- September 24, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர்
திருமுருகநாதர் திருக்கோவில்
மூலவர்
திருமுருகநாதஸ்வாமி, திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்
அம்மன்
முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை, ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
பதிகம்
சுந்தரர் – 1
தீர்த்தம்
சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
ஊர்
திருமுருகன்பூண்டி
மாவட்டம்
திருப்பூர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருமுருகநாத சுவாமி கோவில் வரலாறு: புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206 வது தேவாரத்தலம் ஆகும்.
🛕 சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார்.
🛕 இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள். “இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது”.
🛕 இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு: நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
🛕 கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
🛕 கோவிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழா: மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
🛕 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
🛕 கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து 5km தொலைவில், அவிநாசி – திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது.
🛕 திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக ளங்குகிறது.
🛕 சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்:
1. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
2. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
3. பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார்
உசிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும் கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போல் பலவேடர் வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இசுக்க அழியப் பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
4. பீறர் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கியராகி நாள் தொறும் கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏறு காலல் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
5. தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேதம் ஓதி
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
6. விட்டு இசைப்பன கொக்கரை கொடு கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பமு ஆகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
7. வேதம் ஓதி வெண்நீறு பூசிவெண் கோவணம் தற்று அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
8. படஅரவு நுண் ஏர் இடைப்பணைத் தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்
இடவம் எறியும் போவது ஆகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
9. சாந்தமாக வெண்நீறு பூசிவெண் பல் தலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
மோந்தை யோடு முழக்கு அறா முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.
10. முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மாநகர் வாய்ப்
பந்து அணைவிரர் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
Arulmigu Thirumuruganathasamy Temple, Sanathi Street, Thirumuruganpoondi, Tiruppur – 641652.
Contact Number: +91 4296276107