×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில்


Thirukoshtiyur Sowmya Narayana Perumal Kovil

திருக்கோஷ்டியூர் அருள்மிகு சவுமியநாராயண பெருமாள் திருக்கோவில்

மூலவர் சவுமியநாராயணர்
தாயார் திருமாமகள்
தீர்த்தம் தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் திருக்கோட்டியூர்
ஊர் திருக்கோஷ்டியூர்
மாவட்டம் சிவகங்கை

திருக்கோஷ்டியூர் என்பது தமிழ்நாட்டில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் திருப்பத்தூலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கிராமமானது வைணவர்களின் புனிதத்தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெரிய கோவிலுக்காகப் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய நாட்டுத் திருத்தலங்களின் கீழ் வருகிறது. ஆழ்வார் ராமானுஜர் இங்கு வருகை புரிந்து ஸ்ரீ விஷ்ணுவை வழிபட்டுள்ளார். இந்தக் கடவுளின் பெயர் சௌமிய நாராயண பெருமாள். கடவுள் ஐந்து தலங்களில் உள்ளார். சௌமிய நாராயணனின் பிரம்மாண்டமான திருஉருவச் சிலை ஐந்து தலை நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.

thirukoshtiyur temple perumal under 5 head snake

Thirukoshtiyur Perumal Temple History in Tamil

தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.

இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு.

மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோவில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது. இப்பெருமாளை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார்.

கோவில் அமைப்பு

இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்ச னும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.

thirukoshtiyur temple deity thirumamagal

அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.

சவுமிய நாராயண சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.

கோவிலுக்குள் நுழையும்போது பலிபீடம், துவஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும்போது மெல்லிய வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது. ஆமாம், இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை சரபேஸ்வர லிங்கம் என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சந காதி முனிவர்கள், நாகர் சிலைகளும் காட்சியளிக்கின்றன.

கோவிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன்-சீதை – லட்சுமணன்-அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள்.

அடுத்து, சக்கரத்தாழ்வார் அருள் தரிசனம் நல்குகிறார். சற்றுப் பக்கத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகுற காட்சியளிக்கிறார். இதே தோற்றத்தையும், கிருஷ்ணனின் இன்னும் பல அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அப்போது மதுரையை ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய குரு, செல்வநம்பி என்பவர். திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவரான செல்வநம்பி வருடந்தவறாமல் கிருஷ்ணனின் அவதார விழாவை இந்த ஊரில் சிறப்பாக நடத்துவார். ஒருமுறை அவர் பெரியாழ்வாரை இந்த விழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

வந்த பெரியாழ்வார் அப்படியே பிரமித்துப் போய் நின்றுவிட்டார். அவருக்கு திருக்கோஷ்டியூர், ஆயர்பாடியாகவே தெரிந்தது. அங்கே கண்ணனின் குறும்புத்தனங்களைக் கண்டு மனம் விம்மினார். “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்” என்று பாடி சிறப்பித்தார். அவர் கண்டுகளித்த காட்சிகளில் ஒன்றுதான் இந்த (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம். இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் உருவம் நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது.

மேலே சில படிகள் ஏறிச் சென்றால் பெருமாள் சயன கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந் திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார்.

thirukoshtiyur sowmya narayana perumal sayana kolam

பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ஸ்தித நாராயணன் என்றும் திருமால் பெயர் கொள்கிறார். பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், உரக மெல்லணையான். உரகம் என்றால் பாம்பு, மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்!

அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடியும்.

thirukoshtiyur temple sowmya narayanan

கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்தவண்ணம் அவரது திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். இந்த வீடு கல்திருமாளிகை என்றழைக்கப்டுகிறது. நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யலாம்.

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை மகாமக கிணறு என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.

இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, ‘யார்?’ என்று கேட்க, ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,’ என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, ‘நான் செத்து வா!’ என்றார்.

புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, ‘ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோவில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார். இக்கோவிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

Thirukoshtiyur Temple Festivals

திருவிழா: மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

பிரார்த்தனை: இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

Thirukoshtiyur Temple Timings

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Thirukoshtiyur Perumal Temple Address

Thiruppatur road, National Highway 226, Tirukostiyur, Tamil Nadu 630210

Thirukoshtiyur Temple Contact Number: +914575241233

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை