- September 24, 2024
உள்ளடக்கம்
ஆலயத்தின் புராதன பெயர்
விடைகுன்றுநாதர் ஆலயம்
தற்போது வழக்கத்தில் உள்ள பெயர்
வடக்குநாதர் ஆலயம்
ஆலயம் அமைந்துள்ள ஊர்
திருச்சூர், கேரளா
கோவிலை நிறுவியவர்
பரசுராமர்
மூலவர்
வடக்குநாதர்
அம்பாள்
பார்வதி
கோவில் கட்டிடக் கலைப்பாணி
கேரள கட்டிடக் கலை
தென் கைலாயம் கேரளாவில் தோன்றிய முதல் கோவில் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவில். ஆதியில் விடைகுன்றுநாதர் என்று தமிழ்ப் பெயரில் அழைக்கப்பெற்ற இந்த ஆலயம் இப்போது வடக்குநாதர் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். ஜமதக்னி முனிவரிடமிருந்த காமதேனுப் பசுவின் சிறப்புகளை அறிந்த கார்த்தவீரியார்ஜுனன் என்ற மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்று விட்டான். கார்த்த வீரியனை அழித்துப் பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். இதனால் கார்த்தவீரியனின் மகன்களுக்கும், பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கார்த்தவீரியன் மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த இடம்வரை பின்வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தான்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். “அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார்”. சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் வரவில்லை. நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். “கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார்”. இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது.
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது.
அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பதுபோல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.
மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
எப்போதாவது நெய் வெளிப்பட்டாலும் அது காணாமல் போய்விடுகிறது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய்க்கு மணம் கிடையாது.
மாணவர்களின் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் அற்புத சக்தி வாய்ந்த நெய்
இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
பரசுராமரால் உருவாக்கப்பட்ட புதிய நிலப்பரப்பில் வடக்கிலிருந்த குன்றில் இறைவன் இருந்ததால், இத்தல இறைவன் வடக்குநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததற்கும் இக்கோவிலுக்குமுள்ள தொடர்பு
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு இந்த கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
திருச்சூர் வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில், சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும். ஆலயத்தில் சிம்மோதரனுக்கும், கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதிசங்கரருக்கான சமாதியும் இக்கோவிலில் இடம் பெற்றிருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்தக் கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி வேண்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது. வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை. மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.
குழந்தைப்பேறு இல்லாமலிருந்த சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதியர் இக்கோவிலில் 41 நாட்கள் விரதமிருந்து இங்கிருக்கும் இறைவனை வேண்டி பூஜை செய்ததன் பலனாக ஆதிசங்கரரைத் தங்களது மகனாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்குநாதன் கோவில் திறக்கும் நேரம்: காலை 04:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.
Opening Time (Morning) | 4:00 AM | Opening Time (Evening) | 5:00 PM |
Neyyatam | 4:15 AM | Dheeparadhana | 6:15 PM |
Usha Pooja | 6:00 AM – 6:30 AM | Athazha Pooja | 7:00 PM – 7:45 PM |
Ucha Pooja | 9:00 AM – 9:45 AM | Thripuka | 8:00 PM – 8:20 PM |
Closing | 11:00 AM | Closing | 8:30 PM |
Vadakkunnathan Temple Contact Number: +91-4872426040 , +91-9188958014
Swaraj Round North, Kuruppam, Thekkinkadu Maidan, Thrissur, Kerala 680001