- September 24, 2024
உள்ளடக்கம்
மூலவர்
ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன்), ஜெகன்னாதப் பெருமாள்
உற்சவர்
கல்யாண ஜெகந்நாதர்
அம்மன்
கல்யாணவல்லி, பத்மாசனி
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
புராண பெயர்
திருப்புல்லணை
ஊர்
திருப்புல்லாணி
மாவட்டம்
ராமநாதபுரம்
🛕 முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ர தரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. “தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்”.
🛕 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஆதி ஜெகநாதர் கோவிலும் ஒன்றாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.
🛕 ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
🛕 பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.
🛕 பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
சயன கோலத்தில் ராமன்
🛕 சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
🛕 தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000 மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட, உடனே ஆதி ஜெகன்னாத பெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல, பின்பு தசரதன் இத்தலத்தில் நாகபிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது. புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த பின், தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.
🛕 இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நரசிம்மர்
🛕 பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர, ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள்.
பட்டாபிராமன்
🛕 சீதையை மீட்டு இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த இராமர், இங்கு சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, இலட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இத்தலம் வந்த இராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். இராமன், அந்த பாணத்தை பிரயோகித்து இராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த சுவாமிக்கு, “வெற்றி பெருமாள்” என்றும் பெயருண்டு. இராமர் வழிபட்டதால் இவர் “பெரிய பெருமாள்” என்றும் பெயர் பெறுகிறார்.
சேதுக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோவில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், “ரத்னாகர தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
பிரார்த்தனை: பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்: தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
திருவிழா: ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், இராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்சவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், இராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ரா பவுர்ணமியன்றும் இராமபிரானுடன் தேரில் எழுந்தருளுவர்.
🛕 பிரம்மோற்சவத் திருவிழா – பங்குனி மாதம்; இராமர் ஜெயந்தி திருவிழா – சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி விழாக்கள் இந்தக் கோவிலில் சிறப்பாக நடைபெறும்.
திருப்புல்லாணி கோவில் திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.
பூஜை | நேரம் |
---|---|
காலசந்தி | 7:30 AM |
உச்சிக்காலம் | 12:15 PM |
சாயரட்சை | 6:30 PM |
சம்பா | 8:00 PM |
🛕 ராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் திருப்புல்லாணி. ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் ஆதி ஜெகநாதர் பெருமாளை உள்ளம் உருக வழிபட்டு வாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும், இது சத்தியம்!
🛕 Utira – Thiruppulani Road, Thiruppulani, Tamil Nadu 623532
Thirupullani Temple Contact Number: +914567254527 , +919486694035
Sir I am from blore. Pls let me know at wht time sahasranama pooja will take place at temple. So that we will plan to reach thr accordingly.
Namaskaram, Temple contact number is 9790537953, Previous contact number person past away, so can you please change the number, Thank you.