- August 20, 2024
உள்ளடக்கம்
வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை 6 வயது முதல் 60 வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை 8 வயதிலிருந்து 80 வயதுவரை என்றும் சிலர் கூறுவர்.
“கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, காயத்திரியைவிட உயர்ந்த மந்திரமில்லை, ஏகாதசியைவிடச் சிறந்த விரதமுமில்லை” என்று வைஷ்ணவ புராணங்கள் உரைக்கின்றன.
ஏகாதசி விரதத்தைப் பற்றி பவிஷ்யோத்தர புராணத்திலும், பத்மபுராணத்திலும் விபரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பட்சத்துக்கு ஒவ்வொரு ஏகாதசியாக, அதாவது அமாவாசைக்குப் பின்வரும் பதினோராம் நாள், பௌர்ணமிக்குப் பின்வரும் பதினோராம் நாள் என இரு ஏகாதசிகள் ஒரு மாதத்தில் வரும். இதைவிட மேலதிகமாக வருகின்ற ஒரு ஏகாதசியையும் சேர்த்து ஒரு வருடத்தில் இருபத்தைந்து ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
மேலதிக ஏகாதசி வரும் மாதம் புருஷோத்தம மாதம் எனப்படும்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே இவற்றுள் விசேஷமானது. இதனால் இது மோஷ ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, பெரிய ஏகாதசி என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றது. ஏகாத்சி விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் இந்த வைகுண்ட ஏகாதசியில்தான் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றார். இம்மாதம் மஹா விஷ்ணுவிற்குப் பிரீதியானது. மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் மிக விசேஷமான தினங்களாகும். வைஷ்ணவத் தலங்களில் அடியார்கள் கூடி விசேஷ வழிபாடுகளை நிகழ்த்துவர்.
ஏகாதசி உற்பத்தியாகியது மார்கழி மாதத் தேய்பிறை ஏகாதசியில்தான். இதனால்தான் அதனை உற்பத்தி ஏகாதசி என்கிறார்கள். ஆனால், வளர்பிறை ஏகாதசியின் சிறப்பினால் அதையே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பிப்பதுடன் விரத ஆரம்பத்திற்கும் கொள்கின்றனர். இந்த விபரங்கள் பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஏகாதசி விரத நாளில் தசமி திதியின் சம்பந்தம் இருக்கக்கூடாது. காலையில் தசமியிருந்தால் மாறுநாள் துவாதசியில் விரதமிருந்து திரயோதசியில் பாரணை செய்யலாம். காலையில் ஏகாதசியும் நடுவில் துவாதசியும், இறுதியில் திரயோதசியும் இருப்பின் அது அதிவிசேஷமானது. இவ்வாறு ஏகாதசி தினத்தன்று காலையில் தசமியிருந்தால் அத்தினத்தை ஸ்மார்த்த ஏகாதசி எனவும் மறுநாளை வைஷ்ணவ ஏகாதசி எனவும் கூறுவர். ஏகாதசி விரதமனுஷ்டிப்போர் இவ்விருநாளில் வைஷ்ணவ ஏகாதசியையே கொள்ள வேண்டும். பிதிர்காரியம் முதலிய வேறு தேவைகளுக்கு ஸ்மார்த்த ஏகாதசியைக் கொள்ளலாம்.
ஏகாதசி விரதம் கிருஷ்ணபரமாத்மாவினால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையுடையது. ஆயுள் விருத்தியையும், அரோக்கியத்தையும், போக மோஷங்களையும் தருவது இவ்விரதம். இதனை அனுஷ்டிப்போர் நோய், வறுமை முதலியன நீங்கி வீரமும், கல்வியும், செல்வமும் பெற்று இகபரசுகமடைவர்.
முரன் என்ற அசுரன், தான் பெற்ற வரபலங்களினால் யாராலும் வெல்லப்படாமல் ஆணவத்தில் திரிந்தான். இவனால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கமுடியாமல் யாவரும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து அவரது அபூர்வ சக்தியானது பெண்ணுருவில் வெளிப்பட்டு வந்து அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தது. தேவர்கள் யாவரும் அந்த சக்தியை வழிபட்டு நின்றனர்.
தன்னை ஏகாதசி தேவியென்று அறிமுகம் செய்த அந்தச் சக்தி, தன்னை நினைத்து தனது திதியாகிய ஏகாதசியில் விரதமிருந்தால் எல்லா நலங்களும் கிடைக்கும் எனக் கூறி மறைந்தாள்.
கைடப தேசத்தில் கர்ணீக நகரில் முன்பொரு சமயம் வறுமையால் வருந்திய ஒரு பிராமணத் தம்பதியருக்கு நாரதர் இந்த விரதத்தை உபதேசித்தார். அவர்களும் இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து சகல செல்வமும் பெற்று வாழ்ந்து முக்தியடைந்தனர். அதன்பின் இது பூமியில் நல்லோர் பலரால் அனுஷ்டித்து வரப்படுகின்றது. ருக்மாங்கதன், அம்பரீஷன் முதலியோரும் இவ்விரதம் இருந்து பலனடைந்தவர்களாவர்.
முன்னரே குறிப்பிட்டபடி மார்கழி மாதத்து வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரத நாளுக்கு முதல் நாளிலேயே ஒரு நேர உணவும், இந்திரிய நிக்ரகமும்(குடும்ப உறவு நீக்கம்) கடைப்பிடிக்க வேண்டும். (பொதுவாக உபவாச விரதங்கள் யாவற்றுக்கும் இவ்விதி பொருந்தும்). ஏகாதசியன்று முழுப்பட்டினியாக உபவாசமிருந்து இரவு முழுதும் நித்திரை விழிக்க வேண்டும். பாகவத புராணங்கள்ப் படித்தலும் கேட்டலும், பகவானின் நாமஜெபம், நாமபஜனை இவற்றில் ஈடுபடுவதும் இத்தினம் முழுவதும் செய்ய வேண்டிய காரியங்களாகும்.
வீட்டிலே பூஜை வழிபாடு செய்ய விரும்புவோர் முறைப்படி தானியங்களின் மேல் பத்மம் வரைந்து சந்தன பிம்பத்தில் பூமிதேவி நீளாதேவி சஹித மஹாவிஷ்ணுவை விரத சங்கல்பத்துடனும், பூர்வாங்க பூஜைகளுடனும் ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே எடுத்துவைக்க வேண்டும். ஏகாதசி நாளில் பறித்தல் ஆகாது. அவசியமேற்படின் இரண்டு இலைகளும், கதிருமாக எடுக்கலாம்.(விதிவிலக்கு)
மறுநாட் காலை 8.30 மணிக்கு முன் பாரணை செய்தல் முறை. பாரணையின் போது துளசியிலை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.
ஏகாதசியன்று தாம் உபவாசமிருத்தல் வேண்டும் என்பதோடு வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு விருந்தளித்தல் தவிர்க்கப்படுவதும் வேண்டும். பலர் ஏகாதசி நாளில் வீட்டில் சமையல் செய்வதேயில்லை.
இவ்விரதம் ஒரு வருடகாலம் கைக்கொள்ளப்பட வேண்டும். வருட முடிவில் விரதோத்யாபனம் செய்ய வேண்டும். தொடர்ந்து விரதமனுஷ்டிக்க விரும்புவோர் ஒவ்வொரு வருட முடிவிலும் விரத பூர்த்தி செய்வது நன்று. ஒருவருடத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிகளை மட்டும் அனுஷ்டிக்கும் வழக்கமும் உண்டு.
Also, read