- September 24, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் | திருக்கேதீஸ்வரம் கேதாரீஸ்வரர் திருக்கோவில் |
---|---|
மூலவர் | திருக்கேதீச்வரர், கேதாரீஸ்வரர் |
அம்மன் | கவுரி |
தல விருட்சம் | வன்னி மரம் |
தீர்த்தம் | பாலாவி |
மாவட்டம் | மன்னார் மாவட்டம் |
நாடு | இலங்கை |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கேது பகவான் இக்கோவிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது.
திருக்கேதீஸ்வரம் கோவில் என்று அழைக்கப்படும் கேதாரீஸ்வரர் கோவில், இலங்கையில் அமைந்துள்ள ஒரு பண்டைய சிவன் கோவிலாகும். இலங்கையின் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். காலப்போக்கில், இது பல்வேறு மன்னர்கள், பரோபகாரர்கள் மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு மற்றும் விரிவுபடுத்தப்பட்டது.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து முக்கிய கோவில்களில் திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும். இந்தக் கோவில், பண்டைய சைவ புனிதர்களால் பாடப்பட்ட சிவஸ்தலமாகும். இக்கோவில் இலங்கை இந்து தமிழ் சிவபக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு மற்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில், நன்கு பராமரிக்கப்பட்ட பாலாவி குளம் என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான கோவில் குளம் உள்ளது. திருக்கேதீஸ்வரம் 276 முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகும், இது தேவாரத்தில் நாயன்மார்களால் போற்றப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் கோவில், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளால், 1952-ஆம் ஆண்டு, கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, அதன் பிறகு 1976-ஆம் ஆண்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரேதா யுகத்தின் போது மண்டோதரியின் தந்தையான அசுர கட்டிடக் கலைஞர் மயன் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. நாரதர், அகத்தியர், பிருகு போன்ற முனிவர்கள் வழிபட்ட தலம் இது! கேது பகவான் சிவனை வழிபட்டதால் இத்தலம் “கேதீஸ்வரம்” என்று பெயர் பெற்றது. திருக்கேதீஸ்வரத்தில், சிவன் கோவில் அமைந்துள்ளதால் இவ்விடம் புனிதம் அடைந்துள்ளது. தேவாதி தேவர்கள் கூட புனித நாட்களில் இந்த கோவிலுக்கு வருகை தந்து, இக்கோவிலில் உள்ள ஈஸ்வரனை வணங்கிவருவதாக ஐதீகம்!
திருக்கேதீச்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, கவுரி தெற்கு நோக்கியபடி தரிசனம் அருள்கிறாள். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம். இங்கு பூஜை செய்து முடித்தபின்னரே கருவறை தீபாராதனை. அடியார்களின் நலனைக் கருதி ஆலயத்துக்கு வெளிப்புறமாக சம்பந்தர் மடம், சந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன.
ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறுகிறது. காலையில் பாலாவியில் நீராடி, விரதத்துடன் நீர் முகந்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்விப்பது காசியைப் போன்றே கண்கொள்ளாக் காட்சியாகும்.
பிரார்த்தனை: ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்: சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்மிகு திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் காலை 07:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.
Thiruketheeshwaram Shiva Kovil Contact Numbers: +94232050800, +94232233003, +94112360316, +94112582890, +94112586042
XX56+4WQ, Thiruketheeshwaram Temple, Navathkuli – Karativu – Mannar Hwy, Thiruketheeswaram, Sri Lanka
கோவில்கள் நாம் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் கோவில்களை நமது இரண்டாவது வீடாகக் கருத வேண்டும், நாம் நம் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம், கடைகள் மற்றும் பிற தேவையான இடங்களுக்கு செல்வதைத் தவிர, நமது கால்கள் தானாகவே கோவில்களுக்கு நடந்து செல்ல வேண்டும், ஏனென்றால் கோவில்கள் தெய்வங்களின் இருப்பிடங்கள், நம் இதயபீடங்கள், புனிதமான யாககுண்டங்கள்.
Also, read: அருள்மிகு நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு, இலங்கை
“ஓம் ஸ்ரீ திருக்கேதீஸ்வராய நமஹ”
எழுதியவர்: ரா.ஹரிசங்கர்