- August 20, 2024
உள்ளடக்கம்
எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.
2024 Vinayagar Chaturthi Date: 7th September 2024
“பிள்ளையார்சுழி” போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ஆதி மூல கணபதி என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள். மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் என்பதாகும். கணப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஆனைமுகப்பெருமான்.
விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். அதற்கு உகந்த மாதமாக ஆவணி மாதம் விளங்குகிறது. மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று அழைக்கிறோம். அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல் மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி பெருமையுடன் நமக்களிப்பார்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.
தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.
விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகிய வற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, “இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால், நம் தேவைகள் நிறைவேறும். தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும் வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.
ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில் வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன. விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர் பெற்றவர் விநாயகர். முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.
Also, Read: