- September 24, 2024
உள்ளடக்கம்
புதுக்கோட்டை நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. குகைக்கோவிலின் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலுள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின.
மதுரையைத் தலைநகராகக்கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி. 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கௌதமன் என்ற மதுரை ஆசிரியர், சித்தன்னவாசல் குகைக்கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத் தோற்றுவித்தார் என்று இக்குகைக் கோவிலிலுள்ள கல்வெட்டுகள்மூலம் அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.
மலையின் சரிவில் மேற்கு நோக்கி குடைவரைக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கருவறை மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதன் முகப்பில் இரண்டு தூண்களும் சுவரையொட்டி இரண்டு அரைத்தூண்களும், மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எட்டுப்பட்டைகளுடனும் காணப்படுகின்றன. இவற்றிற்கு இடையில் நடுவில் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகை காணப்படுகிறது.
கருவறை முன் காணப்படும் அரைத்தூண்களும் முகப்புத் தூண்களைப் போன்றே அமைப்பினைக் கொண்டவை. நடுவில் உள்ள எட்டுப் பட்டைகளில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் முன் கைப்பிடிகளுடன் கூடிய படிகள் உள்ளன. மண்டபத்தின் வடபுறச் சுவரில் சமண முனிவரின் வடிவம் சிற்ப உருவில் உருவாக்கப்பட்டுள்ளது. இவரது தலைக்கு மேல் குடையொன்று காணப்படுகின்றது. எதிரில் உள்ள தென்புறச் சுவரில் தலைக்குமேல் ஐந்து தலை நாகத்தினையுடைய ஒரு சமண முனிவரின் வடிவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
முன்னவர் சமயத் தலைவர் என்றும் பின்னவர் ஏழாவது தீர்த்தங்கரர் (பார்சுவநாதர் ) என்றும் கருதப்படுகின்றனர். கருவறையின் பின்புறச் சுவரில் மேலும் மூன்று தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆதிநாதர், மகாவீரர் நேமிநாதர் ஆகியோர் ஆவர். இவர்களின் தலைக்கு மேல் மூன்று குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட ஐந்து சமண முனிவர்களின் வடிவங்களும் அமர்ந்த தியான நிலையில் காணப்படுகின்றன.
பல்லவர்களுக்கு நிகராக பாண்டியர்களும் குடைவரைகள் மற்றும் கட்டுமானக் கோவில்களில் ஓவியங்களை தென் தமிழகத்தில் வரைந்துள்ளனர். பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் சித்தன்னவாசலில் மட்டும் சில ஓவியங்கள் நல்ல நிலையில் உள்ளன. இவ்வோவியங்கள், அஜந்தா, பனைமலை, காஞ்சி கைலாசநாதர் கோவில்களில் உள்ள ஓவியங்களை ஒத்த நிலையில் உள்ளன.
சித்தன்னவாசல் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வோவியங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. பாறையின் மீது சுதைப்பூச்சை மிக மெல்லிய கனத்தில் அமைத்து அவற்றின் மீது இவ்வோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
கருவறையின் விதானத்தில் நடுவில் தாமரை மலர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும் பல சதுர அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு சதுர அமைப்பிலும் நான்கு மூலைகள் கொண்டு நான்கு சிறிய சதுர அமைப்புகள் தீட்டப்பெற்றுள்ளன. இடையில் சுவஸ்திகக் குறி காணப்படுகின்றது. இந்தக் குறியின் நான்கு மூலைகளும் துறக்கம் (சுவர்க்கம்), நரகம், மனிதன், விலங்கு ஆகியவற்றைக் குறிப்பனவாகும். இக்குறிகளின் நாற்புறங்களில் அமர்ந்த நிலையில் இரு முனிவர்களும் ஆடு, சிங்கம் போன்ற விலங்குகளும் உள்ளன.
ஆட்டினையொட்டிய வடிவம், ஆட்டைச் சின்னமாகக் கொண்ட பதினேழாவது தீர்த்தங்கரரான குந்தநாதன் என்றும், சிங்கத்தை யொட்டிய வடிவம் அதனைச் சின்னமாகக் கொண்ட இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான “மகாவீர வர்த்தமானர்” என்றும் கூறுவர். மண்டபத்தின் விதானத்தில் தாமரை மலர்கள் நிறைந்த குளம் ஒன்று ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அதில் மீன், அன்னம், எருமை போன்ற உருவங்கள் காட்சியளிக்கின்றன.
மேலும் மூன்று சமணர்களின் உருவங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் தாமரை மலர்களைப் பிடித்த நிலையிலும், மூன்றாமவர் இடக்கையில் பூக்கூடையை ஏந்தியவாறும் வலக்கையால் பூக்களைப் பறிக்கும் நிலையிலும் காணப்படுகின்றார். தாமரைக்குளம் கடுகை பூமி என்றும் இது சமணர்களின் சமண சரணத்தின் ஒரு பகுதி என்றும் கூறுவர்.
தற்பொழுது ஓவியங்களின் பெரும் பகுதி கால வெள்ளத்தால் அழிந்து போய் உள்ளன. மண்டபத்தின் முகப்பில் உள்ள இரு தூண்களின் முன்புறம் இரண்டு நடனப் பெண்களின் வடிவங்கள் இடுப்பு அளவு வரை ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. இடப்புறம் உள்ள பெண்ணின் இடக்கை நீண்டுள்ளது. இது யானை தன் துதிக்கையை நீட்டியுள்ளது போன்று அமைந்துள்ளது. இதனை கஜமுத்திரை என்பர். வலது உள்ளங்கை சதுர அமைப்பினைக் கொண்டதாக வரையப்பட்டுள்ளது. இந்நிலை மிகவும் உயர்ந்த ஓவிய முத்திரையாகும்.
வலது தரணில் உள்ள நடனப் பெண்ணின் வலக்கை விரல்களும் உள்ளங்கையும் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. இவளது இடக்கை கொடி போன்று நீட்டிய நிலையில் அழகுறத் தீட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் மூக்கில் மூக்கணி அணிந்து காணப்படுகின்றாள். நடனப் பெண்கள் அணியும் அணிகலன்கள், கூந்தலை அலங்கரிக்கும் முறை, மேலாடை அணியும் தன்மை மற்றும் நடனக் கலையின் நுட்பங்கள் போன்றவற்றின் சிறப்பினை இவ்வோவியத்தின் மூலம் அறிய முடிகிறது.
இடப்புறத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் அரசன், அரசி ஆகியோரின் வடிவங்கள் ஓவியமாகக் காட்சியளிக்கின்றன. கிரீட மகுடத்துடன் அரசனின் வடிவமும் அவனது மிடுக்கான தோற்றமும் ஓவியக்கலையின் சிகரமாகக் காணப்படுகிறது.
இக்குடைவரை பாண்டியர்களின் கலைக் கருவூலமாகும். மேலும் இங்குள்ள பாண்டியப் பேரரசன் வரகுணன் சீவல்லபனின் கல்வெட்டு இக்குடைவரைக் கோவிலின் தென்புறத்தில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக்கோவில் சிற்பம், ஓவியம், நடனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சிறந்த கலைக்கூடமாகத் திகழ்வதுடன் பாண்டியர்களின் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
சித்தன்னவாசல் சமணர்கள் குகைக் கோவில்: FP4G+824, Sithannavasal, Cave Road, Madiyanallur, Tamil Nadu 622101