- September 24, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர்
வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)
மூலவர்
கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்
உற்சவர்
சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்
விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
தல விருட்சம்
வில்வம்
பதிகம்
சுந்தரர் – 1
தீர்த்தம்
வில்வம், குடகனாறு
ஆகமம்/பூஜை
காமிகம்
ஊர்
வெஞ்சமாங்கூடலூர்
மாவட்டம்
கரூர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.
ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் அழிந்தன. இக்கோவில் கருங்கற்கள் வெள்ளத்தில் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். அதன் பின் 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோவில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள் திரட்டி, திருக்கோவிலைப் புதியதாக எடுப்பித்து, 26-2-1986 அன்று (குரோதன ஆண்டு மாசி 14 – புதன்கிழமை) மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர்.
குடகனாறு மற்றும் சிற்றாறு (தற்போது இது குழகனாறு என்று அழைக்கப்பட்டாலும் சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார்) இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சிற்றாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உடைய இக்கோவிலில் உள்ள இறைவன் விகிர்த நாதேஸ்வரர் என்றும், இறைவி விகிர்த நாதேஸ்வரி என்றும் அறியப்படுகிறார்கள். இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் சுமார் 17 படிகள் கீழிறங்கித் தான் பிரகாரத்தை அடைய முடியும். ஆற்றங்கரையாகவும், தாழ்நிலப் பகுதியாகவும் இருப்பதால், வெள்ளம் அடித்துச் சென்றிருக்கவேண்டும் என்பது புரிகிறது. படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் சுவாமி சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள், அதையடுத்து வடமேற்குப் பகுதியில் வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.
திருவிழா: மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
1. எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தம்மோடு
ஏலம்இலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவல் அறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
2. குளங்கள் பலவும் குழியும் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுற் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும்
மணி மண்டபமும் இவை மஞ்சுதன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
3. வரை மான் அனையார் மயில்சாயல் நல்லார்
வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சத்
திரையார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
குறுந்தாள் பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில் சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
4. பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்
படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்
தண்ணால் அகிலும் நல சாமரையும்
அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவும் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணி அரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
5. துளை வெண்குழையும் சுருள்வெண்தோடும்
தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய்
பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
6. தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கு அரிய விடையேறி ஒன்னார்
புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகார்
முழவார் ஒலி பாடலோடு ஆடல் அறா
முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7. கடமா களியானை உரித்தவனே
கரிகாடு இடமா அனல்வீசி நின்று
நடமாட வல்லாய் நரையேறு உகந்தாய்
நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமாயிரமாம் பருத்துத்திப் பைங்கண்
பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
8. காடும் மலையுந் நாடுமு இடறிக்
கதிர் மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடம் தான் விரும்பி
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப்
பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
9. கொங்கார் மலர்க்கொன்றை அந்தாரவனே
கொடுகொட்டி ஓர் வீணை உடையவனே
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல்
பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகார்
துங்கார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
10. வஞ்சிநுண் இடையார் மயில்சாயல் அன்னார்
வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்கோன்
வனப்பகை அப்பன் வன்தோண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே.
இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம் என்று சம்பந்தர் தன் பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
இவ்வாலயம் காலை 06:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Venjamangudalur, Tamil Nadu 639109
விகிர்த நாதேஸ்வரர் கோவிலுக்கு எப்படிப் போவது?
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் 14km தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். அங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் 8km சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கரூர் – ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.