×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன?


What is Ashtabandhanam, Kumbabishekam in Tamil?

அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன?

🙏 கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன.

🙏 கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, அஷ்ட பந்தன மருந்து சாத்துவார்கள். இந்த அஷ்டபந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

🙏 கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும். அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்ய வேண்டும்.

🙏 உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

🙏 அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது:

கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு
தம்பழுதுநீக்கி எருமைவெண் ணெய்கட்டி
நன்கிடித்துஆக்கல் அட்டபந்தனம் ஆம்

🙏 தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தன மருந்தில் என்னென்ன சேர்ப்பார்கள்?

🙏 இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

🙏 இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

🙏 இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

🙏 இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?