×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

சித்தாடி காத்தாயி அம்மன்


Sithadi Kathayee Amman Temple History in Tamil

சித்தாடி காத்தாயி அம்மன் வரலாறு

🛕 தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில உள்ள கும்பகோணம் என்ற ஊரின் அருகில் இருக்கும் பிலாவடி எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளாள் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மன். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது இந்த ஆலயம். முடிகொண்டான் ஆற்றங்கரையில் தென் பகுதியில் உள்ள அற்புதமான சோலை ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மனும் பராசக்தியின் ஒரு அம்சமே. ஆதனாலோ என்னவோ இந்த ஆலயத்தை காத்தாயி அம்மன் என்றும், காத்யாயினி அம்மன் என்றும் பலரும் நினைத்து வருகின்றனர். இந்த ஆலயம் வள்ளி என்ற காத்தாயி அம்மனின் ஆலயமே.

🛕 காத்தாயி அம்மன் மற்றும் காத்யாயினி (பச்சை வாழி அம்மன்) அம்மன் குடி கொண்டுள்ள இந்த ஆலயம் முக்கியமாக வள்ளிக் கடவுளான காத்தாயின் பெருமைக்காகவே ஏற்பட்டது. இங்கு வந்து அமர்ந்து கொண்டுள்ள காத்யாயினி (பச்சை வாழி அம்மன்) அம்மனுக்கும் இங்கு வந்ததிற்கான கதைகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது இந்த வள்ளி தேவியின் காத்தாயி ஆலயம். அன்னை பராசக்தி பல்வேறு யுகங்களில், பல்வேறு ரூபங்களிலும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்து உள்ளாள். நாம் எந்த ரூபத்தில் அவ]ள வழி பட நினைக்கின்றோமோ அந்த ரூபத்திலேயே நமக்கு காட்சி தந்து, ஆசிகளும் தந்து, வளமான வாழ்க்கைப் பெற நமக்கு வழி காட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பதே உண்மை. அப்படி எடுத்த ரூபங்களில் ஒன்றாக சித்தாடியில் அவள் ஸ்ரீ காத்தாயி அம்மனாக அவதரித்து நம்மைக் காத்தருளி வருகிறாள் என்பதே உண்மை.

🛕 தஞ்சை ஸரஸ்வதி மகாலில் உள்ள ஆவணங்கள் மூலமும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி ஆலயத்திலும் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலமும், கி.பி 1577 ஆம் ஆண்டில் தஞ்சை நாயக்க மன்னனாக இருந்த செவ்வப்ப நாயக்கர் என்பவர் இந்த ஆலயம் அமைந்துள்ள ஆவணம், சித்தாடி என்ற கிராமத்தை துறவி ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து இருந்தார் எனத் தெரிய வருகின்றது.

வள்ளி என்ற காத்தாயி அம்மன் எழுந்தருளிய வரலாறு

🛕 அங்கு எப்படி வள்ளி, காத்தாயி என்ற பெயரில் எழுந்தருளினாள்? அந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. தேவலோகத்தில் திருமால் ஒரு முறை அனைவரோடும் அமர்ந்தபடி மிகவும் மகிழ்சியாக பேசிக் கொண்டு இருந்த பொழுது பேச்சின் இடையே அவர் ஆனந்தக் கண்ணீர் விட, கன்னத்தில் இருந்து வழிந்து விழுந்த அந்த நீர்த் திவலைகளில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். முதலில் பிறந்த பெண் அமுதவல்லி எனவும், இரண்டாவதாகப் பிறந்தவள் சுந்தரவல்லி என்ற பெயர்களையும் பெற்றனர். வளர்ந்து பெரியவர்களான இருவரும் ஒன்றாகவே பிறந்து விட்டதினால், என்றும் ஒன்றாகவே தாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருவருக்கும் ஒரே கணவனாக முருகப் பெருமானே அமைய வேண்டும் என விரும்பினர்.

🛕 அவரை இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, தர்பைப் புற்களால் சூழப்பட்டு இருந்த சரவணப் பொய்கை நதிக் கரைக்குச் சென்று அங்கே அமர்ந்தபடி கடும் தவம் செய்யலாயினர். அதனால் மனம் மகிழ்ந்துப் போன முருகப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி தான் சூரனைக் கொல்வதற்காக அவதரித்து உள்ளதால், அந்த நேரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்திகளின் அவதாரங்களாகப் பிறந்து உள்ள அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், சூரனை வதம் செய்த பின் தானே வந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குத் தந்த பின், தான் திரும்பி வரும்வரை மூத்தவள் தேவலோகத்திலும், இளையவள் பூவுலகிலும் சென்று தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினார்.

🛕 முருகன் கூறியபடியே அமுதவல்லி ஒரு குழந்தை உருவை எடுத்துக் கொண்டு சூரனுக்கு பயந்து கொண்டு ஒளிந்து கொண்டிருந்த இந்திரனிடம் சென்று தன்னை மகளாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். அவள் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத இந்திரனும் அவளை தன் பட்டத்து யானையான ஐராவதனிடம் கொடுத்து அவளை பாதுகாத்து வரும்படிக் கூறினார். தேவலோகத்தில் இருந்த பட்டத்து யானையிடம் அவள் வளர்க்கப்பட்டு வந்ததினால் அவள் தெய்வானை என்ற பெயரைப் பெற்றாள். சுந்தரவல்லி பூலோகத்தில் பிறவி எடுக்கச் சென்றாள் அதே சமயத்தில் இந்திரனிடம் சாபம் பெற்றதின் காரணமாக பூலோகத்தில் ஒரு முனிவராகப் பிறந்திருந்த ஸ்ரீமான் நாராயணண் தவம் செய்து கொண்டு இருந்தார். அப்போது லட்சுமி தேவி மான் உருவம் எடுத்துக்கொண்டு அங்கு சென்று தன் கணவரான அந்த முனிவரை நோக்கியபடி நின்றிருக்க, கண்களை திறந்த முனிவரும் அவளை நோக்க அதனால் அவள் கர்பமுற்றாள்.

🛕 அதுவே தக்க தருமணம் என்று எண்ணிய சுந்தரவல்லி மான் உருவில் இருந்து கொண்டு கர்பமடைந்திருந்த லட்சுமி தேவியின் வயிற்றில் சென்று அவள் கருவில் கலந்து விட்டாள். “ரிஷி கர்பம் ராத் தங்காது” என்பார்கள். கர்பமடைந்த லட்சுமி தேவிக்கு அங்கேயே குழந்தைப் பிறந்தது. பிறந்த குழந்தை மானாக அல்ல, மனித உரு எடுத்துப் பிறந்தது. அந்தக் குழந்தைப் பிறந்ததும் திருமால் சாப விமோசனம் பெற்று விட, மான் உருவில் இருந்த லட்சுமியும் சாப விமோசனம் பெற்ற திருமாலும் பிறந்திருந்த பெண் குழந்தையை ஒரு வள்ளிச் செடி பயிரிடப்பட்டிருந்த பள்ளத்தில் விட்டு விட்டு வைகுண்டத்திற்குத் திரும்பிச் சென்று விட்டனர். அந்தக் குழந்தை பிறந்தது வள்ளிக் குழி என்ற இடம்.

Kathayee Amman History in Tamil

🛕 அங்கு குழியில் கிடந்த அந்தக் குழந்தையை பார்த்த நம்பிராஜன் என்ற வேடன் அதை தானே எடுத்துச் சென்று தனது மகளாக வளர்த்தான். குழந்தை வள்ளிக் கிழங்குகள் பயிரிடப்பட்டிருந்த குழியில் பிறந்ததினால் அவளுக்கு வள்ளி எனப் பெயர் சூட்டினான். வள்ளி பருவம் அடைந்ததும் வேடர் குலப் பழக்கத்தின்படி அவளை பரணில் அமர்ந்து கொண்டு வயலுக்கு காவல் புரியும் பணியில் அனுப்பினர். வள்ளியும் அங்கு வயலில் சென்று தினைப்புனத்தை பாதுகாக்கும் பணியில் இருந்ததினால் நாளடைவில் காத்த ஆயி என்ற அடைமொழிப் பெயரில் இருந்த அவள் காத்தாயியாக மாறினாள்.

🛕 அந்த சமயத்தில்தான் அந்த வயலுக்கு வந்த முருகப் பெருமான் அவளுடன் நட்பு கொண்டு தன் மனதிக்கு இசைந்தவளாக அவளை மாற்றிக் கொண்டார். அப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு முறை தன்னுடைய சேனாதிபதி ஒருவனை தனது துணைக்கு அழைத்துக் கொண்டு தன் காதலியான குறத்தி வள்ளியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவளைக் காண்பதற்காக வள்ளி மலைக்கு வள்ளியைக் காணச் சென்றார். அவர் அங்கு செல்வதை அறிந்து கொண்ட அவருடைய சகோதரர் வினாயகப் பெருமானும், அவருடைய பெற்றோர்களும் தங்களுடன் சப்த ரிஷிகளையும் நாரதப் பெருமானையும் அழைத்துக் கொண்டு முருகனுக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து போய், முருகனின் திருமணத் திட்டத்தை அறிந்து கொண்டனர். அதன் பின் அரங்கேறிய பல்வேறு நிகழ்சிகளின் பின் முருகன்-வள்ளித் திருமணமும் அனைவரது ஆசிகளுடன் நடந்தேறியது.

🛕 அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ கஞ்சமலை சித்தர் என்பவரிடம் அந்த இடத்தில் வள்ளிக்கு ஒரு ஆலயம் அமைத்துக் கொடுக்கும்படி சிவ பெருமான் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ கஞ்சமலை சித்தரும் அதற்கு இணங்கிய பின், தாங்கள் சித்தர்களாக இருப்பினும் தங்களை எவரும் வழிபடுவது இல்லை என்ற தங்களுடைய மனக் குறையைக் கூறிவிட்டு, அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தங்கள் தவ வலிமைக் கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை மானிடர்கள் மூலமே நிறுவ முடியும் என்றும் அப்படி எழும்பும் ஆலயத்தில் பார்வதிக்கு பிரதான சன்னிதி அமைத்து, அதன் வலப்புறத்தில் ஸ்ரீ முருகனுக்கும், இடப்புறத்தில் வள்ளி என்ற காத்தாயிக்கும் சன்னதிகள் அமைத்த பின், அவர்களுடன் அங்கு வந்திருந்த இருந்த நாரத முனிவர், விஸ்வாமித்திரர் மற்றும் சப்த ரிஷிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களுக்கும் அந்த ஆலயவளாகத்தில் இடம் கொடுக்க அனுமதி தர வேண்டும் என்று வேண்டினார். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும், அவர்களுடன் கஞ்சமலை சித்தரின் பெயரிலேயே தனக்கும் அங்கு ஒரு இடம் அமையட்டும் என அருள் பாலித்துச் சென்றார். சிவ–பார்வதி தரிசனம் பெற்ற கஞ்சமலை சித்தர் சற்றும் தாமதிக்கவில்லை.

🛕 உடனேயே அந்த நேரத்தில் தூரத்தில் போய்க்கொண்டு இருந்த ஆசாரமிக்க அந்தணர் ஒருவரை அவர் கண்களில் படாத உருவில் தன்னை மாற்றி வைத்துக் கொண்டு “மகனே இங்கு வா..” எனக் கூவி அழைத்தார். குரல் வந்த திசையை நோக்கி அந்தணரும் வந்தார், ஆனால் குரல் வந்த இடத்தில் எவருமே தென்படவில்லை. எவருமே காணாததினால் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் போகத் துவங்கியவரிடம் ‘மகனே நீ பயப்படாதே. இந்த ஊர் எல்லையை பாதுகாக்க நான் இங்கு வந்துள்ளேன். நீயும் இங்கு வந்து தினமும் என்னை பூஜித்து வழிபடலாம்’ என்று மீண்டும் கேட்டது குரல். அதைக் கேட்டு புல்லரித்துப் போய் நின்று கொண்டிருந்த அவர் அந்த அரச மரத்தின் அடியில் ஒரு இடத்தில் குங்குமம் கொட்டிக் கிடந்ததைக் கண்டார். அங்கிருந்துதான் அசிரீரியின் குரல் வந்தது. அது தெய்வத்தின் குரலே என உணர்ந்தார். தெய்வ சக்தியான அம்பாளே அங்கு தோன்றி உள்ளாள் என்பதைப் புரிந்து கொண்டார்.

🛕 பிறகு என்ன? அந்த இடத்திலேயே அந்த குங்குமக் குவியலுக்கு பூஜைகள் செய்து வழிபடத் துவங்கினார். அதன் பின் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. குங்குமத்திற்கு எப்படி அர்ச்சனை செய்வது? அங்கு எழுந்தருளி உள்ள சக்தி தேவியை சூரிய ஒளியில் இருந்தும் காக்க வேண்டும். அப்படி எண்ணியவர் பூக்கள் மட்டுமே போட்டு அதை பூஜிக்கத் துவங்கினார். காலை வேளைகளில் தன் கைகளையே அதற்கு குடை பிடித்திருப்பது போல வைத்திருந்து வெய்யில் அதன் மீது விழாமல் பார்த்துக் கொண்டார். அந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் மீண்டும் அசரீரீ குரல் கொடுத்தது “அந்தணா, சூரியனால் தோன்றும் வெப்பத்தை தடுக்க கைகளை குடை போல் வைத்திருந்து காவல் காக்கிறாய். ஆனால் மழை காலத்தில் எப்படி என்னை பாதுகாக்கப் போகிறாய்?”

🛕 கேள்வி நியாயம்தானே.. மனம் பதபதைக்க சிந்தனையில் ஆழ்ந்தார். முடிவாக ஒரு களிமண் பொம்மையிலான பெரிய உருவம் செய்து அதற்கு கீழே அந்த குங்குமத்தை வைத்துவிட்டுப் அதையே பூஜிக்கலானார். களிமண் பொம்மை எத்தனை காலத்திற்கு குங்குமத்தை மழையில் இருந்து காப்பாற்றும்? நானே ஒரு அழியும் உடலை பெற்று இருக்கையில் இந்த களிமண் பொம்மையும் எப்படி காலம் காலமாக நிலைத்து இருக்க முடியும் என்ற ஆத்ம ஞானம் மனதில் தோன்றியது. அதற்கு ஒரு வழி கூறுமாறு அம்பாளை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்தார். மெல்ல மெல்ல அவள் உருவத்தை தன் மனக் கண்களில் பார்த்துக் கொண்டு தியானித்தவர் தன் கண்களின் உள்ளே ஒரு உருவம் உருவாவதைக் கண்டார். முதலில் சில கட்டங்கள் எழுந்தன, கூடிக் கொண்டே போன அந்தக் கட்டங்கள் இணைந்து முக்கோணங்கள் ஆயின. எத்தனைக் கோணங்கள் என எண்ணினார். மொத்தம் தெரிந்தது 43 முக்கோணங்கள். அதாவது ஏழு நிலைகளில் அது அமைந்து இருப்பதைக் கண்டார்.

🛕 அடுத்து காத்தாயி தோன்றினாள் அவளுடைய அற்புதமான சொரூபத்தையும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைந்து மயங்கி நின்றார். காட்சி தந்தவள் கூறினாள் “இந்தத் தினைப்புனத்தைக் காக்க வந்தவள் நான். ஆதியில் மூவுலகைக் காத்து நின்றதும் நானே. உன் விருப்பப்படி நானே மூன்று சுற்றுக்கள் கொண்ட முடியுடன் ஒரு உருவச் சிலையாக இந்த பக்கத்தில் உள்ள ஆற்றில் வருவேன். என்னை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கி வா” மனத்திரையில் கண்ட காட்சிகள் காற்று போல கரைந்து போனது. மறு நாள் காலை சூரியன் உதிக்கும் வெகு நேரத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்கு வந்து நின்றார் அந்த அந்தணர். அவர் மனக் கண்களில் கூறியபடி மும்முடிச்சுக்கள் கொண்ட காட்சி தென்படுமா என்று ஆற்றை நோக்கிப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தவர் திடீர் என எங்கிருந்தோ ஆற்று நீரில் வந்த முடியைக் கண்டார். தாமதிக்கவில்லை. ஆற்றில் இறங்கித் தேடியவருக்கு ஆற்று மணலில் புதைந்து இருந்த சிலை கிடைத்தது. ஆனந்தக் கூத்தாடிய வண்ணம் அதைத் தூக்கிக் கொண்டு நடந்தார்.

🛕 அரச மரத்தடியில் மண் பொம்மையின் அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு போனார். தான் மேற்கே அமைத்து இருந்த சிறு மேடை ஒன்றின் மீது அதைக் கொட்டி, அதன் மீது அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார். அவர் மனதில் அப்பொழுது எதுவுமே தோன்றவில்லை. அந்த குங்கும் உருவில் இருந்திருந்த காத்தாயியை மழையில் இருந்து காத்து நின்றதே களிமண் பொம்மை, அதையும் எடுத்து வந்து அங்கு வைத்திட வேண்டும் எனத் தோன்றவில்லை. நினைத்த காரியம் முடிந்து விட்டதே என எண்ணியவர், மரத்தடியை சுத்தம் செய்வது போல் நினைத்து அந்த களிமண் பொம்மையை எடுத்து ஆற்று நீரில் போட்டு விட்டார். அதுவும் கரைந்து விட்டது. இப்படித்தான் சில சமயங்களில் நம்மையும் அறியாமல் நாம் பிழைகள் செய்து விடுகின்றோம். மறு நாள் காலைப் பொழுது. அங்கு வந்து எப்பொழுதும் போல ‘அம்மா…அம்மா’ என குரல் கொடுத்தார். காத்தாயி பதில் தரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார் பதில் இல்லை. மாறாக அசரீரி ஒன்றின் குரல் கேட்டது.

‘இங்கு இருப்பது நான் அல்ல’.

‘ஏன், நான் என்ன குறையை செய்தேன்?’

என்று பதறியபடி அவர் கேட்க..

‘நான் குடி கொண்டிருந்த பொம்மையை நீயோ ஆற்றிலே விட்டு விட்டாய். அதனால் நானும் ஆற்றோடு போய் விட்டேன்’.

🛕 அவர் மண்டையில் எவரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. தான் அறியாமல் செய்து விட்ட தவறை உணர்ந்தார். ஆனால் என்ன செய்ய முடியும்? காலம் கடந்து விட்டது, களிமண் பொம்மையும் ஆற்றில் கரைந்து விட்டது. இனி அதை எப்படி திரும்பக் கொண்டு வர முடியும்?

🛕 ‘அம்மா, தெரியாமல் தவறு செய்து விட்டேன். இந்தப் பாவி செய்த தவறை மன்னித்து விடம்மா. நீ திரும்பவும் இங்கு வர வேண்டும். இல்லை எனில் இந்தச் சிலையை நான் இடுப்போடு கட்டிக் கொண்டு இந்த ஆற்றில் குதித்து என்னையும் இதில் கரைத்துக் கொள்வேன்’

என சிலை முன் நின்றபடி கதறினார்.

🛕 ‘என் மனதாற உன்னை ஆராதித்தேன். இரு கரங்கள் போதாதென்ற அளவில் புஷபங்கள் போட்டு பூசித்தேன். ஆனாலும் அலை பாய்ந்த மனதாலும், நான் அறியாமலும் என்னை அந்த ஆற்றுக்கு அழைத்துச் செல்ல இந்த கால்கள் உதவியதாலும் முதலில் இந்தக் கால்களை முறித்துப் போடுகிறேன்’

vஎன அழுது கொண்டு தோப்புக்கரணம் போடத் துவங்கினார். தோப்புக்கரணம் போடப் போட கால்களில் இருந்த சதைகளும, நரம்புகளும் பிய்ந்து இரத்தம் கொட்டியது. என்னதான் இருந்தாலும் ஒரு தாயினால் தன் குழந்தைப் படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. தன்னை பல காலம் பூஜித்த பக்தன், தன்னை இந்த இடத்தில் பாதுகாத்து நின்றவன் அல்லவா?

🛕 காத்தாயி கருணைக் கொண்டு மீண்டும் அவர் முன் தோன்றி ஆசி கூறினாள்.

🛕 ‘மகனே உன் பக்தியை மெச்சினேன். அறியாமல் செய்து விட்ட உன் பிழையையும் மன்னித்தேன். உனக்கு நான் ஞானத்தைத் தரும் வகையில் முதலில் வந்ததினால் ஞானாம்பிகையாகவும், உன் மனதில் இடம் கொண்டு அந்த பீடத்தில் அமர்ந்ததால் ஒட்டிக் கொண்டவள் என்ற ஒட்டியாண ருபியாகவும், உனக்கு கருணைக் காட்டியதால் கருணைமயியாகவும் இங்கு அமர்ந்து கொண்டு இரட்சிப்பேன்’ என்றாள்.

🛕 அவருக்குக் காட்சி தந்தது ‘இனி இங்கே அமர்ந்து கொண்டு காத்தருளுவேன்’ என்று அவருக்குக் கூறியபடி மீண்டும் அந்த சிலைக்குள் தன் சக்தியை செலுத்தி ஒளி ஏற்றினாள்.

🛕 முதலில் குங்குமம், பிறகு மண் பொம்மை, கடைசியாக சிலை வடிவங்களில் அவதரித்தவள் ஞானாம்பிகையாக, ஒட்டியாண ருபிணியாக, கருணாமூர்த்தியாக மூன்று குணங்களும் கொண்டு, அதை பிரதிபலிக்கும் வகையில் கொண்டையில் மூன்று சுற்றுக்களும் கொண்டு அங்கு வந்து நின்றhள். முதலும், நடுவும், முடிவுமாக அனைத்தும் அவளே என அவனாகி, அவளாகி அனைத்துமாகி ஆகி நின்றாள் அந்த அன்னை. மறுநாள் தனக்கு பூஜைகளை செய்ய வந்தவரிடம் தான் நம்பிராஜனிடம் வளர்ந்ததினால் நம்பினோர்களை கை விடாமலும், பரண் மீதேறி பறவைகளிடம் இருந்து தினைகளை காத்ததினால் மக்களுடைய ஆசாபாசங்களை துரத்துவேன் என்றும் தன்னை மணமுடித்த பொழுது வந்திருந்த முருகப் பெருமானின் பெற்றோர்களான பார்வதி, சிவன் மற்றும, தன் மெய்காப்பாளனாக இருந்த வீரன், அவர்களுடன் வந்திருந்த ஜடா முனி, நாரதர், அகஸ்தியர், மற்றும் சப்த ரிஷிகளான குகை முனி வஷிஷ்டர், வேத முனி வாமதேவர், வாழு முனி விஸ்வாமித்திரர், பூ முனி கௌதமர், முத்து முனி அத்தரி, கரு முனி பிருகு, செம் முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள்.

🛕 அத்தரி, கரு முனி, பிருகு, செம்முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள். இந்த ஊரில் தினைப்புவனம் காக்க வந்ததினால் காத்த ஆயியான காத்தாயி எனவும், சித்தர்கள் பலர் நிறைந்து இருந்ததினால் சித்தர்கள் ஆடிய பூமி என்ற சித்தாடியாகவும், மூன்று முடிகளுடன் ஆற்றில் தோன்றியதினால் ஆற்றின் பெயர் முடி கொண்டான் எனவும் பெயர் பெற்று பெருமைப்பட்டன. கஞ்சமலை சித்தரின் விருப்பப்படி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள பல்வேறு முனிவர்களின் சிலைகள் விஸ்வாமித்திரர், பூ முனி கௌதமர், முத்து முனி அத்தரி, கரு முனி பிருகு, செம் முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள்.

siddhar silaigal

வள்ளி என்ற காத்தாயி அம்மனின் திருவிளையாடல்கள்

🛕 வள்ளி என்ற காத்தாயி அம்மனின் திருவிளையாடல்கள் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் மகனே, இங்கு வா! என்றழைத்து தனக்கு ஆலயத்தினை அமைத்துக் கொண்ட வள்ளி என்ற காத்தாயியின் சிறப்பினைப் பற்றியும், அந்த அம்பாள் செய்த திருவிளையாடல்களையும் கூற இன்றளவும் இயலாது. பலரும் பல விதமான அற்புதங்களை கண்டு களித்து, அனுபவ பூர்வமாக ஆனந்தமும், தங்களது வாழ்க்கையில் வளமும் பெற்றுள்ளனர் என்றாலும் சில முக்கியமான சம்பவங்களை கூறுவது மிவும் அவசியம். இந்த சம்பவம் நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஒரு நாள் இரவு வேளை. சுமார் எட்டு மணி அளவில் அந்தணர் ஒருவர் அந்த ஆலயம் இருந்த பக்கமாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். களைப்பு மேலிட தங்க இடம் எதுவும் இருக்குமா என அங்கும் இங்கும் பார்த்தவர் கண்களில் தெரிந்த இந்த ஆலயம் ஒரு வீடு போல அவருக்குக் காட்சி அளித்தது. அந்த இடத்தை நோக்கிச் சென்றவர் எதிரில் ஒரு பெண்மணி வந்து நின்றாள்.

🛕 அவளிடம் தான் காளை மாடுகள் வாங்க பணத்துடன் சென்று கொண்டு இருப்பதாகவும், பணத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு அந்த இரவு மட்டும் படுத்திருக்க ஒரு இடம் கிடைக்குமா எனவும் கேட்டார். அவள் தன் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று சாப்பிட உணவு தந்த பின், தன்னிடம் அந்தப் பணத்தைத் தந்து விட்டு, தன் பிள்ளை காட்டும் இடத்தில் தங்கி இரவு பொழுதைக் கழித்த பின் காலை எழுந்து வந்து தன்னிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போகும்படியும் கூறினாள். அவள் கூறியயபடியே அவளிடம் தன் பணப் பையைக் கொடுத்த பின் அவளுடைய மகன் வழிக்குத் துணையாக இருக்க ஓலையினால் ஆன எரியும் விளக்கு ஒளியை கையில் ஏந்திக் கொண்டு நடத்தி அழைத்துச் சென்று சித்தாடி கிராமத்தில் இருந்த ஒரு அக்ராஹாரத்தில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையைக் காட்டி அங்கேயே படுத்து உறங்குமாறுக் கூறிவிட்டுச் சென்றான். மறுநாள் காலை உறங்கி எழந்த பின் துதிகள் பாடினார்.

🛕 அந்த துதி சப்தத்தைக் கேட்டு வெளியில் வந்த அந்த வீட்டுக்காரர் அவரை யார் என விசாரிக்க, முன் இரவில் நடந்த விவரத்தை அந்த அந்தணர் கூற அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரர் பெரும் சிரிப்பை உதிர்த்தபடி “தனக்கு தெரிந்த வகையில் அந்த சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வீடுமே அப்படிக் கிடையாது” என்றும், பணம் கொண்டு வந்ததாக ஏன் ஒரு பொய்யை காலையில் கூறுகிறார் என கிண்டல் செய்ய அந்தணர் பதறினார். அப்படியானால் தான் கொடுத்த பணம் எவரிடம் இருக்கும் என பயந்து அழத் துவங்கினார். அதைக் கேட்ட வீட்டுக்காரரும் ‘சரி, நீ கூறுவது உண்மையா எனப் பார்க்கின்றேன், நீ வந்த வழியைக் கூறு’ என்று அவரும் அந்த அந்தணர் நடந்து வந்ததாகக் கூறிய வழியை பின்பற்றியபடி அந்த வீட்டைத் தேடிப் போனார்கள். ஆனால் அங்கு எந்த வீடும் இல்லை. ஒரு ஆலயம் மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் அங்கு வந்த அர்சகர் அந்த ஆலயத்தை திறந்ததும் அவரிடம் நடந்ததைக் அந்த அந்தணர் கூறினார். அவரும் ஆச்சரியப்பட்டு அதெப்படி இங்கு ஒரு வீடு இருந்ததாகக் கூறுகிறீர்கள். வேறு எங்காவது பணத்தை வைத்துவிட்டு வந்து நீங்கள் ஒருவேளை கனவு கண்டு உள்ளீர்களோ என்னவோ. சரி உள்ளே சென்று அம்பிகையிடம் வேண்டிக் கொள்ளலாம், என அவர்களை உள்ளே அழைத்துச் சென்றவர் திடுக்கிட்டார்.

🛕 மூவரும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்த அந்தணர் கூறிய அடையாளங்களுடனான பணப் பை அம்மனின் காலடியில் இருந்தது. அந்தப் பையை எடுத்து அதில் இருந்த தொகையை எண்ணிப் பார்க்கவும் அவர் கூறிய வித்திலேயே அனைத்துப் பணமும் இருந்தது. அன்னையின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார் அந்த அந்தணர். அன்னையின் சன்னிதியில் விழுந்து புலம்பினார்…அன்னையே என் பணத்தைப் பாதுகாதத்ததும் அல்லாமல் என் மானத்தையும் காப்பாற்றினாயே, உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் அம்மா.. என அழுது புலம்பினார். மாடு வாங்க எடுத்துச் சென்ற பணத்தை மாடு வாங்காமல் அந்த ஆலயத்துக்கு செலவு செய்து ஆலயத்தைக் கட்டினார்.

மற்றும் ஒரு கதை

🛕 சுமார் 300 ஆண்டுகள் முன் நடந்தது இது. காத்தாயி அம்மனை குல தெய்வமாக வழிபட்டுக் கொண்டு இருந்த இரு பக்தர்களின் குடும்பத்தினர் இரண்டு மாட்டு வண்டிகளில் பயணம் செய்தபடி அங்கு அம்மனை தரிசிக்க வந்தனர். பூஜைகள், படையல்கள் என எல்லாம் செய்து விட்ட பின் தங்களுடைய ஊருக்குத் திரும்பலாயினர். அவர்கள் கிளம்பிய அவசரத்தில் அவர்களுடன் வந்திருந்து ஆலய வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த பன்னிரண்டு வயதான பெண் குழந்தையை அங்கேயே தவற விட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள். தாம் வந்திருந்த இரண்டு வண்டிகளில் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக் கொண்டு இருப்பாள் என நினைத்து வீட்டினுள் நுழைந்து பார்த்தவர்கள் திடுக்கிட்டனர். குழந்தை எங்கே, எங்கே என தேடிய பின் அவளைக் காணாமல் மீண்டும் அந்த ஆலயத்திற்கே சென்று குழந்தையைத் தேடலாயினர். குழந்தையைக் காணவில்லை.

🛕 அப்போது திடீர் என சன்னதியில் இருந்து ஒரு அசரி கூறியது “குழந்தையை இனித் தேடாதீர்கள். இனிமேல் அவள் என்னுடன்தான் இருப்பாள். அவள் உடல் நலம் இன்றி இருந்த பொழுது நீங்கள் அவளை என்னிடம் கொண்டு விடுவதாக வேண்டிக் கொண்டீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை. ஆகவே இனி அவள் என்னுடையவள் ஆகி விட்டாள்” என்று கூறவும் வந்தவர்கள திக்கித்து நின்றனர. ஆமாம் அதற்கு பல ஆண்டுகள் முன் அந்தக் குழந்தை உடல் நலமின்றி இருந்த பொழுது அப்படி ஒரு வேண்டுதல் செய்திருந்தனர் அவர்கள். தற்போது அம்பிகையின் வலது காலடியில் காணப்படும் உருவம் அந்தக் குழந்தையின் சிலை என்று நம்புகின்றனர்.

இன்னொரு சம்பவம்

🛕 சுமார் 40 ஆண்டுகள் முன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவியான ஜானகி அம்மாள் நான்கு குழந்தைகளுடன் இந்த ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்த பின் திருநிலங்குடி என்ற கிராமத்திற்கு திரும்பிக் கொண்டு இருக்கையில் அவர்கள் சென்ற வழியில் இருந்த ஆற்றில் வெள்ளம் வந்து வண்டியும் மாடுகளும் முழுகத் துவங்கின. ஜானகி அம்மாள் …… காத்தாயி காப்பாற்று …… என்று அலறவும் எங்கிருந்தோ சைக்கிள் ஒன்றில் வந்தவன் ஆற்றில் இறங்கி மாடுகளை தட்டிக் கொடுத்தபடி ஓட்டிச் சென்று அவர்களை காப்பாற்றிக் கரை சேர்த்தான். அந்த வண்டியும் திருநிலங்குடிக்கு செல்வதாகக் கூற அவனும் தனக்கும் அங்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அவர்களுடன் துணைக்கு சேர்ந்து கொண்டு தன் சைக்களில் வண்டியுடன் சென்றான்.

🛕 திருநிலங்குடிக்கு அருகில் சென்றதும் அவனைக் காணவில்லை. அதன் பின் அதைப் பற்றி மறந்தே போய்விட்டனர். அடுத்து சில நாட்களில் காத்தாயி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ துரையப்பா குருக்கள் என்பவர் மேல் சாமி வந்து ஆட, அங்கு அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியிம்… “உதவிக்கு வந்தது வீரனடா, ஆற்றோடு போன உன் குடும்பத்தைக் காத்தவன் நானடா” என்று கூறவும் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது ஆற்றில் வெள்ளம் வந்த பொழுது சைக்கிளில் வந்து தங்களை காத்தது காத்தாயியே என்பது.

🛕 அது போல 1939 ஆம் ஆண்டு பால் குடத்துடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்த போற்றி கிருஷ்ணமூர்த்தியின் தாயார் பால் செம்புடன் யாக குண்டத்தில் பத்து நிமிடங்கள் நின்றிருக்க அவள் புடவைக் கூட நெருப்பில் எரியாமல் இருந்த அற்புதக் காட்சியை குருக்களும் மற்றவர்களும் கண்டனர். அதன் பின்னர் ஸ்ரீ சுந்தரேச குருக்கள் மற்றும் ஸ்ரீ துரையப்பா குருக்கள் என்பவர்கள் வேண்டுகோளை ஏற்று அந்த யாக குண்டத்தில் இருந்து எந்த விதமான காயமும் இன்றி வெளி வந்தார் அந்த அம்மையார்.

பச்சை வாழி அம்மன் (காத்தியாயினி) எழுந்தருளிய வரலாறு

🛕 அந்த காத்தாயி ஆலயத்தில் இன்னொரு சன்னதியில் இருப்பவளே முருகப் பெருமானின் தாயாரான பார்வதி என்ற பச்சை வாழி அம்மன்(காத்யாயினி). அவள் அங்கு பச்சை வழி அம்மன் என்ற பெயரில் அமர்ந்து உள்ளாள். முன்னொரு காலத்தில் மகா தவச்சீலரான காத்யாயன மகரிஷி சிவபெருமானை நி]னத்தபடி தவம் இருந்தார். அவர் வேண்டுகோள் என்ன என்றால் பார்வதி தேவி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அவளை பரமேஸ்வரனுக்கு தானே கன்னிகா தானம் செய்து கொடுக்க வேண்டும். மிக வேடிக்கையான வேண்டுகோளாக இருந்தாலும் அவருடையத் தவவலிமையை மெச்சிய சிவபெருமானும் அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவருக்கு பார்வதியை மகளாகப் பிறக்க வைத்தார். பிறந்த பெண் குழந்தைக்கு காத்யாயினி எனப் பெயர் சூட்டி பெருமையுடன் வளர்த்து வந்தார் காத்யாயன மகரிஷி. வயதிற்கு வந்த காத்யாயினியும் சிவனை எண்ணியபடி தவம் இருக்கத் துவங்கினாள். காத்யாயன மகரிஷியின் நண்பர்களான சிவ முனீஸ்வரர், தர்ம முனீஸ்வரர், வாழ் முனீஸ்வரர், புருட முனீஸ்வரர், நாத முனீஸ்வரர், யோக முனீஸ்வரர், மற்றும் மகா முனீஸ்வரர் என்ற ஏழு முனிவர்களும் காத்யாயினிக்கு உபதேசங்கள் புரிந்து அவள் தவம் வெற்றி பெற துணை நின்றனர்.

🛕 பல காலம் தீவிரமாகத் தொடர்ந்த தவத்தின் வலிமையினால் சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவளும் தயக்கம் இன்றி சிவபெருமானே தனக்கு கணவனாக வரவேண்டும் எனவும் அதன் பின் திருமண வரம் கேட்டு தன்னை பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கு அருள் பாலிக்கும் விதத்தில் அங்கேயே தனக்கும் ஒரு சன்னதி ஏற்பட வேண்டும் என்றும் வேண்டி நின்றாள். அதன்படி காத்யாய முனிவர் கன்னிகா தானம் செய்திட, காத்யாயினியின் மாப்பிள்ளை ஸ்வாமியாக வந்து நின்ற சிவபெருமானும் அவளுக்கும் அங்கேயே சன்னதி எழுப்ப, அங்கு காத்யாயினி விரத நோம்பிருந்தால் (பாவை நோன்பு என்பர்) தடை பெறும் திருமணங்கள் நடந்தேறும் என்ற நம்பிக்கையில் தன்னிடம் வேண்டிக் கொண்டு வருபவர்களை அருளியபடி அவள் குடி கொண்டு உள்ளாள்.

ஆலய அமைப்பு

🛕 ஆலயத்தின் மூல சன்னிதியில் அமர்ந்து உள்ளவள் பார்வதி தேவியான பச்சைவாழி அம்மன் என்ற காத்யாயினி. அவளுடைய வலப்புற சன்னிதியில் அழகு சொட்டும் கோலத்தில் அமர்ந்து உள்ளவளே இந்த ஆலயம் எழக் காரணமாக இருந்த காத்தாயி அம்மன். அவள் தன் வலக் கரத்தில் தாமரை மலர் ஏந்தி, இடப்புறத்தில் உள்ள திருக்கையை லாவகமாக ஊன்றி வைத்தபடி இருக்கிறாள். அன்னையின் கொண்டை முடி மூன்று முடிச்சுக்களுடன் காணப்பட, இடது கால் மடக்கி வைத்தபடியும், வலது காலை தொங்க விட்டபடியுமான நிலையில் அமர்ந்து உள்ள அந்த அன்னையின் வலது காலின் அடியில் ஒருவர் அமர்ந்தபடியும் இருக்கும் வகையில் அமைந்துள்ள அற்புதக் காட்சியை அள்ளித் தந்த வண்ணம் திருக்கோலக் காட்சி தருகிறாள்.

🛕 பச்சைவாழி அம்மனின் இடப்புறத்தில் அமைந்துள்ள சன்னிதியில் முருகப் பெருமான் வீற்று இருக்கின்றர். ஆலயத்தின் வெளிப்புற மண்டபத்தில் உள்ள ஒரு தனிச் சன்னிதியில் வலது கரத்தில் தாமரை மலர் ஏந்திய நிலையில் காணப்படும் சிலையை கஞ்சமலை சிவன் என அழைக்கின்றனர். கஞ்சமலை சிவன் தன் வலது கையை ஒரு நாகத்தின் மீது வைத்துள்ளார். அதே உருவ அமைப்பில்தான் மூல சன்னிதில் உள்ள பார்வதி தேவியான பச்சைவாழி அம்மனின் உருவச் சிலையும் கையில் தாமரை மலர் ஏந்திய நிலையில் காணப்படுவது ஒரு அதிசயமான காட்சி ஆகும். ஆலயத்தின் எதிர் புறத்தில் உள்ள தனி ஆலயத்தில் வீரபாகு முனிவர் வீரமித்திரர் பொம்மி வெள்ளியம்மாள் சமேதராக காட்சி தந்தபடி அமர்ந்து இருக்கிறார். ஆலயத்தின் தென் பகுதியில் ஒன்பது மாமுனிவர்களின் சிலைகள் உள்ளன. மேற்கு புறத்தில் லாட சன்யாசி என்ற தன்வந்திரி முனிவரும், பேச்சி அம்மன் என்ற பெரியாச்சி தெற்கு நோக்கி நின்றபடியும் உள்ள நிலையில் இருக்குமாறு அவர்களுக்கு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆலயத்தின் ஸதல விருட்சம் வில்வ மரத்துடன் கூடிய வேம்பு மரமாகும்.

Sithadi Kathayee Amman Temple Address

Sithadi, Tamil Nadu 612604

Source: http://murugan.org/tamil/kaattaayi.amman.htm



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை