Glory of Vellikizhamai Viratham
உள்ளடக்கம்
வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை
வெள்ளிக்கிழமை விரதம் ஆரம்பமானது எப்படி?
ஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி! மனிதர்கள் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?’ என்று கேட்டாள். லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு:
‘தேவி! ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் ஒருவருடைய வாழ்வில் ஏற்றத் தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப்படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’ என்று கூறினார்.
இதையடுத்து லட்சுமி தேவி பூலோகம் புறப்பட்டுச் சென்றாள். முதலில் ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
அந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
How to do Vellikizhamai Viratham (Friday Fasting)?
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?
வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா?
வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு.
எனவே இந்த விரதத்தை அனுஷ்டித்து லட்சுமிதேவியின் அருளைப்பெற்று மகிழ்வுடன் வாழுங்கள்.
Also, Read
- Benefits of Offering Flowers to God
- How to Worship God?
- Pradosha Valipadu in Tamil
- Benefits of Marrying in the Temple in Tamil
- Pradosham Benefits in Tamil
- Abhishekam Items and Benefits in Tamil
- Kamatchi Vilakku Vaikkum Murai
- Vinayagar Chathurthi Viratham in Tamil
- Vellikizhamai Viratham in Tamil
- Ekadasi Fasting in Tamil
- Somavara Vratham in Tamil
Leave a Reply