- March 1, 2023
சிவஸ்தலம் | தேப்பெருமாநல்லூர் திருக்கோவில் |
---|---|
ஸ்ரீ விஸ்வாதசுவாமி” | |
மூலவர் | ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, ஸ்ரீ ருத்ராக்ஷேஸ்வரர், ஸ்ரீ நாகவிஸ்வநாதர் |
அம்பாள் | ஸ்ரீவேதாந்தநாயகி |
தல விருட்சம் | வன்னி, வில்வம் |
தீர்த்தம் | பிரம்ம தீர்த்தம் |
புராண பெயர் | தேவராஜ புரம் |
காலம் | 1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | தேப்பெருமாநல்லூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Only by the people who has No Re-birth can get chance to enter this Temple!
“மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இக்கோவிலுக்கு வரமுடியும்” என்ற பெருமை பெற்ற தேப்பெருமாநல்லூர் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக 7 கி மீ தொலைவில் உள்ள ஊர்தான் தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இந்தக் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோவிலுக்கு அருகில் தான் உப்பிலியப்பன் கோவிலும், திருநாகேஸ்வரம் நாகநாத கோவிலும் உள்ளன.
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும்.
மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோவிலுக்கு பலமுறை வர முயற்சி செய்தும் சிவனை தரிசிக்க முடியவில்லை என்கிறது தல வரலாறு. இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.
“தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார்”. அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் அதிசயம் நிறைந்த ஆலயம் இது.
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படர்வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் கோவில் கிழக்கு நோக்கியும், விஸ்வநாதர் (ஸ்ரீ ருத்ராக்ஷேஸ்வரர், நாகவிஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்) கிழக்குப் பார்த்தாலும், கோவிலுக்குள் நுழைவது பின் புறமான மேற்கிலிருந்துதான். நுழைவாயிலில் ராஜகோபுரம் இல்லை, ஒரு சிறிய நுழைவாயில்.
அம்பாள் ஸ்ரீ வேதாந்தநாயகி பிரதான வளாகத்தினுள் தெற்கு நோக்கியவாறு வீற்றிருக்கிறாள். கொடிமரம் உள்ளது. கோவில் குளம் கிழக்குப் பகுதியில் உள்ளது. பிரதான கோவிலின் உள்ளே சிவலிங்கம் முழு ருத்திராட்சம் அலங்காரத்துடன் உள்ளது. 22,000 ருத்திராட்சங்கள் கொண்ட கவசம் இது. இங்கு அர்ச்சனையும் ருத்திராட்சம் கொண்டே செய்யப்படுவது இந்தக் கோவிலின் சிறப்பு. ஏக முக ருத்திராட்சத்துடன் தொடங்கி 12 முக ருத்திராட்சத்துடன் முடிக்கப்படுகிறது. மரகத கல் உடைய ஆபரணம் லிங்கத்தை அலங்கரிப்பதால் சூரிய ஒளியுடன் தீபாராதனை காட்டும்போது. கர்ப்பக்கிரகமே ஜொலிக்கிறது.
வருடத்திற்கொரு முறை இந்த கோவிலுக்கு வந்து இறைவனைப் பூசிக்கும் அதிசய நாகம்
வருடத்திற்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும். கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று. இத்தல சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். கோவில் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்படுகிறது. பிரதோஷம் தவிர மற்ற நாட்களில் காலை 11.30 மணிக்கு கோவில் மூடப்படுகிறது. சிவபெருமானின் ஆபரணத்திலிருந்து எடுக்கப்படும் ருத்ராக்ஷம் இங்கு பிரசாதமாக விற்கப்படுகிறது.
#ஜனவரி, 16, 2010 அன்று தேபெருமாநல்லூரில் சூரியகிரகணத்தின் போது நாகப்பாம்பு ஒன்று வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்த அதிசயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். காலை 10:30 மணியளவில் கிரகணம் தொடங்கவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு கோவிலுக்குள் நாகப்பாம்பு நுழைவதையும் சிவலிங்கத்தின் மேல் படுத்திருப்பதையும் கோவிலின் சிவாச்சாரியார் சதீஷ் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கண்டு களித்தனர்.
பாம்பு லிங்கத்திலிருந்து மெதுவாக இறங்கி, அபிஷேகப் பாதை வழியாக கோவிலின் ஸ்தல விருக்ஷமான பில்வ மரத்தை நோக்கிச் சென்றது. பின்னர் அது மரத்தின் மீது ஏறி சில வில்வ இலைகளைப் பறித்து மீண்டும் சிவன் சந்நிதிக்குத் திரும்பியது, வில்வ இலைகளை சிவபெருமான் மீது விழுவதற்காக அதன் வாயைத் திறந்தது. நாகப்பாம்பு அதோடு நிற்காமல், கிரகணம் முடியும் வரை அதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருந்தது. அதன் அருகே செல்ல முயன்ற ஒவ்வொரு பக்தரையும் பார்த்து பாம்பு சீறியது. இந்த அதிசயம் வீடியோவாகவும், போட்டோவாகவும் பதிவாகி நாளிதழ்களில் வெளியானது.
நாக விஸ்வநாதர் என்ற பெயர் இக்கோவிலில் உள்ள பாம்புகளுடன் தொடர்புடையது. அவ்வப்போது உரிக்கப்படும் பாம்பு சட்டை ஆலயத்தில் காணப்படுகிறது. விசுவநாத சுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம் கூறுகிறது.
மிகவும் பழமையான இத்திருக்கோவில் ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.
மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி.
நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேச கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
அம்பாள் சன்னதியில் சில வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில் அணைவதும் மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது தேப்பெருமாநல்லூர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த காட்சியையும் அம்பாளையும் வழிபட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?
சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், “நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.
அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,
“என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்று கேட்டாள். சனி பகவான், “நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்” என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள் முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.
இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள்.
அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் மட்டுமே அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.
உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார். இதனைக் கண்ட நாரதர், “இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார்.
“பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீ விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார்.
மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், “பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, “மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.
சாந்தமடைந்த அகத்தியர், “மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.
உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.
மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.
பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.
இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், “நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்” என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.
பழைய சாதத்தை ஏற்றுக் கொண்டு நம் பசிக் குறையைப் போக்கும் காளை வாகனத்தில் காட்சி தரும் ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தி
ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.
இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் ஸ்ரீ முருகப்பெருமான் தன் பத்தினிகளுடன் அருள்புரிகிறார்.
ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவ தம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.
அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர்.
சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.
கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச் சன்னதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.
இந்த கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார் இவர். ஒரு மகாபிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது.
இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், ‘‘இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன் அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம்.
அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.
இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.
திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவிலை அடுத்து இத்திருக்கோவிலில் ராகு பகவானும், கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் புரிகின்றனர். வேறு எங்கும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருவது இல்லை. ஒரே இடத்தில் இருவரையும் வணங்கும்படி ஒற்றுமையோடு அருள்புரிகின்றனர்,
நவ கிரகங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு திசை நோக்கி இருப்பதும் இங்கு மட்டும்தான் என்பது சிறப்பு அம்சம்.
பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.
சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
திறக்கும் நேரம்: தேப்பெருமாநல்லூர் கோவில் காலை 08.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும்.
Thepperumanallur Temple Contact Number: +91 435 246 3354, +91-94435 27247
அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில்,
தேப்பெருமாநல்லூர், கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 204