- September 24, 2024
உள்ளடக்கம்
மூலவர்
சுவாமிநாதர், சுப்பையா
அம்மன்/தாயார்
வள்ளி, தெய்வானை
தல விருட்சம்
நெல்லிமரம்
தீர்த்தம்
வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்
புராண பெயர்
திருவேரகம்
ஊர்
சுவாமிமலை
மாவட்டம்
தஞ்சாவூர்
கோவில் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும்.
முருகப்பெருமான் இக்கோவிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என அழைக்கப்படுகிறது
மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான்.
கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது.
சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே, அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார்.
பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும்.
தேவர்கள் அனைவரும் சென்று நடந்ததையும் நடக்க தேவைப்படுவதையும் சிவனிடம் எடுத்துக் கூறினார். எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய எனக்கு இது முருகப்பெருமான் மூலம் வரும் புதிய திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். “பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு?” என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான்.
பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க, எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார்.
முருகப்பெருமானின் திருவிளையாடலின் உச்ச கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் சிவபெருமான்.
கண்டறியாதன கண்டேன் என்ற திருநாவுக்கரசரின் பாடலின்படி..
தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர வைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதுத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது. (முருகன் திருக்கோவில்களில் சன்னதி முன் மயில் காணப்படும்). தன்னுடன் வரப்பெற்ற தேவர்களில் தமிழ் வருட பெயர் கொண்ட தேவதைகள் அறுபது பேரை இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சேவை செய்ய விட்டு சென்றார்.
தமிழ் வருடத்தேவர்கள் அறுபது பேரும் இத்தலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் முதுகு மேல் ஏறி தரிசிக்க வேண்டிய பாக்கியம் அருள முருகனிடம் இத்தலத்தில் அறுபது படிகளாக அமையப்பெற்றனர்.
காவிரி சுவாமிநாதனை வழிப்பட்டு இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி தரிசிக்க வேண்டும் என பிரார்த்தித்து குமார தாரை என்கிற பெயரில் இவ்வூரில் தொடர்ந்து இருக்க அருள் பெற்றுள்ளார்.
கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் தானும் காவிரியுடன் இணைந்து இத்தலத்தில் இருக்க அருள் வேண்டினார். முருகப்பெருமானும் தனது தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி (நெல்லி மரம்) தலவிருட்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காவிரி (குமாரதாரை), நேத்ர புஷ்கரணி, சரவண பொய்கை, பிரம்மட்டான் குளம், வஜ்ர தீர்த்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் பானரூபமாகவும், சிவபெருமான் ஆவுடைபீடமாகவும் அமையப்பெற்ற நான்கு அடி உயரத்திற்கு இடது கரத்தை தொடையில் அமர்த்தியும், வலது கையில் தண்டத்துடனும், மார்பில் யக்யோபியம் (பூணுல்) தரித்தும், (சிரசில்) உச்சிக்குடுமியுடன் கோவணத்துடன் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளுடன் கூடிய சக்தி வேலுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
திருமுருகாற்றுப்படை: நக்கீரர் அருளிய திருமுகாற்றுப்படை சைவத் திருமறைகளுள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளதாயினும் சங்க இலக்கியமாக பத்துப்பாட்டில் அது முதலாவதாக விளங்குகிறது. 317 வரிகளை கொண்ட இந்நூலில் முருகவேலின் ஆறு தித்தலங்கள் போற்றப்படுகின்றன. நான்காவதாக வருவது திருஏரகம். இதுவே சுவாமிமலை ஆகும்.
திருப்புகழ்: செந்தமிழ் கந்தக்கடவுளை நித்தமும் அடியார்கள் சிந்திக்க வேண்டி சந்தத்தமிழில் தேனமுதமான திருப்புகழ் பாக்களால் பாடியருளியவர் அருணகிரிநாத சுவாமிகள். சுவாமிமலையை திருஏரகம் என்று அறுதியிட்டு உறுதியாக காட்டியவர் அருணகிரிநாத சுவாமிகளே ஆவார். இத்தலம் பற்றி 38 திருப்புகழ் பாடல்கள் நமக்குக்கிடைத்துள்ளன. இந்நூலில் தோத்திரப்பகுதியில் இணைக்கப்பெற்றுள்ளன.
திருவிழா: திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள், சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள், வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா, ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள், புரட்டாசி – நவராத்திரி பெருவிழா – 10 நாட்கள், ஐப்பசி – கந்தசஷ்டி பெருவிழா – 10 நாட்கள், மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள், தை – பூசப்பெருவிழா, பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா, இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடி ஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு, அம்மாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கார்த்திகை, விசாகம் அன்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
பிரார்த்தனை: திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.
நேர்த்திக்கடன்: மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நேர்த்திகடனாக இருக்கிறது. வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
காலை 06:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.
10, Vatampokki Street, Taluk, Swamimalai, Kumbakonam, Tamil Nadu 612302
This temple is primary family temple. Start of any good event in the family is done only after doing primary worship to this temple. When I was in Delhi, I visited this temple once in every year. After coming to Bengalore about four year back, I could hardly visit this temple. I am waiting for His permission to visit Him. I am now 78-79. I hope His mercy to visit Him.