×
Monday 25th of October 2021

ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோவில்


Srivaikuntam Srivaikuntanathan Perumal Temple

அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோவில்

மூலவர் ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர் ஸ்ரீ கள்ளப்பிரான்
அம்மன்/தாயார் வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
ஊர் ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி

🛕 சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, “வைகுண்டநாதர்” என்ற திருநாமம் பெற்றார்.

🛕 தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் “பால்பாண்டி” என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல்லாண்டுகளுக்கு முன், இக்கோவில் வழிபாடின்றி மறைந்து போனது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் “பால்பாண்டி’ என்ற பெயர் ஏற்பட்டது.

சூரியத்தலம்

🛕 நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. இங்கு சுவாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமியுடன் தாயார்கள் கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி இருக்கிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

கள்ளனாக வந்த பிரான்

🛕 வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்றபோது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். காலதூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், “”மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால்தான் நான் திருடினேன். ஆகவே, என்னை என குற்றப்படுத்த முடியாது,” என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். சுவாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் சுவாமிக்கு, “கள்ளபிரான்’ என்ற பெயர் ஏற்பட்டது.

108 போர்வை அலங்காரம்

🛕 தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

🛕 ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசுரத்தில், “புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். “பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும்வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே, நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள், அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,” என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

Srivaikuntam Temple Festival

வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா.

நம்மாழ்வார் மங்களாசாசனம்

🛕 சித்திரை விழாவின்போது, நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து, அத்தலத்து பெருமாள் பொலிந்துநின்றபிரானுடன் இங்கு எழுந்தருளுவார். சுவாமியை மங்களாசாசனம் செய்தபின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்துநின்றபிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர்.

தல சிறப்பு

🛕 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.

வைகுண்டமும் உண்டு – கயிலாயமும் உண்டு.. விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் (நவகைலாய தலம்) கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

பிரார்த்தனை

🛕 பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்

🛕 பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற இங்குள்ள கருடனுக்கு சந்தனக்காப்பிட்டு வழிபடுகிறார்கள்.

Nava Tirupathi Temples List in Tamil

🛕 நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி,

 1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
 3. செவ்வாய் : திருக்கோளுர்
 4. புதன் : திருப்புளியங்குடி
 5. குரு : ஆழ்வார்திருநகரி
 6. சுக்ரன் : தென்திருப்பேரை
 7. சனி : பெருங்குளம்
 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்)
 9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி

🛕 இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும்.

Srivaikuntam Temple Timings

Morning Worship Timing
07.00 AM to 12.00 PM
Evening Worship Timing
05.00 PM to 08.30 PM

🛕 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

Also, read

Srivaikuntam Perumal Temple Address

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

 • October 19, 2021
பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்
 • October 4, 2021
திருச்சி திருவானைக்கா திருக்கோவிலின் சிறப்புக்கள்
 • September 21, 2021
மகாவிஷ்ணுவைக் குறிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு