×
Monday 14th of October 2024

Nuga Best Products Wholesale

ஐயப்பன் விரதம் இருந்து சபரிமலை செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்


Read Sabarimala Fasting Rules in English

Ayyappan Viratham Irupathu Eppadi?

🛕 பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது.

🛕 இதன்போது நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

🛕 துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும்.

🛕 மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.

🛕 ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

Ayyappa Vratham Rules in Tamil

🛕 நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும்.

🛕 தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

🛕 காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்.

🛕 தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

🛕 களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதை யூட்டும் பொருட் கள், புகைப் பிடித்தல் தவிர்க்க வேண்டும்.

🛕 படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

🛕 பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

🛕 மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது “சாமி சரணம்‘’ என்று தொடங்கி பின் விடைபெறும் போது “சாமி சரணம்‘’ எனச் சொல்ல வேண்டும்.

🛕 விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

🛕 பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைபுறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளைக் “கொச்சி” என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

🛕 சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம்” என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது.

🛕 எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

🛕 மாலையணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது.

🛕 சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

lord ayyappan

🛕 பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

🛕 யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் “கன்னி பூஜை” நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

🛕 முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் “கன்னி ஐயப்பன்” என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை “பழமக்காரர்கள்” என்றும் அழைக்கப்படுவார்கள்.

🛕 இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்துவிட்டு “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

🛕 கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட திகதியிலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும்வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

🛕 யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் விளித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

🛕 இரவு நேரங்களில் காட்டிற்குள் மலசலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும். பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும்.

🛕 பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்தடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

🛕 ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும்.

🛕 ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல் நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.

🌸 சுவாமியே சரணம் ஐயப்பா 🌸

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி