×
Wednesday 18th of May 2022

Nuga Best Products Wholesale

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்


Thiruvidaimaruthur Mahalingeswarar Temple History in Tamil

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கம் திருக்கோவில்

இறைவன் மகாலிங்கேஸ்வரர், மகாலிங்கம்
இறைவி பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி
தல விருச்சம் மருதமரம்
தீர்த்தம் அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம்
புராண பெயர் மத்தியார்ச்சுனம்
ஊர் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்

Sri Mahalinga Swamy Kovil History

🛕 தல வரலாறு: அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டுவிட்டு இறைவனையும் காணவேண்டும் என்று கூற, உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

🛕 காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. “தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ” உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தல வரலாறு கூறுகிறது.

thiruvidaimaruthur mahalingeswarar temple inside

மகாலிங்கசுவாமி திருக்கோவில் பெருமை

🛕 தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும். தேவார பாடல் சிவத்தலங்கள் 274-ல் இத்தலம் 93-வது தலமாகும்.

🛕 திருவிடைமருதூர் தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாகும். இந்த ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நதி மிகவும் புகழ்பெற்றது. அம்பாள் சந்நதிக்கு தெற்கு பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி உள்ளது. மூகாம்பிகை சந்நிதி இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்தில் கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

🛕 இத்தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாடு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாட சென்றான். அப்போது வழியில் உறங்கி கொண்டிருந்த அந்தணர் ஒருவர் மன்னர் சென்ற குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இதனால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

🛕 அந்தணனின் ஆவியும் அரசனை பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இறைவன் சோமசுந்தர் மன்னர் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும் படி கூறினார்.

🛕 எதிரிநாடான சோழநாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படி செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. போருக்கு சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்தி சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.

🛕 வரகுண பாண்டியனை பற்றியிருந்த பிரம்ஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனை பின்பற்றி கோவிலிலுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசர் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் “இறைவன் வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறும்படி அசரீரியாக” ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார்.

🛕 அரசனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனால் தான் இன்றளவும் “இவ்வாலயத்தில் வரும் பக்தர்கள் பிரதான வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கில் உள்ள அம்மன் சந்நிதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து” வருகிறார்கள்.

thiruvidaimaruthur mahalingm swamy

ஆண்ட விநாயகர்

🛕 இத்தல விநாயகர் ஈசனை பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் பெற்றது .

🛕 பூஜை விதிகளை தேவர்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்து காட்சியருளுகிறார். சிவ பரிகார மூத்த தலங்கள் யாவும் அருகே அமையபெற்றதால் இது மகாலிங்க தலம் எனப்படுகிறது. மற்ற பரிகார தலங்கள்:

  1. விநாயகர் – திருவலஞ்சுழி
  2. முருகர் – சுவாமி மலை
  3. நடராசர் – சிதம்பரம்
  4. தட்சணாமூர்த்தி – ஆலங்குடி
  5. சண்டேகேஸ்வரர்- திருசேய் நல்லூர்
  6. பைரவர் – சீர்காழி
  7. நவகிரகம் – சூரியனார் கோவில்

🛕 இத்தலத்தில் மகாலிங்க பெருமானுக்கு பூஜை நடந்த பிறகே விநாயகருக்கு பூஜை நடைபெறும். இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாகும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.

🛕 இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும், இத்தலத்தில் உள்ள அசுவ மேதத் திருச்சுற்றை (முதல் மதில் உட்புற சுற்று) வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம். கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கைலாய மலையை வலம் செய்த பலனை பெறுவர்.

🛕 தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலுள் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோவிலும், கீழவீதியில் விசுவநாதர் கோவிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோவிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோவிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோவிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை பஞ்ச லிங்கத்தலம் எனறும் சொல்வர்.

🛕 சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோர்கள் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள். சோழர் கால கல்வெட்டுகள் பல உள்ளன.

பிரார்த்தனை

🛕 இத்தலத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர்.

🛕 அதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இத்திருக்கோவிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள், பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு.

🛕 மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்

🛕 பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மா பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

thiruvidaimaruthur mahalingeswarar temple nandi

Thiruvidaimaruthur Mahalinga Swamy Kovil Festivals

🛕 திருவிழா: தை மாதம் – தைப்பூசம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – தினந்தோறும் காலையும் மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கும். 10-ம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடையும். வைகாசி மாதம் – வசந்த உற்சவ பெருவிழா – 10 நாட்கள் திருவிழா – திருக்கல்யாண உற்சவம், அம்பாள் தபசு, அம்பாள், தன்னைத்தானே உற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறும். திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோவிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

Thiruvidaimaruthur Temple Timings

🛕 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Thiruvidaimaruthur Mahalingeswarar Temple Address

🛕 SH 64, Thiruvidaimaruthur, Tamil Nadu 612104

 Leave a Reply

Your email address will not be published.

you may also like

  • May 10, 2022
ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
  • May 4, 2022
அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரியதுறை
  • April 29, 2022
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில்