- September 24, 2024
உள்ளடக்கம்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள யாகந்தி ஶ்ரீ உமாமகேஸ்வரர் திருக்கோவில்
🛕 ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல பெரிய பெரிய கற்கள். கோவிலின் மெருகும், நேர்த்தியான சிற்பங்களும் கரடுமுரடான நிலப்பகுதியின் பின்னணியில் தனித்து நிற்கின்றன. இதைவிட ஒரு கோவிலுக்கு எழில் கொஞ்சும் இடவமைப்பு வேறு இருக்க முடியுமா?
🛕 இங்குள்ள குறிப்புகள் இந்தக் கோவில், 15-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. பிரதான கோவில்வாயில் வழியாக நுழைந்தால் முதலில் வருவது வரிசையாக அலங்கார வளைவுகளுடன் கூடிய திருக்குளம். இந்தக் குளத்தை சுற்றி நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபம் சின்னஞ்சிறிய கோபுரங்களுடன் வீற்றிருக்கிறது. இந்த மண்டபமே மகத்தான கட்டிடக் கலைக்குச் சாட்சியாக நிற்கிறது. இந்தக் குளத்திலுள்ள தண்ணீர் எப்போதும் வற்றாது நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
🛕 இந்த ஆலயத்தின் கோபுரம் விஜயநகர கட்டிடக்கலைப் பாணியின் உச்சம். இந்தக் கோவிலில் உள்ள இன்னொரு அதிசயம் கருவறைக்கு வெளியே மண்டபத்தில் உள்ள பெரிய நந்தி. அங்கிருக்கும் கோவிலின் குறிப்புப் பலகை, இதற்கு முன்னர் இந்த நந்தியை வலம் வர முடிந்ததாகவும், வளரும் ரிஷபத்திற்கு இடம் கொடுப்பதற்கு வசதியாக ஒரு தூண் அகற்றப்பட்டு விட்டதாகவும் தகவலை தெரிவிக்கிறது.
🛕 இந்தக் கோவில் வந்ததற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. இந்த இடத்தின் அழகில் லயித்துப் போய் அகத்திய முனிவர் இங்கு வெங்கடேசருக்குக் கோவில் கட்ட விரும்பினார். ஆனால் சிலையில் ஒரு குறை. எத்தனையோ தடவை முயன்றும் முழுமை பெறவில்லை. அதனால் கோவிலை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.
🛕 அகத்தியர் சிவனை வேண்டி அழைத்ததில் அவரும் தோன்றி இது விஷ்ணுவுக்கு உகந்த இடம் இல்லை என்று கூறவே, முனிவரும் மகேஸ்வரரைத் தன் தேவியுடன் அங்கேயே தங்குமாறு இறைஞ்சினார். சிவனும் , உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக எழுந்தருளினார். மற்ற இடங்களில் இந்த தெய்வத் தம்பதியர் தனித்தனியாகக் காட்சி தருவர். இங்கு மட்டும் மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்.
🛕 கருவறைக்குப் பின்னால் உள்ள தடத்தில் சென்றால் அகஸ்திய புஷ்கரணி எனும் தீர்த்தத்தை அடையலாம். அடுத்து குகைக் கோவில்களைப் பார்க்க முடிகிறது. முதல் குகையில் சிவலிங்கம் உள்ளது. இங்குதான் அகத்தியர் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. வெங்கடேஸ்வரர் வீற்றிருப்பது இரண்டாவது குகையில். மிகப் பெரியதும் இதுதான். வழி குறுகலாக உள்ளதால் குனிந்துகொண்டு சென்றால்தான் உள்ளே இருக்கும் லிங்கத்தைத் தரிசிக்க முடியும். இத்தனை சிரமம் இருந்தாலும் கோவிலின் அழகான முழுத் தோற்றத்தையும் பாறைகளின் அணி வகுப்பையும் இயற்கையின் பொலிவையும் இங்கிருந்துதான் பூரணமாக கண்டு ரசிக்க முடியும்.
🛕 இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சிறந்த சிவ பக்தர் ஒருவர், இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த பக்தர் ஆனந்தக் கூத்தாடினார். நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அதுதான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. கர்னூல் பக்கம் செல்லும்போது இந்தக் கோவிலுக்கும் சென்று வாருங்களேன்.
🛕 கர்னூலுக்கு இங்கிருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு (காச்சிகுடா விரைவு வண்டி) ரயில் உண்டு.
🛕 வீர பிரம்மேந்திர ஸ்வாமியின் கூற்றின்படி, இந்த யாகந்தி பசவண்ணா (நந்தி சிலை) உயிர் பெற்று வரும்போது இந்தக் கலி யுகம் முடியும்.
🛕 முனிவர் இங்கு தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காகங்கள் அவரைத் தொந்தரவு செய்ததால், அந்தக் காகங்கள் அந்த இடத்தில் நுழையக் கூடாது என்று சபித்தார் என்ற கதை நிலவுகிறது. காகமானது சனி பகவானின் வாகனமாகும். காகம் எப்படி இங்கு நுழையாதோ அதைப்போல இந்த இடத்திற்கு சனியும் வரமாட்டார் என்கின்றனர்.