- September 24, 2024
உள்ளடக்கம்
கார்மேகம் போன்ற நிறத்தை உடைய பரந்தாமன் கிருஷ்ணனின் பால்ய பருவத்து லீலைகள் அநேகம் உண்டு. அதனை எண்ணும் பொழுதே நம் மனம் நெகிழ்ந்து பரவசமடையும்.
அப்படிப்பட்ட கிருஷ்ணன் கம்சனை கொன்ற பின்பு சினமும், பசியும் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதே ஸ்வரூபத்துடன் இன்றும் காட்சியளிக்கும் இடமே கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவார்ப்பு கிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.
இந்த கிருஷ்ணன் கோவில் 1500 வருடங்கள் பழமையானது. இந்த கோவிலில் இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல், ஆண்டின் எல்லா நாட்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் இந்த கோவில் திறந்திருக்கும்.
இங்கே கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் வலது கையில் உணவுடன் காட்சி தருகிறார். பின் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி உள்ளார். கடற்கரையில் மீனாட்சி ஆற்றின் கரையில் கோவில் உள்ளது.
ஒரு புராணத்தின்படி இந்தக் கோவில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தபொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது திருவுருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு தினமும் வழிபடும் வகையில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.
அவர்கள் வனவாசம் முடிந்து நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் வேண்டிக் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர்.
சிலையைப் பெற்றுக் கொண்ட கேரளாவின் சேர்த்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.
நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர் (சிலர் பில்வமங்களர் ஸ்வாமி என்றும் சிலர் ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் என்றும் கூறுவர்) அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரா வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது.
படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.
பாண்டவர்கள் தங்கள் அக்ஞாத வாசத்தை முடித்த பிறகு அவர்கள் வணங்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரகத்தை தங்களின் அக்ஷய பாத்திரத்துடன் சேர்த்து கடலில் விட்டதாகவும், சில காலம் கழித்து வேச்சூர் அருகே (மங்கலத்து விழா என்று அழைக்கப்படும்) வேம்பநாட்டுக் காயல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சில மீனவர்கள் உருளி இல்லாத ஸ்ரீ கிருஷ்ண விக்ரகத்தை கடலிலிருந்து மீட்டு எடுத்து சாரமங்கலம் என்ற இடத்தில் கோவில் எழுப்பி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தனர். விரைவில் இயற்கை பேரழிவுகள் அந்த இடத்தைத் தாக்கியது. அதோடு அந்த சுவாமி சிலையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த முறை அந்த சுவாமி சிலை உருளி பாத்திரத்தில் சென்று நேரடியாக விழுந்தது.
ஞானி பில்வமங்கள சுவாமி மேலே குறிப்பிட்டபடி கடலைக் கடக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணர் சிலை மீட்கப்பட்டது. கரையை அடைந்ததும் உள்ளே இருந்த சுவாமி சிலையுடன் உருளி தற்காலிகமாக வலிய மடத்தில் வைக்கப்பட்டது.
மேற்கண்ட புனித முனிவர் சுவாமி சிலையுடன் படகில் இருந்து இறங்கினார். ஆனால் சீரற்ற வானிலை காரணமாக அவரால் மேற்கொண்டு இறங்க முடியவிலை. எனவே, அந்த சுவாமி சிலையை உருளியில் வைத்துவிட்டு சென்றார். பின்னர், அவர் திரும்பி வரும்போது அந்த சுவாமி சிலை உருளியுடன் பொருத்தப்பட்டிருப்பதையும், உருளி குன்னன் காரிமேனன் என்ற தனி நபருக்குச் சொந்தமானது என்பதையும் கண்டார். இச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனேயே கோவில் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்து மடப்புறத்து சாமியார் என்ற மகான் உதவியுடன் கோவிலைக் கட்டி முடித்தார். இன்றும் இக்கோவில் மடப்புறத்து சாமியார் ஆசிரமம் சார்பில் சிறப்பு புஷ்பாஞ்சலி (பூக்கள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது).
அன்றைய காலத்தில் மாங்காய் ஊறுகாயையும் தேங்காய்த் தணணீரையும் மட்டுமே இறைவனுக்குப் படைக்க முடியும். பின்னர், ஸ்ரீ க்ருஷ்ணர் சிலை தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
ஆராட்டுவின் போது சிலை வலிய மடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாங்காய் ஊறுகாய் மற்றும் தேங்காய்த் தண்ணீர் வழங்கும் வழக்கம் இன்றும் மேற்கொள்ளப்படுகிறது.
கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன.
உலகில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே கருவறை மூடப்படுகிறது. காரணம் கிருஷ்ணன் எப்போதும் பசியோடு இருப்பதால் அவருக்கு உணவு வழங்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.
கோவில் கருவறை பொதுவாக அதிகாலை 2 மணிக்குத் திறக்கப்பட்டு அபிஷேகம் முடிந்த உடனேயே கடவுளின் முடி முதலில் உலர்த்தப்படுகிறது. நைவேத்யம் (உஷா பாயசம்) என்னும் சிறப்புப் பிரசாதம் அவருக்குப் படைக்கப்பட்டு, பிறகு தெய்வத்தின் எஞ்சிய உடல் மட்டும் உலர்த்தப்படுகிறது. உஷா பாயசம் அரிசி, வெல்லம், நெய், சிவப்பு வாழைப்பழம் மற்றும் உலர்ந்த தேங்காய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இக் கோவிலில் இந்த தயாரிப்பு முறை மிகவும் விசேஷமானது.
இவ்வாறு அனைத்து நேரங்களிலும் கிருஷ்ணன் பசியோடு இருப்பதினால் கோவில் மூடப்படுவதே இல்லை.
23.58×7 என்ற கணக்கில் வருடம் 365 நாட்களும் திறந்து இருக்கும். சூரிய, சந்திர கிரகணத்தின் போதும் திறந்தே இருக்கும்.
ஒரு முறை கிரகணத்தின் போது கருவறை மூடப்பட்டு திறந்த போது மூலவரின் இடுப்பில் இருந்த ஆபரணங்கள் விலகி இருந்தது. இடுப்பில் ஆடைகள் தளர்ந்து இருந்தது. இதனை கண்ட ஆதி சங்கரர் கிருஷ்ணன் பசியோடு இருப்பதால் தான் இப்படி ஆனது என்று கூறினார். அன்றிலிருந்து கிரகணத்தின் போதும் கோவில் மூடப்படுவது இல்லை.
சம்பிரதாயத்திற்காகக் கோவில் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.
இரண்டு நிமிடங்கள் கழித்து திறக்கும் போது அர்ச்சகர் கையில் கோடாரியோடு திறப்பார். காரணம் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்க தாமதம் ஆனால் கோடாரி துணையோடு கதவை உடைக்க அனுமதி உண்டு.
கிருஷ்ணன் குழந்தையல்லவா பசி தாங்கமாட்டார் என்பதற்காக தான் இந்த நடைமுறை. நடை சாத்தப்படுவதற்கு முன் அர்ச்சகர் வெளியே வந்து “இங்கே யாராவது பசியோடு இருக்கின்றீர்களா?” என்று கேட்பார்.
அப்போது நாம் சென்று இந்த கோவிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை வாங்கி உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போது வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.
சுவாமிக்கு ஒரு நாளில் ஏழு முறை நைவேத்யம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட உணவில் சிறிதளவு குறைந்து காணப்படுவது நம்மை ஆச்சரியமூட்டும் விஷயமாகும்.
இந்த கோவிலில் நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.
அதே போல் இந்த கோவிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
நள்ளிரவு 2 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கேரளாவில் 2 மணிக்கு திறக்கப்படும் கோவில் இது ஒன்று தான் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு அற்புத வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசித்து பிரசாதம் சாப்பிட்டுவிட்டு செல்லும் பக்தர்களுக்கு எந்தவிதமான நவக்கிரக தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம், சர்ப்ப தோஷம், விவாக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற எந்தவிதமான தோஷமும் அண்டாது என்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு நவக் கிரகங்களும், அஷ்ட திக்பாலகர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், யக்ஷர்களும் உறுதியளித்துள்ளதாக நம்பப்படுகிறது.
திருவிழா, சிறப்பு நாட்கள்: ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும்
விளக்கெடுப்பு திருவிழாவின்போது 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போல் வேடமணிந்து காலை மாலை இருவேளையும் இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடுவார்கள். மேலும் விளக்கெடுப்பு திருவிழாவின்போது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.
திருக்கொடியேற்றத்துடன் (திருக்கொடியேட்டு) திருவிழா தொடங்குகிறது விழா. ஆனையோட்டம் என்பது ஒரு கோவில் சடங்கு இங்கு யானைகள் பங்கேற்கும் திருவிழாவின் போது. இரண்டாவது நாள் விஷூ அன்று விஷுவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. ஐந்தாம் நாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் வலியவிளக்கு. ஆறாம் நாள் திருவிழா அஞ்சம் எனப்படும் புறப்பாடு. ஏழாவது வடக்கோட்டு புறப்பாடு, எட்டாவது கீழக்கோட்டு புறப்பாடு மற்றும் ஒன்பதாவது பள்ளிவேட்டை மற்றும் தெக்கோட்டு புறப்பாடு உள்ள ஒரே கோவில் இது. யானைகள் திருவிழா முடியும் வரை மாலை கோவிலைச் சுற்றி சுமார் 7 சுற்றுகள் மற்றும் இது தினமும் காலையில் நடக்கிறது திருவிழா முடியும் வரை. மாலை ஆராட்டுடன் விழா நிறைவடைகிறது.
இந்த திருவார்ப்பு கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சிலை நடுவில் வைக்கப்பட்டு நான்கு பக்கமும் மற்ற சிலைகளால் சூழப்பட்டுள்ளது. கோச்சம்பலம் தேவி கோவில் கிருஷ்ணர் கோவிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது. சிவன் கோவில் கிருஷ்ணர் கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ளது. மற்றும் சிவன் கோவிலுக்கு அருகில் நரசிம்ம சுவாமி சிலை நிறுவப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கோவிலுக்கு மேற்கே கணபதி, சுப்ரமண்யர் மற்றும் சாஸ்தா கோவில்களும், தெற்கே யக்ஷ கந்தவர்கள் கோவிலும் அமையப் பெற்றுள்ளன.
பத்திரமணல் தீவு, குமரகோம் பறவைகள் சரணாலயம், ஆலப்புகழா கடற்கரை, ஆலப்புழா கலங்கரை விளக்கம், மாராரி கடற்கரை, பே ஐலேண்ட் ட்ரிப்ட்வுட் அருங்காட்சியகம் மற்றும் திருநக்கரை மகா தேவா கோவில் ஆகியவை திருவார்ப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
பக்தர்கள் தரிசன நேரம்: இரவு 02:00 முதல் நண்பகல் 01:00 வரை. மாலை 05:00 முதல் இரவு 08:00 மணி வரை.
Thiruvarppu Krishna Temple Contact Number: +91-9605357527, 0481 238 2266
எப்படி கோவிலுக்குச் செல்லலாம்: சாலை: கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருவார்ப்பு மற்றும் பிற கிராமங்களுக்கு இடையே பல பேருந்து சேவைகளும் உள்ளன. திருவாரப்பு பேருந்து நிலையத்திலிருந்து 210 மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
தொடர்வண்டி: கோவிலில் இருந்து 8.2 கிமீ தொலைவில் உள்ள கோட்டயம் ரயில் நிலையம் அருகில் உள்ளது.
விமானம்: அருகிலுள்ள விமான நிலையம் கொச்சி சர்வதேச விமான நிலையம் திருவார்ப்புவிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
Thiruvarppu Sreekrishna swami temple, Thiruvarppu, Kottayam, Kerala – 686020