×
Saturday 23rd of October 2021

காரிய சித்தி மாலை


Kariya Siddhi Maalai Lyrics in Tamil

விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். நிதமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம்.

இந்த கார்ய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி வட மொழியில் இயற்றி கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

காரிய சித்தி மாலை

பாடல் 1 :

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபதுநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.

பாடல் 2 :

உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.

பாடல் 3 :

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.

பாடல் 4 :

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.

பாடல் 5 :

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.

பாடல் 6 :

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.

குறிப்பு: இதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு குணங்கள் வடமொழியில் சுதந்திரத்துவம், விசுத்த தேகம், நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி என்று கூறப்படுகின்றன.

பாடல் 7 :

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.

பாடல் 8 :

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.


Also, read


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 16, 2021
சிவவாக்கியம் – சிவவாக்கியர் பாடல்கள் (301 - 450)
  • September 6, 2021
சிவவாக்கியம் - சிவவாக்கியர் பாடல்கள் (151 - 300)
  • July 30, 2021
ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி