- August 20, 2024
உள்ளடக்கம்
🛕 அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை,
🛕 பரநிலை – வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன். பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர் வெளியில் அமைந்துள்ளது. இங்கே மஹாவிஷ்ணு பரவாசுதேவன் என்ற பெயரில் விளங்குகிறார். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷனை இருக்கையாகக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியருடனும், நித்யசூரிகள் என்று அழைக்கப்ப்படும் அமரநிலை அடைந்தவர்களுடனும் விளங்குகிறார். நித்யசூரிகளில் அஷ்ட திக் பாலர்கள் (எண்திசைக்காவலர்கள்), 8 துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்கள்), விஷ்வக்சேனர் முதலியோர் அடங்குவர். மண்ணுலக வாழ்க்கை முடிந்து வைகுண்டம் அடையும் பேறு பெற்றவர்கள் வந்து சேரும் இடம் இதுதான்.
🛕 வியூஹ நிலை – தேவர்களின் குறைகேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள். இங்கே பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு,தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.
🛕 விபவ நிலை – மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள் (தசாவதாரம்). விபவம் என்பது பகவானின் அவதாரங்களைக் குறிக்கும். முதல் இரண்டு நிலைகள் நம்மால் அணுக முடியாதவை. நாம் அணுக முடியாத நிலையில் பகவான் இருப்பதில் நமக்கும் பயனில்லை, அவருக்கும் பயனில்லை! ஆகவேதான் நம்முடன் நெருக்கமாக இருக்கும் பொருட்டு இவ்வுலகில் அவதரித்தார் விஷ்ணு. “அவதாரம்” என்ற சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு “இறங்கி வருதல்” என்று பொருள். நம்மால் அணுக முடியாத நிலையில் இருக்கும் கடவுள் நம் மீதுள்ள கருணையால் கீழே இறங்கி இவ்வுலகில் அவதரிக்கிறார்.
🛕 அந்தர்யாமி நிலை – அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன். நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை. ஆம். கடவுளைத் தேடி நாம் வெளியே எங்கும் போக வேண்டியத்டில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் – அந்தராத்மாவாக. வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகி விடும்.
🛕 அர்ச்சை நிலை – கோவில்களிலும் நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன். இவ்வுலகில் பல திருத்தலங்களில் விக்கிரக வடிவில் இருந்து பகவான் நமக்கு அருள் புரிவதைத்தான் அர்ச்சம் என்ற நிலை குறிக்கிறது. எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலை அர்ச்சம். அவதார காலங்களில் வாழும் வாய்ப்பு இல்லாத நமக்கு பகவானை தரிசித்து மகிழும் வாய்ப்பை அர்ச்சம் வழங்குவதால், பகவானின் இந்நிலை அர்ச்சாவதாரம் என்று வழங்கப் படுகிறது. மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும் அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
🛕 இந்த ஐந்து நிலைகளுள் அர்ச்சை என்ற நிலை கடைசியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும் அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எல்லையில்லாத கருணை நிறைந்தவராகவும், எளிமையின் எல்லை நிலமாகவும் அர்ச்சை நிலையில் இருக்கும் இறைவனை நாத்திகர், ஆத்திகர், நல்லவர், தீயவர், மனிதர், மிருகம் என அனைவரும் காணலாம், வணங்கலாம், வணங்கி அருள்பெறலாம்.
🛕 1. ஸ்வயம் வியக்தம் – இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும்.
🛕 2. தைவிகம் – பிரம்மா, இந்திரன், சூரியன் போன்ற தேவர்கள் இறைவனை ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்தால், அதை தைவிகப் பிரதிஷ்டை என்று சொல்வார்கள். தைவிகம் என்றால் தேவர்களால் செய்யப்பட்டது என்று பொருள். உதாரணமாக, காஞ்சீபுரத்தில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அத்தி வரதர், குடந்தையில் சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உள்ளிட்டோர் தைவிகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.
🛕 3. ஆர்ஷம் – முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களை ஆர்ஷம் என்று சொல்கிறோம். மார்க்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒப்பிலியப்பன் கோவில், கோபில கோப்பிரளய ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் உள்ளிட்டவை ஆர்ஷம் என்ற பிரிவின் கீழ் வரும்.
🛕 4. மானுஷம் – அரசர்கள், பக்தர்கள் உள்ளிட்ட மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்கள் மானுஷம் என்றழைக்கப்படும். கீழத் திருப்பதியில் ராமாநுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், பஞ்ச பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கேரளாவில் உள்ள திருவித்துவக்கோடு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் அடங்கும். இந்த நான்கு விதமான திருத்தலங்களிலும் இறைவன் முழு சக்தியுடனும் முழு சாந்நித்தியத்துடனும் திகழ்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனினும், இறைவன் தானே விக்கிரக வடிவில் ஆவிர்ப்பவித்த இடங்கள் என்பதால், இவற்றுள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் தனிச்சிறப்பு பெற்றவையாகக் கொண்டாடப் படுகின்றன.
🛕 “ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம் ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்” என்ற புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய,
🛕 என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிப்பதாகவும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.
Also, read