- September 24, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் | அருள்மிகு ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் |
---|---|
இறைவன் பெயர் | ஏடகநாதேஸ்வரர் |
அம்மன் பெயர் | ஏலவார்குழலி, மாதேவியம்பிகை |
தல விருட்சம் | வில்வம் |
தீர்த்தம் | பீரம தீர்த்தக்குளம், வைகைநதி |
புராண பெயர் | திருஏடகம் |
ஊர் | திருவேடகம் |
மாவட்டம் | மதுரை |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு தனி தனியாக கோபுரங்களுடன், இவ்வாலயம் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமி சந்நிதி நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு கொடிமரம், பலிபீடம், ஒரு உயர்ந்த மேடையில் நந்தி இருப்பதைக் காணலாம். உள் வாயில் வழியே இறைவன் கருவறையை அடையலாம். கருவறை சுற்று பிரகாரத்தில் 63 மூவர், சப்தமாதர்கள், இரட்டை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் ஏடகநாதர் கருவறையில் சுயம்பு லிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை சுற்று சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பகவர், துர்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. அம்பாள் கோவில் வாயிலில் உள்ள மணி மலேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாக தல புராணம் கூறுகிறது. அம்பாள் கருவறை சுற்று பிரகாரத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதியில் உள்ள ஒரு கல் தூணில் திருஞானசம்பந்தர் சிற்பம் இருப்பதைக் காணலாம்.
மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர்.
சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்டபோது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது.
மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது பாண்டிநாட்டு தலங்களில் 5வது தலம்.
பிரார்த்தனை: திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திருவிழா: சித்திரையில் மாதப்பிறப்பும், வைகாசியில் விசாகமும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பூப்புனித நீராட்டும், ஆவணி அவிட்டத்தில் (பவுர்ணமி) ஏடு எதிர் ஏறிய உற்ஸவமும், ஐப்பசியில் சூர சம்ஹாரமும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், தை மகத்தில் தெப்பத்திருவிழாவும், மாசியில் மகாசிவராத்திரியும், பங்குனியில் உத்திரமும் நடக்கின்றன. கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடக்கிறது.
அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில் காலை 06:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது.
Edaganathar Temple Contact Number: +91-4543259311
அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருவேடகம் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம்,
மதுரை மாவட்டம் – 625234.