- September 24, 2024
உள்ளடக்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம்
திருப்பாம்புரம்
மூலவர்
சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர்
அம்மன்
பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை
தீர்த்தம்
ஆதிசேஷ தீர்த்தம்
புராண பெயர்
சேஷபுரி
ஊர்
திருப்பாம்புரம்
மாவட்டம்
திருவாரூர்
🛕 கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
🛕 அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
ராகு – கேது தோஷம் நீக்கும் கோவில்: திருப்பாம்புரம் ஒரு ராகு – கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.
🛕 மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
🛕 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.
🛕 ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
🛕 இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகிவிடுகின்றன. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.
🛕 இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.
🛕 ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
🛕 திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்ற் சம்பந்தர் தனது பதிகத்தில் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
1. சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புர நன்னக ராரே.
2. கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.
3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.
4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னக ராரே.
5. நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.
6. ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் பாம்புர நன்னக ராரே.
7. மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் பாம்புர நன்னக ராரே.
8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னக ராரே.
9. கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.
10. குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே.
11. பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே.
திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பிரார்த்தனை: போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மாலை 5 மணிக்கு மேல் பரிகார பூஜை கிடையாது.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
🛕 மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
அருள்மிகு பாம்புரேஸ்வரர் திருக்கோவில்,
திருபாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல்,
குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
PIN – 612203.
Thirupampuram Temple Contact Number: +91 435 246 9555 , +919443943665 , +919443047302
Hello Sir/Madam,
I would like to perform Rahu-Kethu pariharam poojaigal (full with homan etc) on 18th May morning during Rahul kalam. Since I am coming from chennai, I would like to just confirm this is possible.
I will pay necessary charges when I am there.
Kindly confirm if I reach the temple at 8 am on 18th May is it good enough?
regards
Sheker Sundhara Rajan
Mobile number for this temple does not reachable… How to contact the temple???
nice Information