×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)


Vishnu Bhagavata Jayadeva History in Tamil

ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ ஜெயதேவர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்:

ஜயதேவர்

ஸ்ரீ மகாகவி ஜயதேவரது சரிதம் அற்புதங்கள் நிறைந்தது.

பில்வகாம் என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் ஈடுபட்ட மனத்தை உடையவருமான, நாராயண சாஸ்திரியார் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியின் திருநாமம் கமலாபாய். முற்றும் துறந்த முனிவரைப்போல வாழ்ந்த இப்பெரியாருக்குத் தமக்குப் பின் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே, என்ற எண்ணம் எழ வில்லை. இறைவனது வழிபாட்டிலும் பஜனையிலுமே இவர் மனம் நிறைந்திருந்தது.

ஒரு நாள் இரவு நாராயண சாஸ்திரியார் தம் ஆராதனைகளை முடித்து இறைவனது நாம சங்கீர்த்தனத்திலே ஈடுபட்டு, நாமாவளிகளைப் பாடிய வண்ணம் கண் அயர்ந்து விட்டார்.

அழகிய ஒளி மயமானதோர் உலகத்திலே ஸ்ரீமந்நாராயணர் முகத்திலே புன்னகை தவழ சங்கு சக்ர கதாதர ராய் வந்து நின்றார். “ஏ பக்தா உங்கள் இருவரது தவமும் பலிக்கும் சுபதினம் வந்து விட்டது. உன் இன்னுயிர் துணைவி கோரிய வரம் அளித்தேன். உங்களது குறையும் முன்னோர்களது குறையும் நீங்கும்”, என்ற செய்தி இன்பத்தேனாய் அவர் செவிகளிலே நிறைந்தது. திடுக்கிட்டு கண் விழித்தார் அவர். தாம் அன்று கண்ட அந்த அற்புதக் கனவின் பயனாக அவர் உள்ளம் பொங்கிப் பூரித்தது.

கனவு பலித்தது! இறைவனின் அருள்மொழி பொய்ப்பதுண்டா? ஸ்ரீ வேதவியாசர் மீண்டும் பிறந்து இறைவரது திருநாமத்தை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உலகெலாம் பரவ வழி செய்ய வேண்டும் என்று ஒரு முறை நினைத்தாராம். அதன் பயனாகவே ஸ்ரீ வியாசரின் அம்சமாகவே தோன்றினார் ஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமி. முப்பிறவிகள் எடுத்து உன் திருவிளையாடல்களைப் பாட வேண்டும் என்று கேட்டாராம் ஸ்ரீ கண்ண பெருமானை. அதன்படி இவரே மீண்டும் தீர்த்தநாராயணர் என்ற யதிராஜாவாகவும் க்ஷேத்ரஞர் என்ற மகாவித்வானாகவும் தோன்றினார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லும். தீர்த்தநாராயணரின் தர்க்கங்களை ஷேத்ராஞரின் பதங்களும் இன்றும் நம் இதயத்தை வசீகரித்து பக்தி மழையைப் பொழிகின்றன.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க, குழந்தை ஜெயதேவனது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும், சின்னங்சிறு இசையின்பம் பொங்கியது. தந்தை தாயாருடன் அமர்ந்து அவன் பாடியும் ஆடியும் வழிபடும் காட்சிகள் கண்டு, அந்தத் திந்துபில்வம் முழுவதும் திகைத்தது, அனந்தக்கடலுள் மூழ்கியது.

உரிய வயது வந்ததும், மணமுடிக்க வேண்டுமென்ற எண்ணம், தாயின் நெஞ்சத்தே எழுந்தது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் வல்ல தன் மகனுக்கேற்ற மணமகள் எங்கே பிறந்திருக்கிறாளோ என்ற ஏக்கம், கமலாபாயின் நெஞ்சிலே குடிகொண்டது. உறவினருள் ஒருவரது மகளாகிய பதுமாவதி என்ற கட்டழகி, தெய்வ பக்தியிலும் குணத்திலும் சிறந்தவளாய்த் தோன்றவே, அவளையே மணம் பேசி முடித்து மிகமிகச் சிறப்பாக விவாகத்தை செய்வித்தனர்.

மகாகவி ஜயதேவரின் இல்லம், கோயிலாகவே விளங்கியது. விடியற்காலையிலே தன் கடன்களை முடித்து பக்தர்களை வீட்டில் அழைத்து உபசரிப்பதிலும் பூஜை புனஸ்காரம், அண்டை அயலார்க்கு உதவுதல், ஓய்வு நேரங்களில் இறைவனது திருவடிக்கு பாமாலைகளை இசைத்தல், என்று இப்படி ஒரே விதமாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது அவரது வாழ்கை.

ஜகந்நாத ஷேத்திரத்தின் அரசன், இசையிலும் கவிதைகள் புனைவதிலும் வல்லவன். அவனும் வடமொழியிலே பற்பல அருமையான இசை மாலைகளைத் தொடுத்துத் தொடுத்து ஜகநாதரின் திருத்தாமரைகளுக்குச் சூட்டியிருந்தான் என்றாலும் ஜயதேவரின் பாடல்களே கோவில் பிரகாரங்களெல்லாம் ஓலித்தன. அரசனும் கவிஞரை கவிஞன் உகக்கும் முறையிலே அவைகளைக் கேட்டான். அவன் உள்ளம் ஆனந்தமிகுதியினால் மலர்ந்தது என்றாலும் மக்கள் தன்னுடைய கவிதைகளை விட ஜயதேவர் கவிதைகளையே போற்றிப் புகழ்ந்து பாடுவதும் அவன் மனதுள் ஒரு சிறு பொறாமைத் தீயைக் கிளப்பியது அவன் தொண்டர் குலம் ஒரே குலம் என்பதை மறந்தான்.

அங்கே கூடியுள்ளவர்களை நோக்கி என் பாடல்களும் ஜெகநாதப்பெருமானைப் பற்றியது தானே அவற்றை விடுத்து நீங்கள் ஜயதேவர் பாடல்களையே படுவானேன் என்று கேட்டான். அதற்கு அவர்கள் சரியான மறுமொழி கூறாமல் உங்கள் இருவரது பாடல்களையும் பகவானுடைய சந்நிதியிலே வைப்போம் எது உயர்வு என்பதை அவரே முடிவு செய்யட்டும் என்றார்கள். அந்தணரை தெய்வமெனும் கருதும் அம்மன்னன் மேற்கொண்டு பேசாமல் இதற்கு ஒப்புக் கொண்டான், சுவடிகள் இரண்டும் இறைவரது சந்நிதானத்திலே வைக்கப்பட்டன. கர்பகிரஹத்தின் கதவுகளை மூடி பூட்டி தன் இலச்சினை பொறித்து அரசன் அரண்மனை சென்றான்.

இரவு முழுவதும் உறக்கம் கொள்ளாதவனாய் ஜகந்நாத பெருமானை நோக்கி நானும் உனது அடியவனல்லவா என்று வேண்டியவனாய் இரவைக் கழித்து காலை முறைப்படி ஆலயத்தை அடைந்து பூட்டை திறந்தான். அங்கே ஜயதேவரின் கவிதைகளின் மேலே உவந்தோம் என்று எழுதியிருந்தது அரசன் சுவடிகளோ கலைந்து கிடந்தன.

அரசனது மனம் துன்பமிகுதியினால் துடிதுடித்தது. இறைவரே உமது திருநாமத்தைத் தான் நானும் இசையிலே அமைத்து தொடுத்தேன் இருந்தும் ஏன் இந்த பாரபக்ஷம் நான் உன் அடியான் அல்லவா நான் செய்யும் திருப்பணிகளிலே ஏதும் குறைவுண்டோ? என்று மனம் உருகி வேண்டினான். இறைவரது அருள் கிட்டவில்லையே என்று அவன் மனம் ஏங்கி துடித்தது தவித்தது.

இரவு அரசன் நித்தரையிலே ஆழ்ந்திருந்தான். அவன் கண்களின் முன்பு அழகிய ஒளி வட்டம் ஒன்று தோன்றியது மெய்வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ மகரஞ்சேர் குழை இருபாடு ஊசல் ஆட மணி முடியிலே மயிற்பீலி துலங்க புன்னைகையினால் குழிந்த கன்னங்களுடன் கையிலே புல்லாங்குழலுடன் தோன்றினான் கண்ணபிரான். அவன் மலர் வாயினின்றும் மெல்லிய குரலில் அரசே நீயும் என் மெய்யன்பன் தான் என்றாலும் நாம் அரசன் என்ற செருக்கை அங்கே கண்டேன் அதுதான் உன்னிடமுள்ள பெருங்குறை ஜயதேவனது ஒலி மாலைகளுக்கு நிகராக வேறு எதுவுமே நிலை நிற்க இயலாது என்றாலும் அதைக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நினைவு உனக்குள் எழுவது தெரிகிறது. ஆகவே உன் கவிமாலைகளின் முதல் பதின்மூன்று பாடல்களை நான் ஏற்பேன் உங்களது பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்தேன் என்று கூறி மறைந்தான்.

அரசன் கண்களிலே ஆனந்த பாஷ்யம்; நானே தவமுடையோன் என் நெஞ்சே நன்னெஞ்சம் என்று நினைத்தவனாய், ஆண்டவனே ஏ ஜகன்னாத ப்ரபோ என் புன்கவியையும் ஏற்ற உன் அருளினை எவ்வாறு புகழ்வேன் என்று நெஞ்சுருகி பாடி புகழ்ந்து மெய்மறந்தான். ஜகந்நாத ஜகந்நாத ஜகந்நாத பாஹிமாம் என்ற பேரொளி அந்த கோபுரத்தையும் மீறி வான மண்டல முழுவதும் எதிரொலித்தது ஆனந்த மிகுதியினால் அங்கு கூடியிருந்த தொண்டர் குழாம் மீண்டும் மீண்டும் கோஷித்தது.

அரசனும் ஆண்டவனும் ஒருங்கே புகழ்ந்த அந்த பாடல்களின் பெருமை மெள்ள மெள்ள பதுமாவதியின் தந்தையான தேவசர்மாவிற்கும் தெரிந்தது மகளையும் மருமகனையும் தெய்வத் தம்பதிகளாக கருதி காண வேண்டுமென்று வந்து சேர்ந்தார் அவர் ஜயதேவராது கீதகோவிந்தமும் அரசனது இசைமாலையும் ஒன்றாக இணைத்து பூரி என்ற ஜெகநாத சேஷ்ரத்திலே படப்படுவதை தம் மகளுக்கு அறிவித்தார்.

ஜெகநாதத்தையடுத்துள்ள ஒரு சிறிய கிராமம். அதிலே பகவன்தாஸ் என்பவர் ஒரு வியாபாரி அவர் கல்விகேள்விகளிலே சிறந்த பேரறிவாளர் ஜயதேவரது பெருமையைக் கேட்கக் கேட்க அவரிடம் உபதேசம் பெற விரும்பியது அவர் மனம் அவரைத் தனது வீட்டிற்கே அழைத்து பாத பூசனைகள் செய்து போற்றி வழிபட வேண்டும் அவரது அறிவுரைகளால் தமது வாழ்வு வளம் பெற வேண்டும் என்று நெடுநாளாய் நினைத்திருந்தார்.

தற்செயலாக ஜயதேவர் முன்கூறிய நதிக்கரையிலே யோக சமாதியிலே ஆழ்ந்திருந்த சமயம் பகவன்தாஸ் அங்கே வர நேரிட்டது எதிர்பாராத இந்த சந்திப்பினால் மெய்மறந்து அங்கம் பூரிக்க அங்கேயே நின்று விட்டார் அவர். ஜயதேவர் நிஷ்டை கலையும் வரை அங்கேயே காத்திருந்தார் நிஷ்டை கலைந்தது தம்மோடு வந்து தமது குடிலை புனிதமாக்கவேண்டும் என்று வேண்டினார் அவர் இறைவன் புகழைப் பாடும் பணியே பணியாய்க் கொண்ட ஜயதேவர் அவருடன் செல்லச் சித்தமானார்.

தமது தேரிலேயே அவரையும் ஏற்றிக் கொண்டு தமது சிற்றூர் சென்றார் பகவன்தாஸ் ஜயதேவர் அன்று முழுவதும் அங்கே தங்கி அவருக்கு மந்திரோபதேசம் செய்து இறைவனை அடையும் வழிகளையும் உபதேசித்தார் பிறகு பகவன்தாஸ் இறைவனது திருப்பணிக்கென்று ஆயிரம் வராகங்களையும் பதுமவதி தேவிக்கென்று சில உயர்ந்த ஆபரணங்களையும் கொடுத்துத் தமது தேரிலேயே பில்காம் சென்று விடுத்து வர உத்தரவிட்டார்.

பஞ்சமி இரவு பின் நிலா தேர் அடர்ந்த ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது தீந்து பில்வம் கிராமத்திற்கு இன்னும் அரைக்காத தூரம் தானிருக்கும் வழியிலே படபடவென்று ஓசைகேட்டது தேர்ப்பாகன் நடுநடுங்கிப்போனான் குதிரைகளும் பயத்தினால் மருளத் தொடங்கின தேரைச் சுற்றி நாற்புறமும் சூழ்ந்து கொண்டனர் கள்வர் பாகன் இறங்கி ஓட்டம் பிடித்தான் இவற்றுள் ஓன்றையும் பொருட்படுத்தாதவராய் எதையெனும் எடுத்துப்போகட்டும் நமக்கென்ன என்று ஜயதேவரும் இறங்கி ஒரு புறமாய் நடக்கலானார்.

கொள்ளையிடப்புகுந்தவர்களிலே ஒருவன் அதோ போகிறானே அவன் பயந்து பொருள்களை விட்டுவிட்டுப் போகவில்லை ஊருக்குள்ளே போய் ஆட்களை அழைத்துவரத்தான் போகிறான் ஆகவே, அவனை முடித்து விட்டுத்தான் நாம் பொருட்களை பங்கு போட வேண்டும் என்றான். உடனே கூட்டம் ஜயதேவரை நோக்கிப் பாய்ந்தது.

கொலைகாரப்பாதகர்கள் அவரது வேண்டுகோளையும் காதில் ஏற்காமல் அவரது கால்களையும் கைகளையும் கத்தியினால் வெட்டி ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு வெற்றி முழக்கத்தோடு தேரை ஓட்டிச் சென்றனர். அந்த சமயத்திலும் அவரது வாய் இறைவனது திருநாமத்தை ஓதிக் கொண்டே இருந்தது ஆண்டவனே இதுவும் உன் சோதனை தானோ முடமாகி மீண்டும் வாழவேண்டுமென்றோ என்னை கொள்ளாமல் விட்டிருக்கிறீர் என்றெல்லாம் ஓடின அவர் சிந்தனைகள் வெட்டுண்ட காயங்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது வேதனையும் நோவும் தாளாமல் உடல் துடிதுடித்தது ஆனால் மனமும் வாக்கும் இவற்றை ஒன்றையும் பொருட்படுத்தாமல் நாராயணா நாராயணா என்றும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றும் முனகிக்கொண்டிருந்தன ஆயிற்று ஒரு சாமமும் ஆயிற்று ரத்தப்பெறுகினாலே உடலும் உள்ளமும் சோர்ந்து நினைவும் தப்பிப் போகின்ற நிலை ஏற்பட்டது இனி பிழைக்க போவதில்லை என்ற எண்ணம் வரவே தனது கீதகோவிந்தத்தின் இனிய காட்சிகள் அவர் முன்னே விரிந்தன.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவன் அந்த நீர் நிலையிலே மூழ்கி மரிக்கவிருக்கும் அவருக்கு பரமபதத்திலே திருமாமணி மண்டபத்திலே வீற்றிருக்கும் திருக்கோலமாய்க் காட்சித் தருகிறார் ஜயதேவருக்கு ஐம்புலன்களும் மெல்ல மெல்ல ஒடுங்குவது போல தோன்றியது. ஆனால் அவரது வாய் மட்டும்,

சந்தன சர்ச்சித நீல களேபர பீத வசனவன மாலி

என்ற வரிகளை மீண்டும் மீண்டும் பாடுகிறது. அரையிற் பீதக ஆடையணிந்து அழகிய சந்தன பூச்சுடன் கூடிய நீல மணிவண்ணன் யமுனைக் கரையிலே குழலூதும் ஒளி அவர் செவிகளிலே தேவ கானமாய் ஒலிக்கிறது அந்த ஆனந்த கட்சியிலே அவரது நினைவு தடுமாறுகிறது குழப்பமான நினைவின் பின்னணியிலே அகமனத்திலே கீத கோவிந்த நாடகம் நடைப்பெற்றுக்கொண்டே இருக்கின்றது அதிலேயே ஈடுபட்டு நினைவிழந்து கிடந்தார் ஜயதேவ கவி.

ஜெகநாத ஷேத்திரத்தை அடுத்துள்ள சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனது ஆட்சிக்கு உட்பட்டவை அன்று வேட்டையாடுவதற்குரிய நாள் கிரவுஞ்ச மன்னன் சிலர் மட்டுமே புடைசூழ அரண்யத்துள் புகுந்தான் எதிர்பாராத வகையிலே எங்கேனும் நீர்நிலை உண்டோ என்று தேடிவந்த அவன் ஏதோ ஓசை கேட்கிறதே என்று நினைத்து அந்த பாழுங்கிணற்றருகே வந்தான் உள்ளே தவ ஒளி வீசும் மஹாதேஜஸ்வியாய் ஒருவர் வீழ்ந்து கிடப்பது தெரிந்தது.

அவன் சிறந்த சிவநேச செல்வன் நீலகண்டா மகாதேவா யாரோ மகான் தான் தவறி வீழ்ந்திருக்க வேண்டும் சிவபெருமானே இவனை ஆண்டருளும் என்று இறைஞ்சியவனாய் இன்னும் சற்று அருகே நெருங்கித் தானே இறங்கவும் முயற்சி செய்தான் இதற்குள் வீரர் இருவர் கிணற்றில் குதித்து ஜயதேவரை மெல்லப் பிடித்து ஏற்றிக் கரை சேர்த்தனர்.

கரையை அடைந்த உடனேதான் அரசனுக்கு அவர் கை கால்கள் வெட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது அவன் அப்படியே அயர்ந்து போனான் நல்ல அரசாட்சியிலே இப்படிப்பட்ட கொடுமைகளும் நடைபெறுமோ சிவ சிவ சிவ இதென்ன காலம் இத்தகைய மகானுக்கு இவ்வளவு பெரிய கொடுமையை இழைத்தவர் யார் என்று வாய்விட்டு கதறி விட்டான் கிரவுஞ்ச மன்னன்.

அப்பொழுதும் அவரது சமாதி நிலை கலையவில்லை சில வினாடிகளுக்கு பிறகு கண் விழித்த அவர் ஒருவரையும் குற்றம் சாட்டுவதிலே பயனில்லை உழ்வினையும் எம்பெருமானது திருவுள்ளமும் இருந்தவாறு இது இறைவனது பேரருளின் முன்னே இந்த உடலைப் பொறுத்த சிறு துன்பங்களான இவை என்ன செய்யும் அரசே கோபம் வேண்டா என் வினை இது என்று கோபத்தால் கொதித்தெழுந்த மன்னனுக்கு அமைதி கூறினார் ஜயதேவர்.

அடடா இவர் யாரோ தெரியவில்லை முற்றும் துறந்த மெய் ஞானியார் அல்லாவிடில் கால்களையும் கைகளையும் இழந்த இந்த நிலையிலே என்ன சாந்தம் என்ன அமைதி பெரியார்கள் இப்படித் தான் இலைமறை காய்களாய் வாழ்கின்றனர் என்றென்னி அவரருகிலே பணிந்தெழுந்தான் அரசன் பிறகு மெல்ல மெல்ல பல்லக்கிலே ஏற்றி தனது நகருக்கு அழைத்து சென்று தனது குருவாக்கிக்கொண்டான். அரண்மனை மருத்துவர்கள் உடலிலிருந்த காயத்தை ஆற்றினார்கள் ஏற்கனவே அவரது புகழை கேட்டிருந்த அவன் இதுவும் சிவபெருமான் திருவருள் தான் என்று மனதிட்கொண்டு அவருக்கு தக்க பணிவிடைகள் செய்யலானான் முக்திக்கு வழி இவரது பணிவிடை தான் என்று நினைத்து துறவி போல் வாழ்ந்து வந்தான்.

ஆனால் ஜயதேவர் அரசே இது உன் போன்ற அரசருக்கு ஏற்றதன்று உன் கடைமைகளைக் குறைவின்றிச் செய் குடிகள் நல்வாழ்வு வாழ வழி வகுப்பதே கொற்றவன் கடமை ஆகவே அரசியலை முதலில் கவனி பிறகு ஆத்தும விசாரணை செய்யலாம் என்று உபதேசித்து அரசாங்கதத்தை கவனிக்கும்படி தூண்டி அதற்குரிய வழிகளையும் போதிக்கத்தொடங்கினர் கீதையினால் மனந்தெளிந்த அர்ஜுனனைப் போல கிரவுஞ்ச மன்னன் ஜயதேவரது நன்மொழிகளினால் மனங்குளிர்ந்து மீண்டும் அரசுரிமையை ஏற்று நடத்தலானான் பெரியோர்களது அருளாட்சியிலே குறைகளும் உண்டோ.

அரசனது மனம் கவலையிலே ஆழ்ந்திருந்தது ஏன் கடந்த சிலநாட்களாக ஜயதேவரிடம் அவரது குடும்ப நிலையைப்பற்றிக் கேட்க வேண்டும் அதை அவர் மனம் நோகாமல் எவ்வாறு கேட்பது என்ற சிந்தைதான் அன்று ஒருவாறு துணிந்து கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

ஜெயதேவரது முகத்தியிலே இளநகை அரும்பிற்று பதுமாவதியைப் பற்றிய செய்திகளைக் கூற அரசன் உடனே ஆட்களை அனுப்பி அவளைத் தகுந்த மரியாதையுடன் அழைத்து வர ஏற்பாடு செய்தான் பிறகு மிகவும் மிருதுவான குரலிலே நல்லோர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு ஏன் ஒருவிதமான தீமையும் வருவதில்லை உங்களுக்கு இப்பெருந்தீமையைச் செய்தவர்கள் ஏன் அப்போதே எரிந்து சாம்பலாகிவிடவில்லை என்றான்.

ஜயதேவரது இதழ்களுக்கிடையிலே இளமுறுவல் தோன்றிற்று அரசே ஓர் ஊரில் ஒரு குருவுக்கு ஒருவன் சீடன் அந்த குரு அவனைப் பல வகையாகச் சோதித்து பிறகு உபதேசம் செய்வது என்று ஒரு நாள் நிச்சயித்தார். அப்பொழுது அவனது வருங்காலத்தை ஞானதிருஷ்டியினால் பார்க்க அம்மாணவன் அன்று இன்னும் சிறிது நேரத்தில் மரணமடைந்துவிடுவானென்பது தெரிந்தது தனது அருமை மாணவன் அவ்வாறு மரிப்பதைக் குரு விரும்பவில்லை ஆகவே வனவீதியிலே செல்லக்கூடிய குளிகை ஒன்றை மாணவனுக்கு கொடுத்து தானும் ஒன்றை வாயில் அடக்கி வைத்து மாணவனுடன் விண்ணுலகம் சென்றார் படிப்படியாக ஒவ்வொரு உலகினையும் கடந்து பிரம்மலோகம் சென்று பிரம்மதேவரிடம் மாணவனுக்கு ஆயுளை வேண்டி வணங்கி நின்றார் அவரோ நான் அன்று எழுதியதை அழித்து எழுவதில்லை என்றார் சித்திகள் பல பெற்ற குரு அங்கிருந்து வைகுண்டமும் கைலாயமும் சென்றார் அவர்களும் கைவிரித்து விடவே பின்னர் யமலோகம் சென்றார் அப்போதே மாணவன் உயிரிழந்து விட்டான்.

குருவிற்கு கோபம் பொங்கி எழுந்தது அவரது பெருமூச்சினின்று எழுந்த கனல் யமலோகத்தையே எரிக்கத் தொடங்கி விட்டது அஞ்சி நடுங்கியவனை கரம் குவித்து ஓடி வந்தான் காலதேவன் பெரியீர் மாணவன் இரண்டதற்கும் காரணம் நீங்கள் தான் அசிரமத்திலிருந்தே நீடுழி வாழ வேண்டுமென்று உங்கள் திருவாக்கல் வாழ்த்தியிருந்தால் எல்லாம் வல்ல சித்தராகிய உங்கள் வாக்கு பலித்தே தீரும் அவனுக்கு யமபயமே இல்லை உங்களது அருள்வன்மையால் அவனுக்கு மும்மூர்த்திகளை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்தது யமபுரியின் வாயிலே மரணம் என்று அவனுக்கு விதித்திருந்தது நீங்களே அழைத்து வந்து விட்டிர்கள் போகட்டும் உங்கள் மாணவன் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இருந்தால் இப்பொழுதேனும் அவனை தீர்காயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் என்றான் யமதர்மராஜன்.

குருவும் கண்ணீர்மல்க நாத்தழுதழுக்கத் தமது மாணவனை ஆசீர்வதித்தார் மாணவன் விழுதெழுந்தான் இருவரும் மண்ணுலகிலுள்ள தமது குடிலை நோக்கி விரைந்தனர்.

அரசே இந்த கதையிலிருந்து விதி வலியது என்பது புலனாகவில்லையா இறைவன் திருஅருள் ஒன்று தான் விதியையும் மாற்றக்கூடியது ஊழிப்பெருவொளி யாவுள என்பது தான் பெரியோர் போதனை என் முன்வினைப்பயன் கைகளையும் கால்களையும் இழந்து வாழ வேண்டுமென்று வகுத்துவிட்டது. இறைவனது திருநாமத்தின் துணையினால் இதை துன்பமென்று கருதாத ஒரு மனநிலையை நான் எட்டி விட்டேன், ஆகவே வருகின்ற நன்மை தீமைக்கெல்லாம் தலை வணங்கி ஏற்றுக் கொள்வதே நமது கடமை. இடுக்கண் வருங்கால் நகுக என்பது தான் பெரியோர் கருத்து என்று சற்றே நிறுத்தினார் ஜயதேவர் மன்னனது மனம் தெளிந்தது.

ஊழிற்பெருவலி யாவுள என்ற சொல் கிரவுஞ்ச மன்னனது செவிகளுள் ஒலித்து கொண்டே இருந்தது இத்தகைய மெய் ஞானியாரைத் தனக்குக் குருவாக அளித்த சிவபெருமானை வாயார வாழ்த்தினான்.

கிரவுஞ்ச மன்னனது பரிவாரங்கள் பில்காம் சென்று தேவியை அழைத்து வந்தனர் ஜயதேவர் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கி மும்முறை வலம் வந்து வணங்கி நிலந்தோய பணிந்து எழுந்தாள் அவள் ஆனந்த மிகுதியினால் அவள் கண்கள் நீரைப் பொழிந்தன அவள் பணிந்து எழுந்து நின்ற போது தான் அவருக்கு கை கால்கள் இல்லாததைக் கண்டாள் ஐயோ என்று அலறினாள் அந்த சபா மண்டபம் முழுவதும் சிலை ஓடிற்று நெடுமரம் போல் தரையிலே விழுந்து விட்டாள் பதுமாவதி அவளைத் தூக்கி எடுக்க வேண்டுமென்ற ஆவல் அவர் நெஞ்சிலே பீரிட்டு எழுந்தது அவர் தமக்கு கரங்களிலை என்பதனையும் மறந்து பதுமாவதி என்று அழைத்து கொண்டே எழுந்திருக்க முயன்றார் அவர்.

மூர்ச்சையடையும் நிலையிலிருந்த பதுமாவதி மெல்ல மெல்ல எழுந்தாள் எத்தகைய மாபாவிகள் உங்களுக்கு இந்த கொடுமையைச் செய்தவர்கள் என்று குமுறினாள்.

ஜயதேவர் மிகவும் அமைதியான குரலில் பதுமாவதி இன்னல்கள் அலை அலையாய் வரும் என்பது உனக்கு தெரியாதா? இறைவன் நமக்கு அளித்திருக்கும் சோதனை இது அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம். பகவானையே நேரில் காணும் பேறு பெற்ற உனக்கு இது விளங்கவில்லையா நமது புராண புருஷர் பலர் பட்ட துன்பங்களின் முன் இது எம்மாத்திரம் இறைவனோ தொண்டர் உள்ளதொடுக்கம் அவன் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் பார்க்கிறான் நம் உள்ளத்திலிருந்து நம் துயர்களையெல்லாம் பார்க்கிறான் பங்கும் கொல்கிறான் பயக்ருத் பய நாசன பயத்தை உண்டாக்குகிறவனும் அவனே பயத்தை போக்குகிறவனும் அவனே எல்லாம் தெரிந்தும் ஏன் கலக்கம் ஹரிச்சந்திரன் பட்டபாடு யாருக்குதான் தெரியாது காட்டில் விலங்கரியும் கைகுழந்தையறியும் அது மட்டுமே புருருவ சக்ரவர்த்தியின் கதை நீ அறியாததா. இவர்களெல்லாருக்கும் மேல் நலமகராசன் பட்ட பாடு எத்தனை எண்ணத்தொலையாது ஏட்டில் அடங்காது கடைசியிலே அவன் தமிழ்நாட்டிலே திருநள்ளாறு என்ற திருத்தலத்திலே இறைவனை பூசித்து வழிபட்டபிறகல்லவா கலி நீங்கியது நளன் கெளுவிய நள்ளாறே என்று அடியார் அந்த தர்பாரண்ய ஷேத்திரத்தை வழிபடுகின்றனர் இவைகளை எல்லாம் அறிந்த நீ இப்பிடிப் பேதையாய் வருந்துவாயா என்று கூறித் தேற்றினார்.

மெல்ல மெல்ல அவள் மனம் தெளிந்தது கணவருக்குப் பணிவிடை செய்வதே இனி நம் கடமை. அவருடைய கவிதைகளை ஏட்டிலே எழுதுவதும் அடியார் திருக்கூட்டங்களுக்கு அன்னம் அளிப்பதும் தான் இறைவனுக்குகந்த செயல் என்று மணந்தேறினாள் அவர்கள் வரவினால் நாடு செழித்து வருவதை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தான் கிரவுஞ்ச மன்னன்.

  • கள்வர் பாதாளத்தில் அமிழ்ந்தது

ஜயதேவரைக் கிணற்றிலே தள்ளிய கயவர்கள் கிரவுஞ்ச மன்னனது நகரிலே நாள்தோறும் சாதுக்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கிகிறார்கள் என்பதைக் கேள்வியுற்றார்கள் கள்வர் தலைவன் ஒரு வேலையும் செய்யாமல் காவி உடுத்தி ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு போனால் அழைத்து ஆதரித்து போன் கொடுக்கிறார்களாம் எவ்வளவு சுலபமான வழி நாம் ஏன் நாள்தோறும் பயந்து இப்படித் திருடி பிழைக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவன் தன் தோழர்களையும் சாதுக்களாக மாற்றித் தானும் காவி உடுத்தி கிரவுஞ்ச மன்னனது சபையை அடைந்தான் சாதுக்களிடமுள்ள அன்பின் மிகுதியினாலும் அரசரது ஆணையினாலும் தடையின்றி அவர்கள் அரண்மனையில் புகுந்து ஜயதேவரது இருப்பிடம் அடைந்தார்கள் சாதுக்களைக் கண்ட ஜெயதேவர் பெருமகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று உபசரித்தார் அப்போது திருடர் திகைத்தனர் நம்மால் வெட்டப்பட்டவனே இங்கு வள்ளலாய் வாழ்கிறான் என்று எண்ணி மெல்ல எழுந்து நழுவத் தொடங்கினர்.

வணங்க வந்தவர்கள் செல்லத்தொடங்குவதைக் கண்ட ஜெயதேவர் வாருங்கள் வந்து உட்காருங்கள் என்று உபசரித்தார் ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்றபடி அவர்கள் தவியாய் தவித்தார்கள் அந்த சமயத்தில் அரசனும் வந்தான் அவர்களை வணங்கினான் அவர்கள் தவிப்பதை உணர்ந்தான் இதை மறைமுகமாக ஜயதேவருக்கு உணர்த்த முயன்றான் ஜெயதேவர் அதை அறிந்தும் பொருட்படுத்தாமல் அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் ஆடைகளையும் கொடுத்து அவர்களைத் தகுந்த காவலுடன் இருப்பிடம் கொண்டு சேர்க்க தன் வீரர்களுக்கு கட்டளை இட்டார் வீரர்கள் நகரத்தின் எல்லையை தாண்டி வனத்துள் புகுந்தார்கள் அப்பொழுது திருடர் தலைவன் எங்களை இங்கையே விட்டு விடலாம் என்றான் அதற்கு ஓர் வீரன் ஏன் ஸ்வாமி இந்த ஜயதேவஸ்வாமியை உங்களுக்கு முன்னமே தெரியுமா இவர் நீங்கள் ஓடி வர முயன்றதை தடுத்து நிறுத்தி உங்களுக்கு இவ்வளவு பொருட்களை அளித்திருக்கின்றாரே என்றான்.

அதற்கு அந்த கள்வர் தலைவன் ஆம் இவனை முன்னமே எங்களுக்குத் தெரியும் இவன் ஒரு பக்காத் திருடன் எங்கள் அரசரிடம் பெரிய ஞானி போல் நடித்து கடைசியில் ரத்தினங்களைத் திருடி விட்டான். அவர் இவனை வெட்டி எறியும்படி உத்தரவு செய்தார் நாங்கள் தான் கொல்ல மனம் வராமல் இவனை முடமாக்கி விட்டுவிட்டோம் எங்கே தான் திருடன் என்பதை நாங்கள் காட்டிக் குடுத்து விடுவோமோ என்று பயந்து எங்களுக்கு இவ்வளவு உபசாரம் செய்தான் என்றான்.

பரம பக்தராகிய ஜயதேவரை குறித்து அவன் இவ்வாறு சொல்லி வாயை முடும்முன் அகழ்வாரைத் தாங்கும் நிலம் பொறுமையில் பூமி தேவி என்றெல்லாம் உலகத்தார் போற்றும் பூமிதேவி தன் பொறுமையை இழந்தாள் தடாரென்று ஓர் பேரொளி கேட்டது அந்த பாதகர்கள் நின்ற இடம் பிளந்தது அவர்கள் அப்படியே அந்த படுகுழியில் விழுந்து மறைந்தார்கள் வழி விட வந்த வீரர்கள் திகைத்து நின்றார்கள்.

  • பகைவருக்கு அருள் செய்தது

ஜெயதேவர் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் வந்திருந்த திருடர்களை பற்றியே அவர் மனதுள் சுழன்று கொண்டிருந்தது காட்டிலே அவர்களுக்கு நேர்ந்த கதியை ஒரு சேவகன் வந்து தெரிவித்தான் அதைக்கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கினான் கிரவுஞ்ச மன்னன் அடடா நாம் கண்டு கொள்ளாதது போல் அனுப்பியும் அவர்களுக்குத் தீங்கு நேர்ந்து விட்டதே என்று மனங்கலங்கினார் ஜெயதேவர்.

அடடா அப்படியா நடந்தது அவர்கள் நம்மைத் தூஷித்ததனால் பூமிதேவி அவர்களுக்கு இடங்கொடுக்கவில்லை அவர்கள் உண்மையான சாதுக்களே நம் அதிதிகளாக வந்தவர்களிடம் எத்தனை குற்றங்குறைகள் இருந்தாலும் நமக்கு அவர்கள் அதிதிகளே அவர்கள் நம்மால் வணங்கி வழிப்படத்தக்கவர்களே அவர்களுக்கு அபசாரம் செய்து விட்டோமே என்று வாய்விட்டு அலறினார் பிறகு அரசனை நோக்கி அரசே அந்த பாதாள படுகுழியிலே அவர்கள் எவ்வாறு வீழ்ந்தார்களோ அவர்களை மீட்க முடியுமா என்பதையெனும் பார்ப்போம் என்று கூறி அவ்விடம் செல்லச் சித்தமாகும்படி அவனுக்குக் கட்டளை இட்டார்.

அரசனும் ஜயதேவரும் வீரர்கள் புடைசூழக் காட்டில் கள்வர்கள் மறைந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் அரசன் கள்வருக்கு நேர்ந்த கதியை எண்ணி மனம் வருந்தவில்லை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றே நினைத்தான் அனால் ஜயதேவரோ அவர் எவராயினும் நம்மை நாடி வந்த விருந்தினர் இறைவனுடைய அடியார்கள் அவர்களுக்கு இந்தக் கதி நேர்ந்ததற்கு நாமே காரணம் ஆகவே நாமும் இந்த படுகுழியிலே வீழ்ந்து மரிப்பதே இதற்கு பரிகாரம் என்றெண்ணித் தாமும் குழியில் குதிக்க முயலவே அரசன் நீர் விழுவதானால் நானும் உயிர் விடுவேன் என்று சபதம் செய்ய துயரம் தாளாத ஜயதேவர் மூர்ச்சித்துத் தடாலென்று கீழே விழுந்து விட்டார்.

கிரவுஞ்ச மன்னன் துடிதுடித்துப் போனான் இவர் இறந்து விட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது தனது இஷ்டதெய்வமான சிவபெருமானை நோக்கி இறைவா இதுவும் நீதியோ உன் அருளாட்சியிலே இப்படியும் நேரலாமா என்று புலம்பி சம்போ சங்கர மகாதேவா சிவ சாம்ப மகாதேவா என்று சிவநாமாவளிகளை நெஞ்சுருக அவன் வாய் இசைத்தது சிரம் தாழ்ந்து கரம் குவிந்தன கண்கள் பனிசோர மெய்மறந்து அவன் எவ்வளவு நேரம் துதித்தானோ தெரியாது.

அந்த வனத்திடையே ஒரு சோதிப்பிழம்பு தோன்றியது வெள்ளை வெளேறென்ற இடபத்தின் மீது கொண்டலும் மின்னலும் போல உமையாளோடும் தோன்றினார் சிவபெருமான் ஜடாமகுடத்திலே இளம் பிறை துலங்க இதழ்களிலே இள நகை அரும்ப தம் கரங்களை உயர்த்தி அன்பனே அஞ்சேல் அஞ்சேல் உன் உறுதிக்கு மெச்சினேன் உன் தவப்பயனே ஜயதேவரது நட்புச்செல்வம் உனக்கு கிடைத்தது அவர் இறந்து விடவில்லை அவர் செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் பல முன்வினையால் இந்த கொடுமை வந்தது கைகால்கள் முடமாயின ஆனால் விரைவிலே அவர் கைகால்களைப் பெறுவார் என்று சொல்லி ஜயதேவரது சிரத்திலே தமது திருக்கைகளை வைத்து ஜயதேவ கவியே எழுந்திரு என்று அழைக்க அவர் விழித்தெழுந்தார் எதிரே நின்ற மான் மழுகையரைக் கண்டவுடன் ஆஹா என்ன பாக்கியம் என்ன பாக்கியம் இன்றே உடல் பெற்றதன் பயனைப் பெற்றேன் ஆண்டவனே உனது பேரருள் இருந்தவாறு தான் என்ன அந்தத் திருடர்களால் அல்லவோ உன்னை தரிசிக்கும் பேறு கிடைத்தது சங்கரா சந்திரசேகரா சாம்பசிவா சதாசிவா உன்னையல்லாள் யார் எமைக் காப்பவர் என்று துதித்தார் அவர் துதிகளால் மகிழ்ந்த சிவபெருமான் ஜயதேவா உனக்கு என்ன வரம் வேண்டுமோ கூசாமல் கேள் என்றார்.

ஆனந்த மிகுதியினால் ஜயதேவர் மனம் பூரித்தது அவர் ஆண்டவனே இந்தக் கள்ளர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் அதுவே நான் வேண்டும் வரம் என்றார்.

ஜயதேவா உன் விருப்பம் நிறைவேறும் உன் பொருட்டு அப்பாபிகளையும் ஏற்கிறேன் என்றார் சிவபெருமான்.

ஜயதேவரது அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது மஹாப்ரபு அவர்களாலல்லவா எனக்கும் கிரவுஞ்ச மன்னனுக்கும் உன்னை நேரிலே காணும் மஹாபாக்யம் கிடைத்தது இத்தகைய பெரும் பேற்றை எங்களுக்கு அளித்த அவர்கள் பாவிகளாவது எப்படி என்று கூற சிவபெருமான் முகத்திலே இளநகை அரும்பியது.

கிரவுஞ்ச மன்னனுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை பேரின்பத்திலே மூழ்கித் திளைத்தான் அவன் இறைவரது தோற்றமும் அருள்மொழிகளும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தன இன்ப மிகுதியினால் அவன் உள்ளம் பொங்கிப் பொங்கி எழுந்தது இந்த நிலையிலே என்றென்றும் இருக்க விழைந்தது அவன் உள்ளம் ஆனந்தக் கண்ணீர் பெருக இறைவர் அருள் செய்ததை வியந்து வியந்து வாழ்த்தினான் ஜயதேவர் செய்ய வேண்டிய செயல்கள் உள்ளனவா அவர் மீண்டும் கைகால்களைப் பெறப்போகிறாரா என்பவைகளையெல்லாம் எண்ண எண்ண அவன் உள்ளம் பூரித்தது இந்த நிலையில் சிவபெருமான் எப்போது மறைந்தார் என்பதே அவனுக்குத் தெரியவில்லை அப்போது விண்ணகத்தினின்றும் ஒரு குரல் கிரவுஞ்சமன்னா நீ பாக்கியசாலி உனக்கு ஸ்ரீமந் நாராயணனது தரிசனமும் கிடைக்கும் என்று கேட்டது இன்பத்தால் நிறைந்த மனத்துடன் குருவும் சீடருமான அவ்விருவரும் நகரை நோக்கி புறப்படலாயினர்.

  • பதுமாவதியின் மறைவு

மன்னனது அந்தபுரத்திலே பதுமாவதி தேவியும் அரசியும் அவ்வப்போது சந்தித்து அளவளாவி மகிழ்ந்திருப்பதுண்டு அரசி குருவின் பத்தினி என்ற மரியாதையுடன் பதூமவதிதேவியைத் தனக்கு நல்லுரைகள் கூறவும் புராணங்களின் சாரங்களையெல்லாம் எடுத்துரைக்கவும் வேண்டும் என்று கேட்பதுண்டு.

ஒரு நாள் நடுப்பகல் அரசியும் பதுமாவதி தேவியும் கற்புக்கரசிகளான சீதை சாவித்திரி சந்திரமதி இவர்களுடைய சரிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது அரசி அவை அந்தந்த காலத்திற்கு ஏற்ப நடைப்பெற்றன பெண்கள் கணவனே தெய்வம் என்றும் அவனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பணிவிடை செய்தலே தங்கள் கடமை என்றும் நினைத்துத்தான் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர் தமயந்தியின் கற்புக்கனல் வேடனை எரித்தது இப்பொழுது யாராவது அப்படிச் செய்ய முடியுமா என்றாள்.

உடனே பதுமாவதி தேவி கற்புக்கரசிகள் எக்காலத்திலும் உண்டு என்றாள் அதற்கு அரசி அதோ தெரிகிறதே அந்த வீட்டின் தலைவி தன் கணவனோடு சககமனம் செய்து உயிர் விடுவேன் என்றாள் அவளைத் தடுத்து நிறுத்துவதற்குள் போறும் போறும் என்றாகிவிட்டது அப்படிப்பட்ட உத்தமிகள் கூட நீங்கள் சொல்லும் புராணப் பெண்மணிகள் போல எரிக்கும் திறன் பெறவில்லையே என்றாள்.

அப்பொழுது பதுமாவதி மிகவும் கனிவோடு அம்மணி நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தவறாகக் கருதி விட்டிர்கள் உத்தமமான மனைவி கணவன் இறந்தபின் சககமனம் செய்வானேன் கணவர் இறந்து விட்டார் என்ற சொற்கேட்டதும் தானாகவே அவள் உயிர் போய்விடும் இப்படிப்பட்டவர்களைத்தான் இருடலும் ஓருயிருமாய் வாழ்ந்தவர் என்பது என்றாள்.

அரசியின் முகம் கோபத்தால் சிவந்தது இவளுக்குத் தான் பெரிய பத்தினி என்ற கர்வம் அதனாலே தான் சொற்கேட்டவுடனே உயிர் போய் விட்டதா என்று பேசுகிறாள் உயிரென்ன நாம் விரும்பினால் விட்டு விடக்கூடிய அற்பவாஸ்துவா அழகுதான் மகா பதிவிரதையும் கடவுளையே மகனாக பெரும் பேற்றையுடைய கௌசல்யா தேவி தசரரோடு உயிரை விட்டு விட்டாளா குந்திதேவி போன்றவர்கள் உத்தமமானவர்கள் அல்லவா இவள் சொல்வது போலவே உத்தமமான மனைவி கணவன் படுந்துன்பத்தை தனதாகக் கருதுவானால் அவர் கைகால்களை இழந்து கிணற்றிலே கிடந்தாரே அது இவளுக்குத் தெரிய வந்ததா அப்பொழுது ஏன் இவள் உயிர் போகவில்லை என்று நினைத்தவளாய் அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

பிறகு தாதிகளை அழைத்து நீங்கள் ஒரு பட்சியைக் கொன்று அதன் ரத்தத்தை ஜயதேவரது உடைகளிலே தெளித்து கொண்டு வந்து அவரைக் காட்டிலே புலி அடித்து விட்டது என்று சொல்லுங்கள் என்றாள் உள்ளுரப் பயந்த தாதிகள் அரசியின் கட்டளையை ஏற்று அப்படியே செய்ய ஒப்புக் கொண்டார்கள்.

அரசி மீண்டும் பதுமவதிதேவியிடம் வந்து அம்மணி காட்டிற்குச் சென்ற அரசரையும் கவிஞரையும் புலி ஒன்று வந்து தாக்கியதாம் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று தெரிந்து வர ஒரு தோழியை அனுப்பியிருக்கிறேன் என்று மிகுந்த கவலையுடன் சொன்னாள்.

பதுமாவதியின் முகம் சுண்டியது என்ன புலியா என்று திகைத்தவளாய் கண்ணா நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று புலம்பும் சமயம் தாதிகள் ஓடோடி வந்து ஜயதேவரது உடைகளைக் காட்டி அம்மா கவிஞரைப் புலி கொன்று விட்டதாம் இப்படிப்பட்ட மகானுக்கு இந்த துர்மரணமா நேர வேண்டும் என்று புலம்பினார்கள்.

என்ன கவிஞரைப் புலியா கொன்றது இது உண்மைதானா என்று கேட்ட பதுமாவதியின் கண்கள் அப்படியே திகைத்தபடி நின்றன அவரைப் பிரிந்தும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்ற தீனமான குரல் அவள் வாயினின்று எழுந்தது அவ்வளவு தான் தடாலென்று அவளது உடல் பூமியிலே சாய்ந்தது மூச்சும் பேச்சும் நின்று போயின உயிர் உடலை விட்டு பறந்து போயிற்று.

அரசி அவளைத் தாங்க கைகளை நீட்டினாள் அனால் பதுமாவதியின் உயிரற்ற உடல் தான் அவள் மீது விழுந்தது ஐயோ கற்புக்கரசியின் பெருமையை அறியாமல் மோசம் போனேனே விளையாட்டு வினையாகி விட்டதே அரசர் வந்தால் என்ன சொல்லுவேன் என்று தவிக்கலானாள் அரசி.

அப்பொழுது அங்கே வந்த ஒரு பெரியவர் இப்பொழுது ஒரு சோதி இங்கிருந்து கிளம்பி வானை நோக்கிச் செல்வதைப் பார்த்தேன் அது பதுமவதிதான் என்றாலும் ஜயதேவர் வரப்பிரசாதம் பெற்ற கவிஞர் அவர் எழுந்திருக்க வேண்டும் என்று ஒரு கவிதை பாடினால் அவள் பிழைத்து விடுவாள் நீ வருந்திப் பயந்து உயிரை மாய்த்து கொள்ள நினைக்காதே அவர் வந்ததும் உள்ளதை உள்ளபடி சொல்லி விடு என்று சொன்னார் அரசியோ ஒரே கவலையிலே ஆழ்ந்தவளாய்ப் பதுமவதிதேவியின் மிருத சரீரத்தை ஓர் அறையிலே வைத்துப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யலானாள்.

  • அருள் செய்த அற்புதம்

அரசரது மனமும் கவிஞரது மனமும் ஆனந்தமிகுதியினால் நிறைந்திருந்தன சிவபெருமானது அற்புத காட்சியும் அவர் பேரருளும் கவிஞருடைய கண் முன்னே நர்த்தனம் செய்தன அரசனோ அதுமட்டுமின்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டதற்கு ஜயதேவர் திருடர்களுக்கு நற்கதியளிக்கவேண்டும் என்று கேட்ட பெருந்தகைமையை எண்ணி எண்ணி வியந்தான்.

இதற்குள் பதுமாவதியின் மரணச்செய்தியும் அரசியின் மதியீனமான செயலும் ஊர் முழுவதும் பரவி விடவே அரசன் வந்ததும் என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ என்று மக்கள் தவியாய் தவித்தார்கள் நாட்டை அடைந்த அரசன் வழக்கத்திற்கு மாறாக நாடு களையிழந்து காணப்படுவது கண்டு தேரை விட்டு இறங்கி என்ன என்று கேட்கச் சொன்னான் கேட்பவர்களுக்கு ஒருவரேனும் விடையளிக்கவில்லை.

அரசன் தானே நேரில் கேட்க அரண்மனை செல்லுங்கள் தெரியும் என்ற மறுமொழியே கிடைத்தது என்ன தான் நேர்ந்திருக்கும் மக்கள் இப்படி ஒன்றும் சொல்லாமல் திகைப்பதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தவனாய் அரண்மனை அடைந்தான் அரசியின் அலறல் அவன் செவியிலே விழுந்தது தோழிகள் ஒருவாறு செய்தியைச்சொல்ல அடடா இதென்ன பேதைமை தீராப்பழியையும் அந்தணரைக்கொன்ற பாபத்தையும் தேடி வைத்து விட்டாயே அடிப்பாவி நீயும் ஒரு பெண்ணா எனக்கதறி மூர்ச்சையாகிவிட்டான்.

ஜயதேவரோ அப்போதே விஷயம் விளங்கப்பெற்றவராய் ஆ பதுமாவதி நான் இறந்தேன் என்று கேட்டதும் உயிரைவிட்டாயோ பதுமாவதி சரண சாரண சக்ரவர்த்தி என்று என்னை பெருமிதத்துடன் பேசி கொண்டேனே ஏ பதுமாவதி என்னைப் பிரியும் காலமும் வந்ததோ என் பக்தி பயிருக்கு ஓர் வான்மழையாய் இருந்து வாழ்வித்த என் கண்மணியே போய்விட்டாயோ நீ இல்லாவிடில் பூவேது பூசனை தான் ஏது யமுனைத் துறைவனை நான் புகழ்ந்து பாடுவது தான் ஏது கண்ணன் கழலிணைகளையே எண்ணும் என் கண்ணின் கருமணியே என் இனிய ராதிகையே போதியோ போதியோ என்று அலறி விட்டார் என்ன தான் ப்ரஹ்மஞானி என்ற பெயர் பெற்றாலும் மனைவியின் பிரிவையும் பரிவையும் மறக்கமுடியுமோ பதுமாவதி என் இன்னுயிரே பதுமாவதி என் இல்லொலியே என்று புலம்பிப் புலம்பி கண்ணீர் சொரிந்தார் ஜயதேவர்.

இதற்குள் அரசன் மூர்ச்சை தெளிந்தான் அரசியின் மீது கோபம் பொங்கி எழுந்தது பாவி உன்னைக் கண்டதுண்டமாய் வெட்டினாலும் பாவமில்லை என்று கத்தியை உருவி அவள் மீது பாய்ந்தான் அரசன் அரசன் எழுந்ததும் ஓ ஜயதேவ ஸ்வாமி என்னைக் காப்பாற்றும் என்று அரசி கூறியதும் அரசன் கோபம் கண்டு ஜயதேவர் தடுக்கப் பாய்ந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன தாம் முடவர் என்பதையும் மறந்து ஜயதேவர் தடுக்க எழுந்த அந்த கணத்திலே தான் அற்புதம் நிகழ்ந்தது ஜயதேவரது கைகள் அரசனைத் தடுத்தன கால்கள் நடந்தன ஜயதேவர் அரசன் கைகளைப் பற்றித் தடுத்து நின்றார் அவரது மலரடிகளில் வீழ்ந்து கிடந்தாள் அரசி.

இந்த நிலையிலே ஜயதேவர் இவைகளிலே மனம் பதியாதவராய் கைகளால் அரசனைப் பற்றிய வண்ணம் ஜெகநாதா அன்று மீனமாகி உலகைக் காத்தாய் இன்று எங்களைக் காப்பது உனக்கு பாரமா என்று கேட்பது போலவே இறைவன் தசாவதாரங்களையும் முன்பு கீதகோவிந்த மஹாகாவியத்திலே துதித்தது போல மீண்டும் துதிக்கலானார் அரசரது மனம் சற்றே அமைதி அடைந்தது தன் கரங்களைத் தடுத்த அவர் பொற்கரங்களை விடுவித்து கொண்டு சிவபெருமான் அருள் பலித்து விட்டது கவிஞர் கைகளும் கால்களும் வந்து விட்டன இவரை இனி பதுமாவதி இருக்குமிடம் அழைத்து செல்வோம் என்றெண்ணி அவரை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல ஜயதேவர் அங்கே மீண்டும் துதிகளை பொழிய இறைவர் அங்கேயே ஓர் ப்ராஹ்மண வடிவந்தாங்கி வந்து நின்றார் கண்மூடி மௌனியராய் நின்ற ஜயதேவர் அந்தணர் வந்ததை அறியாமல் மனம் உருகிப் பாடிய வண்ணமே நின்றார்.

  • ஐயனே அந்தணனாய் வந்த விந்தை

ஜயதேவா உனக்கு என்ன வேண்டும் என்று அந்தணர் கேட்க கண்களைத் திறந்தார் ஜயதேவர் ஜெகந்நாதா உன்னையே நேரில் கண்ட பிறகு வேறு வரமும் வேண்டுமா உன் திருவடிகளை அடைவது தான் என் வாழ்க்கையின் லட்சியம் நீயே வந்து விட்டாயே வேறு என்ன வேண்டும் என்று பகவானது தாள்களில் வீழ்ந்து வணங்கினார் ஜயதேவர்.

இறைவர் அந்தணக்கோலம் மாறி சங்குசக்ர கதாபாணியாய் நீலமேகம் தவழும் நெடும்பொற்குன்றம் போல் நின்றார் அவர் முகத்தில் முறுவலுடன் ஜெயதேவா உன்னால் செய்ய கூடிய செயலுக்கு என்னை அழைப்பானேன் பதுமாவதியை உயிர் பெறச் செய்ய உன்னால் முடியாதா நான் செய்தேன் என்ற அகம்பாவம் வந்துவிடும் என்றல்லவா என்னை அழைத்தாய் என்று சொல்லி பதுமாவதி இன்னுமா தூக்கம் என்றார் பதுமாவதி உயிர் பெற்றெழுந்து நின்றாள் வணங்கினாள் தேவர்கள் பூமாரி பொழிந்தனர் இறைவர் மூவருக்கும் ஆசி கூறி ஜெயதேவா உன் கல்வியையெல்லாம் உன் அழகிய அனுபவங்களையெல்லாம் குடத்தில் விளக்காக வைக்காமல் குன்றின் மேலிட்ட விளக்கு போல் மக்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கு என்று சொல்லி மறைந்தார் ஜயதேவர் அனந்தத்தினால் மெய்மறந்தார் கண்ணனது பெருமையைப் பாடும் பாகவதப் புராணத்தைப் பாட வேண்டும் என்று நெடுநாளாய் எண்ணிக் கொண்டிருந்தார் இறைவர் இவ்வாறு கூறவே மீண்டும் அதையே செய்ய அவர் மனம் விழைந்தது.

  • ஜயதேவர் பாகவதம்

இறைவர் திருவிளையாடல்களையும் ப்ராஹ்மஞானத்தை பெறும் வகையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் ஸ்ரீமத்பகவாதம் அவதாரங்களிலே நிகழ்ந்த அற்புதங்களையெல்லாம் அதிலே காணலாம் பகவானது கட்டளைப்படி அந்தத் தெய்வத் திருநூலைப் பாமரரும் அறிந்து உய்யும் வண்ணம் ஜயதேவர் பாடிமுடித்தார் பின்பு அரசனிடம் சென்று இந்த பாகவதக் கதையை இசையோடு நல்ல முறையிலே விளக்கம் கூறிப் பிரசங்கம் செய்யக் கூடிய பெரியவர்கள் கிடைப்பார்களானால் சபையிலே வாசிக்கலாம் என்றார் ஜயதேவர்.

சபை நிறைந்திருந்தது வித்துவான்கள் கூடியிருந்தார்கள் பக்தி மிகுந்த தொண்டர் கூட்டத்திலே முதலாசிரியர்களையும் விஞ்சி விளக்கம் சொல்லும் உரை ஆசிரியர்களும் இருக்கலாம் என அரசன் நினைத்த சமயம் ஓர் அந்தணர் வந்து சேர்ந்தார் வந்தவர் அரசனை அணுகி அரசே நான் இருப்பது கோகுலம் நான் எல்லா சாஸ்திரங்களையும் கற்றிருக்கிறேன் ஊரூராகச் சென்று பல பண்டிதர்களுடன் விவாதித்திருக்கிறேன் இந்த சமஸ்தானத்திலே ஜயதேவர் என்று ஒருவர் இருப்பது தெரிந்து அவருடன் தர்க்கம் செய்யவே வந்தேன் என்றார்.

அவரது முகப்பொலிவைக் கண்ட ஜயதேவர் அவரை வணங்கி பெரியோரே ஜயதேவன் பண்டிதன் அல்லன் உங்களைப்போன்ற பெரியார்களுக்குத் தொண்டு செய்வது தான் அவன் வாழ்கை லட்சியம் அடியேன் தான் அந்த ஜயதேவன் என்று மிகுந்த பணிவுடன் சொன்னார்.

அந்தணரது புருவங்கள் சுருங்கின கண்கள் சிவந்தன நீ இப்படிப் பணிந்து பேசித்த்தான் உலகத்தை ஏமாற்றி வருகிறாய் உன் தந்திரம் என்னிடம் பலியாது உன் கையில் இருப்பது என்ன சுவடியா இங்கே கொடு பார்க்கலாம் உன் அறியாமையை எடுத்து காட்டுகிறேன் அதில் உள்ள குறைகளையெல்லாம் அம்பலமாக்குகிறேன் கொடு என்று கைகளை நீட்டினார்.

ஜயதேவர் மிகவும் தணிந்த குரலில் நான் சிறியவன் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியபடி கண்ணபிரான் திருவிளையாடல்களைப் பாடியிருக்கின்றேன் உங்களைப் போன்ற பெரியோர்களிடம் காண்பிக்கவே கொணர்ந்தேன் நீங்கள் பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

அதற்கு அவர் பாகவதத்தை நீ புதுப்பித்திருக்கிறாயா அழகு தான் அவ்வளவு தைரியம் உனக்கு வந்து விட்டதா சரி சரி நீயே அதை வைத்துக்கொள் பழைய பாகவத ஸ்லோகங்களை நான் சொல்லிக்கொண்டே வருகிறேன் அவற்றை நீ எழுதிய ஸ்லோகங்களுடன் ஒப்பிட்டுப் பார் நீயே உனது அறியாமையை உணர்ந்து கொள்வாய் என்று சொல்லி பாகவத ஸ்லோகங்களை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார்.

என்ன ஆச்சரியம் அவர் பாடியது பழைய பாகவதமன்று ஜயதேவர் எழுதியதையே அவர் சொல்லி வந்தார் அந்த அந்தணர் பாடிய ஸ்லோகங்களை சபையோர் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர் அங்கங்கே சுரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்தனர் இந்த அற்புதமான கதையை கேட்ட சிவபெருமானும் அங்கே தோன்றினார் கண்ணபிரானைத் துதித்திருக்கும் இனிமையிலே மூழ்கி தாமே மெய்மறந்து விட்டார் அந்த அந்தணர் அப்பொழுது வந்தது இறைவரே என்று கண்டுக்கொண்டார் ஜயதேவர் சிவபெருமான் ஏ ஜனார்தனா உன் மாயை யாருக்குத் தெரியும் உன் அருளை நாடி தவமிருக்கும் ஜயதேவனை ஆசிர்வதிப்பாய் என்றார்.

அதைச் செவியுற்ற பகவான் அப்பா ஜெயதேவா நீ பாடியவற்றை நானே அரங்கேற்ற வேண்டும் என்ற அவலிலே தான் பார்ப்பனர் கோலம் தரித்து வந்தேன் சுகமுனிவரது பாகவதம் முழுவதையும் படித்த பயனை உன் உன் பாகவத்தின் ஓர் அத்தியாயத்தைப் படித்தவர்கள் அடைவார்கள் என்ற வரமும் தந்தேன் என்றார். ஒரு புறம் சிவபெருமானும் ஒரு புறம் நாராயணனுமாகக் காட்சியளித்து மறைந்து போனார்கள் ஆனந்த மிகுதியினால் மலர்ந்த கண்களுடன் அவர்கள் நின்ற இடத்தையே நெடுநேரம் பார்த்திருந்தனர் அரசனும் ஜயதேவரும் சபையோர்களோ எதிர்பாராமல் தமக்கு கிடைத்த திவ்யதரிசனத்தால் மெய்மறந்தார்கள்.

ஜயதேவர் பாகவதத்தை பாடி முடித்த பின் புதியதோர் கவலை பிறந்தது. ஏற்கனவே தாம் பாடியுள்ள கீதகோவிந்தத்திலே தாம் ராதையின் திருவடிகளை இறைவன் முடி மீது வைக்கும்படி வேண்டியதாக ஸ்மரகரள கண்டனம் மமசிரசிமண்டனம் தேஹிபதப்பல்லவ முதாரம் சாருசீலே பிரியே சாருசீலே என்று எழுதிய அடிகளைப் பற்றிய கவலை தோன்றியது. இறைவரே எண்ணெய் கையேடு எழுதியும் அவர் சந்தேகம் தீரவில்லை அக்காலத்திலே காசியிலே பண்டிதர்களும் ப்ரஹ்மஞானிகளும் மிகுதி தாம் எழுதியதை மறைத்து வைத்துத் தமது கவிதைகளுக்கு ஆதாரம் தேட விரும்பினார் அவர் ஆகவே காசிக்குச் செல்ல விரும்ப அரசனும் உடன் வரக் காசியை அடைந்தனர் முறைப்படி விசுவநாத பெருமானை வணங்கி வழிபட்டனர்.

இரவு ஜயதேவர் நித்திரையில் சிவபெருமான் தோன்றி என் மீது ஐந்து அஷ்டகங்கள் பாடுவாயானால் உன் சந்தேகத்தை தெளிவிக்கிறேன் என்றார் விழுதெழுந்த ஜயதேவர் உடனே ஐந்து அஷ்டகங்களை பாடி முடித்தார் சற்று நேரத்திற்கெல்லாம் மாணவர் குழாம் புடைசூழ ஒரு முதியவர் இவர்கள் இருக்குமிடம் வருவது தெரிந்தது ஒரு மாணவன் உள்ளே வந்து எங்கள் குருநாதர் வருகின்றார் உலகில் எல்லாருடைய சந்தேகங்களையும் போக்குவதனால் சந்தேக நிவர்த்தி குடார பண்டிதர் என்று உலகம் அவரைப் புகழ்கிறது அவர் உங்களைக் காணவே வந்திருக்கிறார் என்றான்.

முறைப்படி வரவேற்றார் ஜயதேவர் குடார பண்டிதர் தாம் வந்ததோடு அல்லாமல் காசிவாசிகளான பண்டிதர்களனைவரையும் அழைத்து பண்டிதர்களே கேட்டீர்களா இந்த அதிசயத்தை வேதங்களின் முடிமீது இறைவன் திருவடிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் பேசுகின்றன ஆனால் இவன் தன் பாடலிலே இறைவனது திருமுடி மேல் இராதையின் திருவடிகள் இருப்பதாக எழுதியிருக்கிறான் இது நியாயமா என்றார்.

பண்டிதர்கள் முகத்திலே அருவருப்பு அபசாரம் அபசாரம் எந்த மூடனும் இப்படிப் பாட மாட்டான் என்றனர்.

ஜயதேவரது முகம் வெட்கத்தினால் குன்றியது தாம் மறைத்து வைத்த செய்தி எவ்வாறு அம்பலமாயிற்று என்பதை அறியாதவராய்த் திணறலானார் அவர் உடனே குடார பண்டிதர் மிகவும் ஏளனமாக குரலில் ஜெயதேவா மறதியினால் பாடி விட்டாயோ என்று கேட்டபின் பண்டிதர்களே இவன் இப்படியே ஊரை ஏமாற்றி வருகிறான் ஸ்ரீமத் பாகவததிற்கு எதிராக இவனும் ஒரு பாகவதம் பாடியிருக்கின்றானாம் இவனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் இவன் பாடல்களை முதலில் புனல் வாதம் செய்வோம் கங்கையின் பிரவாகத்திலே அவைகளை எறிவோம் ஏடெதிர்த்து வர வேண்டும் கங்காதேவியே தன் வாக்கினால் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்ல வேண்டும் அப்படியில்லாவிடில் அந்தப் பாகவதத்தையும் எடுத்துக் கங்கையிலே எரிந்து விடுவோம் என்றார்.

பண்டிதராய் வந்த சிவபெருமான் கீத கோவிந்தத்தை எடுத்து கங்கையை நோக்கி கங்காதேவி இவைகள் நல்ல கவிகளானால் என்னிடம் கொடு என்று வீசி எறிந்தார். ஒரு விநாடியிலே சுவடிக்கட்டுத் தண்ணீரிலே மூழ்கி மறைந்தது மறுவினாடி ஓர் அழகிய சிறு பெண் வெள்ளைச் சேலை ஈரத்தினால் உடம்போடு இசைய பாதரசங்கள் குலுங்கக் கையில் சுவடியுடன் இவர்கள் நின்ற இடைத்தருகே கரை ஏறினாள். பண்டிதரே குடார பண்டிதரே இவைகளுள் ஒரு குற்றமும் இல்லையே என்று சொல்லி அவரிடம் ஏட்டை அளித்தாள் அந்தச்சிறுமி பண்டிதர் அப்பொழுதும் தணியவில்லை கங்காதேவி நீ சிவபெருமானின் முடி மீதே எப்போதும் இருக்கிறாய் ஆகவே உன் திருவடி முடி மீது படுவது குற்றமாக நீ கருதவில்லை ஆனால் ராதையை பற்றி இப்படிப் பாடுவது தவறுதான் என்று சொல்லி, அவள் அளித்த ஈரச்சுவடிகளை மீண்டும் எறிய மூன் வந்தார் சந்தேகக் குடாரபண்டிதர் ஐயா நில்லும் நில்லும் என்ற ஒலியுடன் எங்கிருந்தோ ஓடி வந்தான். கண்ணன் வைஜயந்தியும் வனமாலையும் அசையத் தன் இருக்கரங்களையும் நீட்டி அவர் கைசுவடியைப் பற்றிக்கொண்டான் பண்டிதரை ஏறிட்டு நோக்கினார்கள் ஜயதேவரும் மற்றவர்களும் ஆனால் அவர்கள் கண்டதென்ன?

ஸ்ரீ விசாலாக்ஷி தேவியோடு விசுவநாதரும் ராதாஸமேத கிருஷ்ணனும் முகத்தில் முறுவல் தவழ அங்கே நின்றனர் ஜெயதேவா உன் பாடல்களைப் பாடும் அடியார் குழாம் எல்லாப் பெருஞ்செல்வமும் பெறட்டும் என்ற ஆசிமொழி அந்த நதிதீரத்திலே ஒலித்தது.

இதன்பின் கிரவுஞ்ச மன்னனும் ஜயதேவரும் காசியிலிருந்து புறப்பட்டுப் பாரத நாடு முழுமையுமுள்ள பல தலங்களையும் தரிசித்து அங்கங்கே உபதேசங்களும் செய்து வாரணாசியை வந்தடைத்தனர் பின்பு ஜயதேவஸ்வாமி அரசனுக்குரிய நல்லறங்களையெல்லாம் கிரவுஞ்ச மன்னனுக்கு உபதேசம் செய்ததோடு மற்றுமுள்ள மக்களுக்கும் வையத்துள் வாழ் வாங்கு வாழ்வது என்பது என்ன மனிதனது லட்சியம் எது பிறவிப் பெரும் பயம் என்பது எதைக் குறிக்கிறோம் என்பவைகளையெல்லாம் தெளிவாக விளக்கினார். மேலும் பிரமம் என்று பெரியோர் எந்த மெய்ப்பொருளைக் குறிக்கின்றனர் பிரமத்தை அறிந்தவன் பிராமணன் என்ற சொல் எப்படி எழுந்தது என்று பெரியோர்கள் எடுத்துரைத்த தத்துவங்கள் இன்ன என்றும் இறைவனை அடையும் வழிகளாகிய ஒன்பது வகையான வழிகளில் தாஸ்யம் பாதசேவனம் ஸக்யம் ஆத்மநிவேதனம் என்பவைகளே இக்கலியிலே சுலபமாகச் செல்ல கூடிய வழிகள் என்றும் உபதேசித்தருளி, மக்களை உய்வித்தார் இப்படி வாரணாசி என்ற காசிநகரிலே இறைவனது திருபுகழினைப் பாடியருளினார் இப்படியே ஒரு சுபதினத்திலே ஸ்ரீகீத கோவிந்தத்தைப் பாடியபடியே தம்பதிகள் இருவரும் கண்ணபிரானது அருளோடு பூத உடலைவிடுத்தனர்.

ஜயதேவர் மறைந்து விட்டார். ஆனால் நம் எண்ணங்களிலும் ஏடுகளிலும் என்றென்றும் வாழ்கிறார் அவர் அவர் அமரராகி இன்றும் நம்மை நல்வழிப்படுத்துகிறார்.

***ஜெய் ஜெய் ஜயதேவ நமோஸ்துதே***

எழுதியவர்: ரா. ஹரி ஷங்கர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • August 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]
  • August 3, 2024
வெங்கடேஸ்வர சுவாமியின் தாடையில் கற்பூரம் பூசுவது ஏன்?
  • July 29, 2024
ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் சாராம்சம்