×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்


Virutthapurisvarar [Pazhampathi Nathar] Temple in Tamil

அருள்மிகு பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில்

தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய லிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில்.

சிவஸ்தலம் பெயர் பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் [பழம்பதிநாதர்] திருக்கோவில்
மூலவர் பழம்பதிநாதர், விருத்தபுரீஸ்வரர்
அம்மன் கருணைநாயகி, பெரியநாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் – 1
தல விருட்சம் புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
தீர்த்தம் லட்சுமி, பிரம தீர்த்தம், இந்திர தீர்த்தம் (10 தீர்த்தங்கள்)
ஆகமம் சிவாகமம்
புராண பெயர் புன்னை வனம், திருப்புனவாயில்
ஊர் திருப்புனவாசல்
மாவட்டம் புதுக்கோட்டை

Thiruppunavasal Temple History in Tamil

திருப்புனவாயில் பழம்பதிநாதர் கோவில் வரலாறு

ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.

லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.

thirupunavasal temple virutthapurisvarar

பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோவிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவரை “விருத்தபுரீஸ்வரர்” என அழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது. சுந்தரர் இத்தலத்திற்கான தனது பதிகத்தில் இத்தலத்தை பழம்பதி என்று குறிப்பிடுகிறார்.

சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம் பலர் பாடி நின்றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே

கோவில் அமைப்பு

65 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், கோவிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு வெளியில் தென்புறம் வல்லப கணேசர் சந்நிதியும், வடபுறம் தண்டபாணி சந்நிதியும் இருக்கின்றன.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடபக்கம் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

virutthapurisvarar temple pancha vinayagar

இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று ” என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.

பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.

மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். சுவாமி சந்நிதியின் சுற்றுப் பிரகாரத்தில், பஞ்ச விநாயகர், தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

கருவறை வெளிப்பபறச் சுவற்றின் மேற்கு மாடத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர். இறைவியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் குடவறை காளி சன்னதி உள்ளது. கடும் உக்கிரத்துடன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியை கண்ணாடி வழியே தரிசிக்கலாம்.

இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தல விருட்சங்கள் இருந்துள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக் கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது.

thirupunavasal shiva temple amman

கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம்.

இத்தலத்தின் தீர்த்தமாக இலக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திரதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வருணதீர்த்தம் மற்றும் கோவிலுக்குத் தென்புறம் ஓடும் பாம்பாறு ஆகிய 10 தீர்த்தங்கள் உள்ளன. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 197 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும் வழக்கமும், செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள். கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வேஷ்டியும் துண்டும் சிவனுக்கென தனியாக நெய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

thirupunavasal shiva temple moolavar

திருவிழா: வைகாசி விசாகம் 11 நாள். வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது.

Thiruppunavasal Temple Timings

கோவில் திறக்கும் நேரம்: திருப்புனவாசல் பழம்பதிநாதர் கோவில் காலை 06:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும்.

கோவிலுக்கு எப்படிப் போவது?

அருள்மிகு பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு ஆவுடையார்கோவிலில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாடானை தலத்தில் இருந்தும் திருப்புனவாயில் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.

Virutthapurisvarar Temple Contact Number: +91-4371239212, 9965211768

virutthapurisvarar temple entrance

Thiruppunavasal Temple Address

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோவில், திருப்புனவாசல் – 614 629. புதுக்கோட்டை மாவட்டம்.

V349+96X, Thiruppunavasal, Tamil Nadu 614629



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை