×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

விநாயகர் அனுபூதி – Vinayagar Anuboothi


Vinayagar Anubhoothi

காசிப முனிவரால்‌ அருளப்பட்ட இவ்‌ விநாயகர்‌ அநுபூதி இலகுவாக பாராயணம் செய்யக்கூடிய எளிய நடையிலும், பொருள் உணர்ந்து தாளக்‌ கட்டுக்கு அமைவாகவும்‌, இசையோடும்‌ பாடுவதற்கும்‌ சிறப்புடையதாகும்‌.

மேலும்‌ இந்‌நூலை நாள்தோறும்‌ பாராயணம்‌ செய்பவர்கள்‌ அத்தியாவசிய சிறப்புக்களான நாநலம்‌ பெற்று சொல்‌ வன்மை அடைந்து கீழ்மைப்‌ பண்புகளை அழித்து முழுமுதலை உணர்ந்து பேரின்பம்‌ பெறுதல்‌ போன்ற வேண்டுதல்களையும்‌ பெறுவர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை..

விநாயகர் அனுபூதி (மூலமும் – உரையும்)

1. நா நலம் பெற

பூவார் புனிதா! புவனத்தலைமைத்
தேவா! கரியின் சிரமே உளவா!
மூவாத் தமிழால் முறையே உனைஎன்
நாவால் புகழும் நலமே அருள்வாய்.

பொழிப்புரை: அழகு பொருந்தியவனே! ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவன் ஆனவனே! யானையின் முகத்தைக் கொண்டவனே! நான் உன்னைப் பழமையான தமிழால் பாடும் வலிமையை எனக்கு அருள்வாய்!.

2. சொல் வன்மை பெற

வில்லாண் மையரும் விரிமா தமிழில்
வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்
நல்லாண் மையது நனியே மிளிரும்
சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே!

பொழிப்புரை:– துரியப் பொருள் ஆனவனே! தோள் வலிமை மிக்கவரும், தமிழில் புலமை மிக்கவர்களும் உன்னைப் புகழ்வார்கள். அவ்வாறே நானும் உன்னைப் பாட சொல்வன்மையை எனக்குக் கொடுப்பாயாக!.

3. கீழ்மைப் பண்புகள் அழிய

காமா திகளாம் கயமைப் பிணிகள்
போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள்
கோமா! கருணைக் குகனார் தமியா
பூமா! பொலமார் புலவா! வருவாய்!

பொழிப்புரை: தலைவனே! முருகனின் சகோதரனே! பூவுலகத்துக்குத் தலைவனே! ஞான வடிவான புலவனே! காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் கீழ்த்தரமான பண்புகள் என் உள்ளத்திலிருந்து போகும்படி அருளி, என் குற்றம் தவிர்த்து, என்னை ஆட்கொள்ளுவாயாக!.

4. முழு முதலை உணர

அத்தே வர்களும் அயன், மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்
‘கத்தா கரிமா முகத்தான்’ எனவே
வித்தா ரமொடு விளம்பும் இறையே!

பொழிப்புரை:– தேவர்கள், திருமால், நான்முகன், சிவபெருமான், சைவ சித்தாந்திகள் போன்றவர்களால் “வழிபடுவதற்கு உரிய முழுமுதற் கடவுள் விநாயகனே ஆவான்” என்று புகழப்படும் விநாயகனே!

5. குருவாய் வந்து அருளுவான்

காவா எனைஐங் கரனே! மதுரப்
பாவா ணர்புகழ் பரமென் குருவே!
நீவா விரைவாய் நிமலன் புதல்வா!
தாவா கருணைத் தளிர்சே வடியே!

பொழிப்புரை: ஐந்து கைகளை உடையவனே! என்னைக் காப்பாய். இனிமையாகப் புலவர்களால் பாடப்படும் குருவே! தூய்மையான வடிவுடைய சிவபெருமானின் மைந்தனே! நீ வருவாயாக. குற்றமில்லாத கருணையைப் பொழியும் தளிர் போன்ற செம்மையான அடிகளை உடையவனே!.

6. பேரின்பம் பெற

ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே;
விரும்பும் பெருமான்; விடையோன் குமரன்;
சுரும்பார் தொடையன்; சுகமா குமெலாம்
அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!

பொழிப்புரை: ஒற்றைக் கொம்பை உடையவன்; மோதகத்தை விரும்பும் சிவபெருமானின் மைந்தன்; வண்டுகள் மொய்க்கும் மாலையை உடையவன்; அடியவர்களுக்கு இன்பங்களை அருள்வான்.

7. விதியினால் வரும் வேதனை நீங்க

பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்
சூழ்வார், பணிவார், துதிப்பார் அவர்க்கே
ஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழ
வாழ்வே தரும்வல் லபைநா தனரே!

பொழிப்புரை: சிறப்புப் பொருந்திய வாயினை உடைய விநாயகனின் மலர் போன்ற திருவடிகளை அணுகுபவர், பணிந்து வணங்குபவர், புகழ்ந்து பாடுபவர் ஆகியவர்களின் முன்வினைப் பயனைத் தீர்த்து, நல்ல வாழ்வைத் தருபவன் வல்லபையின் நாதனே ஆவான்.

8. பேய் பூதங்களால் வரும் துன்பங்கள் அகல

பேய்பூ தமொடு பிலிசூ னியமும்,
பாய்வேங் கையதும் பரையின் அருமைச்
சேய்வா ரணனார் திருப்பேர் புகலப்
போய்மாய்ந் திடுமே புனிதம் வருமே!

பொழிப்புரை: பராசக்தியின் புதல்வனாகிய விநாயகனது பெயரைச் சொல்பவருக்குப் பேய், பூதம், பில்லி, சூன்யம் போன்றவற்றாலும்’ வேங்கை முதலிய விலங்குகளாலும் விளையும் தீமைகள் போகும், தூய்மையும் வந்தடையும்.

9. நல்ல புலமை பெற

பல்காப் பியங்கள் பகரும் திறமும்
ஒல்காப் புகழும், உயிர்செல் வமதும்
நல்காய் நலமாய்; நளின மலர்த்தாள்
செல்வா! திகழ்சித் திவிநா யகனே!

பொழிப்புரை: அழகான மலர் போன்ற அடிகளை உடைய செல்வனே! சித்தி விநாயகனே! நான் பல்வகைக் காப்பியங்கள் இயற்றும் திறமையையும், அழியாத புகழையும், சிறந்த செல்வத்தையும் பெற அருள்வாய்!.

10. சிறியவனும் அருள் பெற

பூந்தார் குழல் வில் புருவம், தளிர்போல்
ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர்
சார்ந்தே விளங்கும் தனிமா முதலே!
தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே!

பொழிப்புரை: மாலையை அணிந்த கூந்தலையும், வில் போன்ற புருவங்களையும், வில் போன்ற புருவங்களையும், இளந்தளிர் போன்ற உடலினையும் பெற்றிருக்கும் சித்தி, புத்தி என்ற தேவிமார் இருவரையும் பெற்று எழுந்தருளியிருக்கும் ஒப்பில்லாத முதல்வனே! உன்னைத் தொழுதேன். சிறியவனாகிய எனக்கும் அருள் செய்வாயாக.

11. புலன்களை அடக்க

வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்
கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிர
எஞ்சித் தமதில் இனிதே உனது
கஞ்சக் கழல்வை கணநா யகனே

பொழிப்புரை:- தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய்!

12. வறுமை நீங்கிச் செல்வம் பெருக

பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்;
உல்லா சமிளிர் ஒருகை முகனே!!

பொழிப்புரை:- அழகான துதிக்கையை உடையவனே! பாவங்களைச் செய்யத் தூண்டும் வறுமையையும், கொடிய நோய்கள் எல்லாவற்றையும் அழித்து என்னை ஆண்டு கொள்ள வல்லமை பெற்றவன் நீ ஒருவனே! எனக்கே வளங்களைத் தருவாய்.

13. இப்பிறவிப் பயன் பெற்று வீடுபேறு பெற

மகத்தாய் அணுவாய் மதியாய்க் கதிராய்,
செகத்தாய், அறிவாய்த் திகழ்சாட் சியதாய்,
அகத்தும், புறத்தும் அகலாப் பொருளாய்,
இகத்தும் பரத்தும் இருக்கும் பரமே!

பொழிப்புரை:- பெரிதாயும், அணுவாயும், சந்திரனாயும், சூரியனாயும், சகமாயும், அறிவாயும், நல்வினை தீவினைகளுக்குச் சாட்சியாயும், அகத்திலும், புறத்திலும் அகலாத பொருளாயும், இம்மைப் பயனாயும், மோட்சமாயும் திகழும் விநாயகனே!

14. நிறைந்த அருளைப் பெற

கருணைக் கடலைங் கரனே! கபிலர்க்(கு)
அருளே கொடுத்தாய்; அபயம் அளித்தாய்!
தருவே அனையாய்! தமியன் தனைஆள்
குருவே பொறுமை குணநா யகனே!

பொழிப்புரை:– கருணைக் கடலாகத் திகழும் ஐந்து கரத்தானே! கபிலருக்கு அருளைக் கொடுத்து, அடைக்கலம் தந்தாய். கற்பக மரம் போன்றவனே! தனியான என்னை ஆளும் குருவே! பொறுமை மிக்க குணங்களுக்கெல்லாம் தலைவனே!

15. அருட்பாடல்கள் இயற்ற

கற்பார் இதயக் கமலத்(து) உறையும்
அற்பார் ஒளியே! அழகுஆனை முகா!
பொற்பாய் உனது பொலந்தாள் மலர்க்கே
நற்பா கொடுத்தேன் நனிஏற்(று) அருளே!

பொழிப்புரை:– கற்பவர்கள் உள்ளத் தாமரையில் ஒளியாக எழுந்தருள்பவனே! அழகிய ஆனை முகத்தவனே! உன் பொன் போன்ற திருவடிகளுக்கு நல்ல பாமாலையை நான் கொடுத்தேன். இதை நீ ஏற்றுக் கொண்டு அருள் புரிவாயாக!.

16. செய்த பிழைகள் எல்லாம் தீர

ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்
சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்
சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கை
ஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.

பொழிப்புரை:- உன் கருணைத் திறம் அறியாத நான் உன் திருவடிகளில் செய்த பிழைகளைத் தீர்ப்பாய்! கோபம் தவிர்ப்பாய்; பரம்பொருளானவனே! நான் இயற்றிய தமிழ் மாலையை உனது துதிக்கையில் ஏற்று அருள்வாய்!.

17. எல்லாப் பிறவிகளிலும் இறை எண்ணம் பெற

எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்
சொந்தத் தமிழால் துதிசெய் திடவே
கொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!
சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!

பொழிப்புரை:- மணம் வீசும் மலர் மாலைகளை அணிந்த வல்லபையின் மனத்திற்கு உகந்தவனே! நான் எந்த வகையான பிறப்பினை எடுத்தாலும் உன்னை என்னுடைய தமிழ்மொழியால் போற்றி வழிபட எனக்கு அருள் செய்வாய்.

18. பழைய பாவங்கள் தீர

சிந்தா மணிதான் திகழ்மார் புடையாய்!
முந்தை வினையை முழுதும் தொலைத்(து) ஆள்
எந்தாய்! எளியேன் எனை நீ எழிலாய்
வந்து ஆள்! உயர் ஓ வடிவப் பொருளே!

பொழிப்புரை: என் தந்தையே! பிரணவத்தின் வடிவாகவும், பொருளாகவும் விளங்குபவனே! சிந்தாமணி விளங்கும் மார்பை உடையவனே! முற்பிறப்பு வினைகளை முழுதும் தொலைத்து எளியவனான எனக்கு முன் அழகாகத் தோன்றி வந்து ஆள்வாயாக!.

19. வலிமை பெற

பகையார் அவர்முப் புரமே பொடியா
நகைசெய் தபிரான் நலமாம் கனியை
வகையாய் அருள வலம்வந் தவனே!
தகையாய்! திடம்நீ தருவாய் மணியே!

பொழிப்புரை:- முப்புரங்களையும் தன்னுடைய சிரிப்பினால் பொடி செய்த சிவபெருமான், ஞானப்பழத்தை உனக்கே கொடுக்கும்படி, அவனையும், உமையம்மையையும் வலம் வந்தவனே! சிறந்த பண்பை உடையவனே! எனக்கு வலிமையை தந்தருள்வாய்.

20. எல்லாச் செல்வங்களும் பெற

சீரோங் கிடும்: நல் திறமும் பெருகும்:
ஏரோங் கிடுமே: இனிதாம் திடமே
பேரோங் கிடும்: நல் பெரும்வே ழமுகன்
தாரோங் கடியைத் தொழுவார் தமக்கே!

பொழிப்புரை:- யானை முக விநாயகனின் திருவடிகளைத் தொழுபவர்களுடைய புகழ் ஓங்கும். அழகு மிகும்; வலிமை மிகுதியாகும் என்பது உறுதி.

21. குழந்தைப் பேறும் செல்வமும் பெற

மகப்பே(று) அருள்வான்: மகிழ்வாய் நிதியை
அகத்தே தருவான்: அணியன்: கரிமா
முகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்
செகத்தீர் தொழுமின்! தொழுமின்! தினமே!

பொழிப்புரை:- விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான்: இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்: அவன் அருகிலேயே இருப்பான்; விநாயகனின் திருவடியை முறையாக நாள் தோறும் தொழுவீர்களாக.

22. நவக்கிரகங்களும் நல்லருள் புரிய

பெருமைப் பரிதி, பிறை, இத் தரைசேய்,
அருமால், குருவே, அசுரர், குரவன்,
கருமை அரவு கள்இவை நலமாம்
ஒருகை முகன்பேர் உரைப்பார் அவர்க்கே!

பொழிப்புரை:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களும், விநாயகருடைய திருப்பெயரை உச்சரித்தவர்களுக்கு எப்பொழுதும் நன்மைகளையே செய்யும்.

23. மன அமைதி பெற

ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிக
வாடித் திரிவாய் மனனே! தகுமோ
கூடிக் குலவா ஒருகோ டனைநீ
பாடிப் பணிவாய் பணிவாய் நலமே!

பொழிப்புரை:- என் மனமே! அமைதியைத் தேடி ஏழு உலகங்களிலும் திரிந்தாய். இது உனக்கு பொருத்தமுடையது அன்று. ஒற்றைக் கொம்பை உடைய விநாயகனைக் கூடுவாய்! பாடிப் பணிவாய்!.

24. பயமின்றி வாழ

ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்
பூகாப் பவனைப் பொறுமைக் குணனை,
மாகா ளியவள் மகனை, மனனே!
நீகா எனவே நிதமும் பணியே!

பொழிப்புரை:- மனமே ஓங்கார வடிவை உடையவனை, அழகிய ஐந்து கரங்களை உடையவனை, உலகைக் காப்பவனை, அடியார்கள் செய்யும் பிழைகளைப் பொறுப்பவனை, சக்தி மகனாகிய விநாயகனை அடைந்து, ‘நீ காப்பாய்!’ என்று நாள்தோறும் பணிவாயாக!.

25. நலங்கள் பல வந்து சேர

தேடிப் பணிவார் சிலபேர்: சிறப்பாய்
ஆடிப் பணிவார் சிலபேர்: அணியாய்ப்
பாடிப் பணிவார் சிலபேர்: அவரை
நாடித் தருவான் நலம்ஐ முகனே!

பொழிப்புரை:- விநாயகப் பெருமானைச் சிலர் தலங்கள் தோறும் தேடிச் சென்று பணிவார்கள்: சிலபேர் அவனைப் பாடி, ஆடிப் பணிவார்கள். சில பேர் கூட்டம் கூட்டமாய் கூடிப் பாடிப் பணிவார்கள். இவ்வாறு பத்தி செய்பவர்ளைத் தேடிப் போய் விநாயகன் நலன்கள் பலவற்றைத் தருவான்.

26. பகை நீங்க

துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்
பட்டே இரியப் படையை விடுவாய்!
சிட்டர் புகழும் திறமே! வளரும்
மட்டில் மதமார் மழலைக் களிறே!

பொழிப்புரை:- பொல்லாதவர்களும், முறையில்லாமல் வாதம் செய்பவர்களும் பொடிப் பொடியாகப் போகும்படி, தன் திருக்கரத்தில் உள்ள படைக்கலத்தை விடுபவனே! நல்லவர்கள் புகழும் உறுதிப் பொருளே! அளவில்லாமல் கருணையாகிய மதநீர் பொழியும் அழகிய விநாயகரே!

27. இதமான வாழ்வு பெற

விண்நீ: உடுநீ: மிளிர்வா யுவும்நீ:
மண்நீ: அனல்நீ: புனல்நீ: மதிநீ:
கண்நீ: மணிநீ: கவினார் ஒளிநீ:
எண்நீ: எனைஆள் இதம்செய் பவனே!

பொழிப்புரை:- வானும் நீ: அதில் விளங்கும் விண்மீன்களும் நீ: சந்திரனும் நீ: இவற்றைக் காணும் கண் நீ: கண்ணினுள் மணி நீ: அதில் ஒளிரும் ஒளி நீ: எண்ணப்படுகின்ற பொருள் நீ: என்னை ஆட்கொண்டு நன்மை செய்பவனே!.

28. நல்ல வழியில் செல்ல

தீய நெறிநாத் திகத்தில் திளைத்தே
ஆய நெறியை அறியா திருந்தேன்
தூய நெறியின் தொடர்காட் டினைநீ
ஆயும் நெறியும் அறிவித் தனையே!

பொழிப்புரை:-. விதி வசத்தால் நாத்திகத்தில் உழன்றேன்: உன் அருளைப் பெறும் சன்மார்க்க வழியை அறியாமல் காலம் கழித்தேன்: தூய்மையான பக்தி வழியைக் காட்டினாய்: நான் உய்யும் நல்ல வழியை அறிவித்தாய்.

29. பிறவித் துன்பம் நீங்க

தொல்லைப் பிறவித் துயர்மா கடலுள்
அல்லல் வழியில் அழுந்தல் முறையோ?
செல்வா! பிரமச் செழுமா மணியே!
நல்லாய் கரைஏற் றிடும்ஐங் கரனே!

பொழிப்புரை:-. நான் தொடர்ந்து வரும் பிறவியாகிய துன்பக் கடலில் மூழ்கி அழுந்திக் கிடப்பது முறையோ? செல்வனே! பிரமனும் போற்றும் மணியே! நன்மை புரிபவனே! என்னைக் கரை ஏற்றிடும் ஐந்து கரமுடையவனே!.

30. அறியாமை அழிய

மாயை எனும்கார்த் திரையைத் தெரித்துஎன்
பேயை விரட்டும் பெருமான் ஒருவன்:
தாயை நிகர்த்த தனிமா முதல்வன்:
காயைக் கனிஆக் குவன்கண் ணியனே!

பொழிப்புரை:- உயர்ந்தவனே! நீ மாயை என்னும் கரிய திரையைக் கிழித்து, என் மனதில் தோன்றும் அச்சமாகிய பேயை விரட்டக் கூடிய பெருமான். தாயைப் போன்ற ஒப்பற்ற முதல்வனே! காயையும் கனி ஆக்குவது போல், பக்குவம் இல்லாத என்னையும் பக்குவப் படுத்துபவனே!

31. நன்மைகள் பெற

அயில்கை உளநம் அறுமா முகற்கே
மயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்
செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்
ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.

பொழிப்புரை:- அடியார்கள் சிறப்படையும்படி நன்மைகளைச் செய்து, அவர்களை உயர்த்துபவன் விநாயகப் பெருமானே ஆவான். அவன் வேலைத் தாங்கிய முருகனுக்கு மயிலை வாகனமாக மகிழ்ந்து அளித்தான்.

32. அர்ச்சித்து அருளைப் பெற

கரிமா முகனின் கருணை அறியார்
எரிவாய் நரகில் இடரே படுவார்:
விரிமா தவரும் விரும்பும் பெரியோன்
அரிதா அருச்சித்(து) அவனைப் புகழே.

பொழிப்புரை:- யானை முகத்தவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள் வெம்மையான நரகத்தில் துன்பப்படுவார்கள். தவத்தை விரும்பிச் செய்யும் தவசிகள் விரும்பும் விநாயகனை வழிபட்டு அவனைப் புகழுங்கள்.

33. எண்வகைச் சித்திகளைப் பெற

இருநான்(கு) அவதா னம்எண்சித் திகளும்
பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்
தருவான்! தருவான்! தரவே விரைவாய்
வருவான்! வருவான்! வழுத்தாய் மனனே!

பொழிப்புரை:- உமையம்மையின் மைந்தனாகிய விநாயகன் எட்டு அவதானங்களையும், எட்டுச் சித்திகளையும் விரைவாக வந்து அருளுவான். அத்தகையவனை, மனமே! போற்றுவாயாக!

34. பிரணவப் பொருளை உணர

கருமால் வினையைக் களைந்தே அருளும்
திருவைந் தெழுத்தும் திகழா றெழுத்தும்
இருநான் கெழுத்தும் எமதுஐங் கரனார்
ஒருபேர் எழுத்தே: உணர்வாய் மனனே!

பொழிப்புரை:- இரு வினைகளையும் போக்கும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தும், நம: குமாராய என்னும் ஆறெழுத்தும், ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்தும், விநாயகருக்குரிய ஓம் என்னும் ஒரே எழுத்தில் அடக்கம் என்பதை மனமே உணர்வாயாக.

35. இறை எண்ணம் பெற

அளவைக் கடந்தான்: அகிலம் கடந்தான்:
உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்:
வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்
உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!

பொழிப்புரை:- விநாயகன் பிரமாண அளவைகளுக்கு அப்பாற்பட்டவன்: இவ்வுலகைக் கடந்து நின்றவன்: முப்பத்தாறு தத்துவங்களின் உச்சியில் நின்று கடந்து நிற்பவன். அத்தகையவன் என் மனமாகிய இருப்பிடத்தை அறிந்து நான் இன்புறும்படி வரவேண்டும்.

36. படித்தோர் துன்பம் நீங்க

கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்
தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும்
வித்தர் களின்தீ வினையை விலக்கும்
அத்தித் தலையன் அருட்பார் வையதே

பொழிப்புரை:- கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில், இனிமையான செந்தமிழால் பாமாலை புனையும் கவிஞர்களின் தீவினைகளை எல்லாம் யானை முகத்தவன் அருட்பார்வை நீக்கிவிடும்.

37. நல்ல கவி பாட

ஆரா அமுதம் எனஆ சுகவி
சீராப் புகலும் திறமே அருள்வாய்!
தீராக் கலைகள் திகழ்வா ரிதியே!
வாராய்! வளமே வளர்வா ரணனே!

பொழிப்புரை:- வளமெல்லாம் அளிக்கும் யானை வடிவானவனே! முடிவில்லாத கலைகளால் நிறைந்த கடலே! தெவிட்டாத அமுதம் போன்று ஆசு கவிகளை உன் புகழுக்காக நான் பாடும் ஆற்றலை அருள்வாய்!.

38. விநாயகனைக் கண்டு மகிழ

வேதா கமமே மிகவும் புகழும்
பாதாம் புயனே! பணிசெய் அடியேற்(கு)
ஆதா ர!நின(து) அருட்காட் சிதர
வாதா எழில் ‘ஓ’ வடிவா னவனே!

பொழிப்புரை:- வேதங்களும், ஆகமங்களும் புகழும் திருவடிகளை உடையவனே! தொண்டு செய்பவர்களுக்கு ஆதாரமானவனே! அழகான ஓங்கார வடிவானவனே! உனது அருட்காட்சியை எனக்காக வந்து தருவாயாக!

39. விநாயகனின் அருளைப் பெற

உம்பர் புகழும் உறுதிப் பொருளே!
தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:
நம்பும் எனைநீ நழுவ விடாமல்
அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!

பொழிப்புரை:- தேவர்களெல்லாம் புகழ்ந்து பேசும் உறுதிப் பொருளே! யானை வடிவானவனே! உன்னைத் தொழுதேன். உன்னையே நம்பும் என்னைக் கைவிட்டு விடாமல் உன் அழகிய பொற்கரத்தால் ஆண்டு கொண்டு அருளுவாய்!.

40. குறை தீர

கவிஞன் புகலும் கவின்ஆர் தமிழ்உன்
செவிஏ றியூம்நீ திருகல் சரியோ?
புவிதான் புகழும் புழைக்கைய! கரம்
குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே!

பொழிப்புரை:- கவிஞர்களால் புகழ்ந்து பேசப்படும் அழகிய தமிழ்ப் பாக்கள் உன் செவிகளில் விழுந்தும் நீ அருளாமல் இருப்பது சரியாகுமோ? உலகத்தார் புகழும் தும்பிக்கையை உடையவனே! என் இரண்டு கைகளையும் குவித்தேன்: அதனால் மகிழ்ந்தேன்: என் குறைகளைத் தீர்த்தருளுவாயாக!.

41. அருள் மழையில் நனைய

மங்கை வலபை மணவா ளன்அருள்
பொங்கும் புனல்போல் பொழிந்தே புவனம்
எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!
துங்கக் குணத்தீர்! புசிமின் தொழுதே!

பொழிப்புரை:– வல்லபையின் கணவனாகிய விநாயகனின் அருள் பொங்கி வெள்ளம் போல் இவ்வுலகமெல்லாம் நிறைந்து காணப்படுகின்றது. விநாயகனின் குணங்களைப் பாடுபவர்களே! அவன் கருணை வெள்ளத்தை வழிபட்டு அனுபவியுங்கள்.

42. ஆணவம் அகல

மூல மலவா தனைதீர் முதல்வா!
சீல செழும்செம் சடையன் சிவனார்
பால! உயர்தற் பரனே! அருள்தா!
கோலம் மிளிரும் குணமார் பொருளே!

பொழிப்புரை: மூல மலமாகிய ஆணவ மலத்தைத் தீர்க்கும் முதல்வனே! அற வடிவான சிவபெருமானுடைய மைந்தனே! உயர்ந்த பரம் பொருளே! அழகொளி வீசும் குணங்களால் நிறைந்த பொருளே! அருள் தருவாயாக!.

43. பக்குவம் பெற

சித்தி தரும்சத் திநிபா தமதே
எத்தி னமதில் எனைவந்(து) உறுமோ?
அத்தி முகவா! அருமைத் தலைவா!
சத்தி தனையா! தமியற்கு உரையே!

பொழிப்புரை:- யானை முகத்தவனே! பெருமை மிக்க தலைவா! பராசக்தியின் மைந்தனே! பக்குவ ஆன்மாக்களிடம் திருவருள் பற்றுவதாகிய தன்மை எந்த நேரத்தில் என்னிடம் வந்து சேருமோ? எனக்கு சக்திபாதம் வாய்க்கும் நாளை உரைப்பாயாக.

44. துயரம் நீங்க

முதல்வா படவே முடியா(து) இனிதோ
இதமே அருளா(து) இருத்தல் எனை? பொற்
பதமே உடையாய்! பணிந்தேன்! பரையின்
புதல்வா அருளாய்! புரைதீர்ப் பவனே!

பொழிப்புரை:- பொற்பாதங்களை உடையவனே! பராசக்தியின் மைந்தனே! அருள்வாய்! குற்றங்களைத் தீர்ப்பவனே! தலைவா! என்னால் இனி துன்பப்பட இயலாது. என்ன காரணத்தினால் எனக்கு இன்னமும் அருள்புரியாமல் இருக்கிறாய்?.

45. பேரருள் பெற

சீலன் துதிக்கைச் சிரனை அனவே
ஞாலத் தினிலே நலம்ஈ வர்எவர்?
கோலச் சிகிவா கனனாம் குகனும்
சாலப் புகழும் தனிமன் அவனே!

பொழிப்புரை:- யானை முகத்தனைப்போல் உலகத்தில் இனி நன்மைகளை அருளுபவர் யார் உள்ளார்கள்? மயில் வாகனனாகிய முருகனாலும் புகழப் பெற்ற மிக ஒப்பற்ற தலைவன் விநாயகனே ஆவான்.

46. கவலைகள் ஒழிய

திண்தோள் சதுரும் திகழ்ஐங் கரமும்,
வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்
பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்
கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!

பொழிப்புரை:- திண்மையான நான்கு தோள்களையும், ஐந்து கரங்களையும், இரண்டு பக்கங்களிலும் சித்தி புத்தியாகிய தேவிமார் இருவரையும் நாயகனாகப் பெற்ற விநாயகனுடைய அழகிய கோலத்தைக் கண்டேன்: மகிழ்ந்தேன்: கவலைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விட்டன.

47. ஞானம் பெற

மோன நிலையில் முழுசித் திபெறும்
ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்!
தீனன் எனைஆள் திருமன் கருணைத்
தேனம் எனவே திகழ்கின் றவனே!

பொழிப்புரை:- அருள் நலம் மிக்க பெரியவனே! அருளாகிய கடல் போன்று திகழ்பவனே! நான் மௌனத்தில் மூழ்கி முழுமையான பரஞானம் பெற அருள்வாய்! அறிவிலியாகிய என்னை ஆள்வாயாக!

48. பிறவி அச்சம் நீங்க

அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்
மெச்சும் படியாய் மிளிர்ஐங் கர! நின்
பச்சைத் தளிராம் பதமே பலமாய்
இச்சை யுடனே பிடித்தேன் இதமே!

பொழிப்புரை: சிவன் முதலானவர்கள் புகழும் ஐந்து கரத்தை உடையவனே! உன்னுடைய தளிர் போன்ற திருவடிகளை விருப்பத்துடன் பிடித்துக் கொண்டேன். அதனால் பிறவி அச்சத்தை விட்டேன்.

49. சகல சித்திகளும் பெற

பக்தி நெறியில் பலமாய் உறைவார்
அத்தி முகனின் அடியைப் பணிவார்;
முத்தி பெறுவார்; முதன்மை உறுவார்;
சித்தி அடைவார் திடமே! திடமே!

பொழிப்புரை:- பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் யானை முக விநாயகனின் திருவடிகளில் பணிவார்கள். அதனால் முக்தியைப் பெறுவார்கள். எண் வகைச் சித்திகளையும் பெறுவார்கள். இது உறுதி.

50. புகழைப் பெறுவதற்கு

தாதா சரணம்; சரணம் தளிர்த்தாள்
நீதா சரணம் சரணம்; நிகர்இல்
வேதா தரனே சரணம்; மிளர்ஐம்
பூதா சரணம்! புகழ்நாற் புயனே!

பொழிப்புரை:- தலைவனே! வேதங்களின் பொருளாக விளங்குபவனே! ஐம்பூதங்களானவனே! நான்கு தோள்களை உடையவனே! விநாயகனே! உனது தளிர் போன்ற பாதங்களை நான் சரணடைவதற்கு தந்தருள்வாயாக.

51. உலகம் வாழ

ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்
வாழி! திருசத் திகளும் அணியாம்
வாழி! கவினார் வாச மலர்த்தாள்
வாழி! அடியார் வளம்வா ழியவே!

பொழிப்புரை: உலகத்திற்கு முதல்வனான யானை முகன் வாழ்க! சித்தி, புத்தி தேவிகள் வாழ்க! அழகு நிறை அவனுடைய மலர்ப் பாதங்கள் வாழ்க! அடியார்கள் செல்வங்கள் பல பெற்று வாழ்க!.

 

Also, read



2 thoughts on "விநாயகர் அனுபூதி – Vinayagar Anuboothi"

  1. Dear sirs
    This is the first time I heard of vinayagar anuboothi. I would like to know the saint? Who penned this. Google doesn’t give. Just stumbled on this by chance on a sankatahara chathurthi day.
    Thank you so much
    Mana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 13, 2024
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள்
  • August 13, 2024
அவனிதனிலே பிறந்து - திருப்புகழ் 110
  • July 14, 2024
ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்