என் பெயரால் கருங்குயில் நாதன்பேட்டை என்று அழைக்கப்பட வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்பாலித்தார்.
🛕 இந்த கோவிலில் வன்னி மரத்தை நவகிரகமாக வழிபடுகின்றனர். இந்த தலத்தில் சப்த மாதர்களில் வராகி இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். இந்திரன் குயில் உருவில் சுவாமியை வழிபட்ட தலமாதலால் இந்த ஊர் கருங்குயில்நாதன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.
🛕 இந்த தலத்தில் உள்ள கருணா தீர்த்தித்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் சாப விமோட்சனம் நீங்குவதுடன், குஷ்டரோக வியாதியும் நீங்கும் என கூறப்படுகிறது.
🛕 சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
🛕 இந்த சக்திபுரீஸ்வரர் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நந்தியும் பலிபீடமும் இருக்க நுழைவுவாசலின் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருக்கிறார்கள்.
🛕 எதிரே கருவறையில் இறைவன் சக்திபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஆனந்தவல்லி தென்திசை நோக்கி தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் பிராம்மி, சாமுண்டீஸ்வரி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி என சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் ‘கருணா தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் சகல வியாதிகளையும் தீர்க்க வல்லது என்கின்றனர் பக்தர்கள்.
🛕 அருள்மிகு சக்திபுரீஸ்வரர் சுவாமி கோவில் ஆறாம் திருமுறை 71-ம் பதிகத்தில் பாடப்பெற்றுள்ளது:
கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே
🛕 திறக்கும் நேரம்: இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
🛕 அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது கருங்குயில்நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் சுவாமி தலம். நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
அருள்மிகு சக்திபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவில்,
கருங்குயில்நாதன்பேட்டை,
மணக்குடி அஞ்சல்,
மயிலாடுதுறை தாலுக்கா,
நாகப்பட்டினம்- 609 118.